வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி

இணைந்து நடத்தும்

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்

பன்னாட்டுக் கருத்தரங்கம்

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 2/5

– இலக்குவனார் திருவள்ளுவன்

thiru2050@gmail.com

 www.akaramuthala.in

இலக்குவனார் திருவள்ளுவன்

படைப்புப்பணி

  படைப்புப்பணியில் குறிப்பிடத்தகுந்த சிறப்பை உடைய மொழிபெயர்ப்புப் படைப்புப்பணியும் அடங்கும். பேராசிரியரின் மொழிபெயர்ப்புப் பணி என்பதும் பள்ளிப் பருவத்திலேயே அரும்பி விட்டது. பள்ளி ஆண்டுமலரில் ஆங்கிலச் செய்யுள்களைத் தழுவி, “உலகம் நமதே! உயர்ந்தோர் நாமே!” என இவர் எழுதிய அகவல் வெளிவந்தது. இதுவே, இவரின் மொழிபெயர்ப்பு ஈடுபாடும் கவிதை ஈடுபாடும் படைப்புத் திறனும் பெருகத் தூண்டுகோலாய் அமைந்தது. புலவர்  இளநிலை மாணாக்கராய் இருக்கும் பொழுது ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் குறும்பாவியத்தை இயற்றி வெளியிட்டார்.

  கியாவன்னி பெக்காசியா[Giovanni Boccaccio (1313–1375)] என்னும் இத்தாலிய எழுத்தாளரின் புதினத் தொகுப்பில் உள்ள கதையின் அடிப்படையில் ஆங்கிலக்கவிஞர் கீட்சு[John Keats (1795–1821)],   ‘இசபெல்லா அல்லது துளசிப்பானை’(Isabella, or the Pot of Basil) என்னும் விளக்கமுறைப்பாடலை எழுதியிருந்தார்(1818). கீட்சின் 504  வரிக் கதைப்பாடலை  588 வரித் தனித்தமிழ்க் காவியமாக – பகுத்தறிவுச் சிந்தனையுடன் -பேராசிரியர் இலக்குவனார் புலவர் முதலாண்டு படிக்கும் பொழுதே அழகுற உருவாக்கியுள்ளார்.

  தமிழ்ச்சூழலில் புத்தாக்கமாகப் படைத்துள்ளார் என்பதற்கு  ஓர் எடுத்துக்காட்டு. பாவியத் தலைவியை அறிமுகப்படுத்தும் பொழுது,

“FAIR Isabel, poor simple Isabel!”

என அழகும் ஏழ்மையும் எளிமையும் கொண்ட இசபெல் என்கிறார் கீட்சு.

பேராசிரியரோ, காவியத்தலைவியின் பெயரை, அவ்வாறே கையாளாமல், தமிழில்  எழிலரசி எனச் சூட்டியுள்ளார். இவ்வாறு பெயரிலேயே கதைத்தலைவியின் அழகு வெளிப்பட்டு விடுகிறது. எத்தகைய எழிலரசி என்பதையும் பின்வருமாறு,

முற்றத் துறந்த முனிவரு மிவளை

                ஒருகால் நோக்கில் உணர்விழந் திடுவரால்,

                பிறர்தம் பான்மை பேசவும் வேண்டுமோ.

75.          வானில் விளங்கா மதியென முகமும்

                சேலினைப் பழிக்கும் சீர்கரு விழியும்

                புன்னகை தவழும் மென்செவ் விதழும்

                முத்தென முறுவலும் மின்னென உருவும்

                வேய்த்தோள் மீது மிடைந்து சுருண்ட

80.          கருங்குழல் தவழும் காட்சியும் மன்றிச்

                சாதுவை வென்ற சாந்த குணமும்

                அன்பும் அடக்கமும் அருளும் அறமும்

                ஒருங்கே கொண்டு ஓரு வாகி

                யாழினு மினிய இசையுங் கொண்ட

85.          எழிலின் அரசி . . . .

இவ்வாறு கதைத்தலைவியை அறிமுகப்படுத்துவதன் மூலம், அவளது அழகுடன்  பண்பையும் நமக்குக் காட்சிப்படுத்தி விடுகிறார்.

???????????????????????????????

 மேலும், கீட்சு ஏழை இசபெல்லா என்கிறார். அவ்வாறாயின் அவளுடைய தமையன்மார்களிடம் பணியாளர் இருப்பதாகக் காட்ட இயலாதே! எனவே, கதைக்குப் பொருத்தமாக,  ‘ வான்பெருஞ் செல்வமுடைய வணிகக் குடும்பம்’ என்கின்றார்.  இவ்வாறு கதைக்குப் பொருத்தமான மாற்றங்களை அமைத்துக் கொண்டு தமிழகச் சூழலிலும் தமிழர்க்கு வேண்டிய  தன்மதிப்பியக்கச் சூழலிலும் காவியத்தைப் படைத்துள்ளார். எனவே, ‘’மொழி பெயர்ப்பு என்பது மற்றுமொரு  புதிய படைப்பே ஆகும்’’ என்னும் கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மொழியாக்கமாக இல்லாமல், புத்தாக்கமாக எழிலரசியை அளித்துள்ளார்.

 “மொழிபெயர்ப்பாளர்கள் இலக்கியத்தின் நிழல் நாயகர்கள்” என்கிறார் பால் ஆசுடர்(Paul Auster). பேராசிரியர் இலக்குவனார், தாம் படிக்கும்பொழுதே நிழல் நாயகராகத் திகழ்ந்து தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார் எனலாம்.

   20 ஆம் நூற்றாண்டு  புகழ்மிகு தமிழ்ப்படைப்பாளர்கள் பலரைக் கண்டுள்ளது. ஆனால், தமிழ்ப்பண்பாட்டுச் சூழலில் தன்மதிப்பியக்க நெறியுடன் மாணவ நிலையில் தனித்தமிழ்க் காவியம் படைத்ததில் பேராசிரியர் இலக்குவனாரே முன்னோடிப் படைப்பாளராவார்.