அரசு மின் சேவை மையம் மூலம் பாடநூல்கள்!
அரசு மின் சேவை மையம் மூலம் பாடநூல்கள் பெறும் வசதி அறிமுகம்!
முதல் வகுப்பு முதல் மேனிலை இறுதி வகுப்பு (+2) வரையிலான பாடநூல்களுக்கு மாணவர்கள் அரசு மின் சேவை மையத்தில் பணம் செலுத்திப் பதிவு செய்தால், வீட்டுக்கே அவை அனுப்பி வைக்கப்படும் எனத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தத் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
“மாணவர்களுக்குத் தேவையான, முதல் வகுப்பு முதல் மேனிலை இறுதி வகுப்பு வரையிலான பாடநூல்களை இணையவழி மூலமாக (https://www.textbookcorp.in/) அரசு விற்று வருகிறது. மேலும், இணையவழியாகப் பணம் செலுத்த இயலாததால் பாடநூல்களைப் பெற முடியாத மாணவர்களுக்கும் எளிதில் பாடநூல்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், வட்டாட்சி அளவிலான அரசுப் பொது மின் சேவை மையம் மூலமாகவும் பணம் செலுத்திப் பாடநூல்கள் பெறத் தற்பொழுது வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பாடநூல்களின் விவரம், விலை ஆகியவற்றை அரசுப் பொது மின்சேவை மையத்திலேயே, பாடநூல் நிறுவன இணையத்தளம் மூலம் அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பாடநூல்கள் தேவைப்படும் மாணவர்கள் அருகில் உள்ள அரசுப் பொது மின்சேவை மையத்தை அணுகித் தேவையான பாடநூல்களைத் தேர்வு செய்து அதற்கான பணத்தைச் செலுத்திப் பதிவு செய்யலாம். அதற்கான முறிச்சீட்டும் (receipt) வழங்கப்படும்.
இதற்குக் கூடுதல் கட்டணங்கள் ஏதும் இல்லை. இவ்வாறு பதிவு செய்யும் மாணவர்களுக்குப் பாடநூல்கள் அவர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.”
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
படம்: விகாசுபீடியா.
செய்தி : இ.பு.ஞானப்பிரகாசன்
Leave a Reply