(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

நூன்மரபு

32.

ஆ, ஏ, ஒ அம்மூன்றும் வினா.

 

ஆ, ஏ, ஓ என்பன மூன்றும் வினாப்பொருளில் வருங்கால் வினா வெழுத்துகள் எனப் பெயர் பெறும்.

 

காட்டு : வந்தானா

வந்தானே

வந்தானோ

வந்தானே என்பது வினாப்பொருளில் இப்பொழுது வழக்கில் இன்று.

 

33.

அன்புஇறந்து  உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்

உளவென  மொழிப இசையொடு சிவணிய

நரம்பின் மறைய என்மனார் புலவர்.

 

  உயிர் எழுத்துகள் தமக்குரிய அளபினை (மாத்திரையை)க் கடந்து ஒலித்தலும், ஒற்றெழுத்துகள் தமக்குரிய அரை மாத்திரையைக் கடந்து  ஒலிநீட்டி ஒலித்தலும் உண்டு. எங்கே உண்டுஎனின் இசையொடு பொருந்திய பாட்டுகளில் என்க. இவ்வாறு பாட்டில் நீண்டு ஒலிக்கும் முறைபற்றி இசை நூலில் விளக்கமாகக் காணலாம் எனப்புலவர் கூறுவர். தொல்காப்பியர் காலத்தில் இசைநூல், ‘நரம்பின்மறை’ என அழைக்கப்பட்டுள்ளது. நரம்பினைக் கொண்டு இசைக்கருவிகள் அமைக்கப்பட்டமையால், ‘நரம்பு’ என்பது ஆகுபெயரால் இசைக்கருவியையும், இசைநூலையும் குறித்துள்ளது. நரம்பால் ஆக்கப்பட்ட இசைக்கருவிகள் இசையமைப்புக்கு அடிப்படையாய் இருந்துள்ளன.

 

குறிப்பிட்ட ஒரு துறைக்குரிய விளக்கங்களைக் கொண்டுள்ள நூல் ‘மறை’ என அழைக்கப்பட்டுள்ளது. அத் துறைப் பயிற்சியுடையார்க்கு அன்றி ஏனையோர்க்கு விளங்காத மறைபொருளாய் இருந்தமையின் ‘மறை’ எனப்பட்டதுபோலும்.

 

(‘நூன்மரபு’ முடிந்தது)

 

2.  மொழிமரபு

 

  சொற்களிடையே பயின்றுவருங்கால் எழுத்துகள்பெறும் மரபினை விளக்குதலால் இவ்வியல் மொழி(சொல்)மரபு எனும் பெயரினைப் பெற்றுள்ளது என்பர்.

 

“இதனுள் கூறுகின்றது தனிநின்ற எழுத்திற்கு அன்றி மொழியிடை நின்ற எழுத்திற்கு என உணர்க” என்று இளம்பூரணர் கூறியுள்ளார்.

 

 ஆகவே, இவ்வியலுள், சார்பெழுத்துகள் எனப்பட்ட குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆயுதம் சொற்களிற் பயின்றுவரும் முறைபற்றியும், அளபெடை பற்றியும் எழுத்துகள் தொடர்ந்து மொழியாகும் முறைபற்றியும், சொற்களில் எழுத்துகள் தொடர்ந்து நின்று  இயங்கும் இயல்புபற்றியும் போலி எழுத்துகள்  தோன்றும் முறைபற்றியும் சொற்களுக்கு  முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்துகள்பற்றியும் தெளிவுற அறியலாம்.

 

34.

குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்

யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக்கு

ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே.

 

  உரையசைக்கிளவிக்கு = ‘மியா’ என்னும் உரையிடத்துப் பயன்படும் அசைச்சொல்லில், யா என் சினைமிசை = ‘     ‘யா’ என்னும் உறுப்பு எழுத்துக்கு மேல்(முன்), ஆவயின் வரூஉம் = அவ்விடத்தில் வருகின்ற, மகரம்ஊர்ந்து = மகரமெய்மீது ஏறி, குற்றியலிகரம் நிற்றல் வேண்டும் = குற்றியலிகரமானது நிற்றலுக்கு உரியதாகும்.

 

‘மியா’ என்னும் அசைச்சொல், கேண்மியா(கேளுங்கள்), சென்மியா(செல்லுங்கள்) என்பன போன்ற சொற்களில் பயின்றுவரும். இம் ‘மியா’ என்பதின்கண்உள்ள ‘இ’ தனக்குள்ள ஒரு மாத்திரையில் குறுகி அரை மாத்திரையாய் ஒலிக்கும். ஆகவே இந்த ‘இகரம்’ குற்றியலிகரம் எனப்பட்டது.

 

35.

புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே

உணரக்கூறின் முன்னர்த் தோன்றும்.

 

  ‘இகரம்’, புணரியல் நிலையிடை = சொற்கள் ஒன்றோடொன்று சேருமிடத்து, குறுகலும் உரித்தே = தனக்குரிய ஒரு மாத்திரையில் குறைந்து ஒலித்தலும் பெற்றுள்ளது.

(‘மியா’ எனும் அசையில் ‘இகரம்’ குறைந்து ஒலித்தலுடன், இரண்டு சொற்கள் சேருங்காலும் குறைந்து ஒலிக்கும்)

 உணரக் கூறின் =  அறியுமாறுகூறப்புகின், முன்னர்த்தோன்றும் =  இனிக் கூறப்போகின்ற புணரியலுள் விளங்கத் தோன்றும்.

குற்றியலுகரப் புணரியலுள் (நூற்பா 5)

“யகரம் வரும் வழி இகரம் குறுகும்

உகரக்கிளவி துவரத் தோன்றாது” எனக் கூறப்படுகின்றது.

குற்றியலுகரம்  சொல்லையடுத்து, ‘ய’ வை முதலாக உடைய சொல் வந்தால் குற்றியலுகரம் மறைந்து இகரம் தோன்றி ஒரு மாத்திரையில் குறைந்து ஒலிக்கும்.

விறகு +யாது = விறகியாது. இங்கு ‘உகரம்’ மறைந்து ‘இகரம்’ தோன்றிக் குறைந்து ஒலிப்பதைக் காண்க.

(தொடரும்)

15.04.0964