அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.3. வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல்
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.2. பிணியின்மை – தொடர்ச்சி)
அறிவியல் திருவள்ளுவம்
வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல்
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” (948)
இக்குறளிலுள்ள “நோய் நாடி” என்றது நோயை நாடிபிடித்து ஓர்ந்து பார்த்து “இன்ன நோய்” என்றறிவது. இஃது இக்கால மருத்துவ அறிவியலில் நோய் காணல் (Diagnosis) எனப்படுகிறது. நோய் முதல் நாடுவது, தமிழ் மருத்துவத்தில் நோய்க்குக் காரணம் “வளி முதலா எண்ணிய மூன்றில் எது” என்று நாடி கொண்டே காணுதல். இஃது இப்போது சிறுநீர், குருதி, மலம் முதலிய ஆய்வுகளாலும் கதிர்ப்படம். கதிர்வீச்சுப்படம் கதிவீச்சுவரி முதலிய படப்பதிவுகளாலும் அறியப்படுகிறது. “அது தணிக்கும் வாய் நாடுவது” முதலில் நோயைக் குறைக்கும் மருந்தைத் தேர்வது. இஃது இக்காலத்தில் மருந்துகளாக மாத்திரை, மேற்பூச்சு, ஊசி, அறுவை, கதிர்ப்பாய்ச்சல் முதலியவற்றில் ஒன்றையோ பலவற்றையோ ஆராய்ந்தறிந்து செய்வது. இதனைத் திருவள்ளுவர் “தணிக்கும்” என்னும் சொல்லால் குறித்தமை கருதத்தக்கது. ஐரோப்பிய மருத்துவத்தில் நோயை உடனே தடுக்கும் முனைப்பான மருந்துகளே வழங்கப்படும். தமிழ்முறையில் முதலில் நோயைக் குறைக்கும் – தணிக்கும் வழியறிந்து உடல் ஏற்கும் அளவான மருந்தை வழங்கும் முறையே கொள்ளப்படும். இஃதே பின் விளைவுகள் இல்லாமல் பையப் பையத் தணித்து முடிவாக நோய் தீர்ந்துபோகச் செய்யும்.
“வாய்ப்பச் செயல்” என்றது பொருந்திய மருந்து கொடுத்தல். இதிலும் நீரிய மருந்து, குழம்பு, அறுத்துச் சுடுதல், பற்று முதலிய கையாளப்பட்டன.
திருவள்ளுவர் அடுத்து மருந்து கொடுக்கும் முன் நோய் பெற்றவனின் உடல் நிலையளவு, நோயின் தாக்க அளவு, நோயின் கால அளவு, இவற்றைக் கருதிப் பார்த்துச் செய்தலைக் குறித்தார். இதனை “உற்றான் அளவும்: பிணியளவும், காலமும் கற்றான் கருதிச் செயல்” (949) என்னும் குறளில் அமைத்தார்.
புதுமை மருத்துவத்தில் நோயாளியின் உடல்’ மருந்தைத் தாங்கும் அல்லது ஏற்கும் நிலை பார்க்கப்படுகிறது. நோயின் கால அளவு உசாவி அறியப்படுகிறது . எடுத்துக்காட்டாகக் கண்பார்வை நோய் என்றால் அதிலும் ‘நீர் அழுத்த நோய்’ என்றால் நோயாளி நீரிழிவு நோய் உள்ளவரா என்று ஆராய்ந்தறிவர். உள்ளவர் என்றால் எத்துணை காலமாக இருக்கிறது(?) என்பதை உசாவி அறிவர். இந்தக் கால அளவுதான் கணக்கில் கொள்ளப்படும்.
அடுத்து,
“கற்றான் கருதிச் செயல்” என்றதில் ‘கற்றான்’ என்னும் சொல் திருவள்ளுவர் காலத்திலும் அதற்கு முன்பும் மருத்துவக் கல்வி இருந்ததையும் குறிக்கிறது. இக் காலத்தில் மருத்துவக் கல்வி கற்றுத் தேர்ந்து பட்டம் பெற்றவரையும் குறிப்பாகக் காட்டி நிற்கிறது.
நிறைவாக மருத்துவத்தைக் கையாளும்போது இடம் பெறும் நான்கை அடுத்துக் குறித்து முடித்தார். அதனை நான்காகக் குறித்தார்; நான்கு கூறாகக் குறித்தார்.
“உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான் என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து” (950)
திருவள்ளுவ மருத்துவத்தில் இவை நான்கும் நினைவில் நிற்பவை. உற்றவன் – நோய்பெற்ற நோயாளி; தீர்ப்பவன் நோயைத் தீர்க்கும் மருத்துவன்; மருந்து – நோய்க்கு உரிய தூள், நீறு, மாத்திரை, குழம்பு, களிம்பு, மூலிகை முதலியனவும், அறுத்துச் சுடுவதும் அடங்கும். நான்கையும் முறைப்படுத்தி அடுக்கினார்.
திருவள்ளுவத்துள் மருத்துவ நடைமுறை
இக்கால மருத்துவ நடைமுறையுடன் இவற்றைப் போருத்திப் பார்த்தால் ஒன்றி வருகின்றன.
நோயாளி எக்காலத்தும் நோயாளிதான். சில நோய் களின் புதுமைத் தோற்றம் இருக்கலாம். ஆனால் தீர்ப்பானாம் மருத்துவன் மாறியுள்ளான். இம்மருத்துவனைத் திருவள்ளுவர் “தீர்ப்பான்” என்று தனிப்பொருளுடன் குறித்தார். முன்னே “அது தணிக்கும் வாய்” என்று மருத்துவத் தொடக்கத்தில் தணிப்பதாகக் குறித்தார். தணித்தல்-நோயின் கடுமையைக் குறைத்தல். நோயைத் தணித்து நோயாளியை முதலில் தம் மருத்துவத்திற்குப் பாங்குபடுத்தல், பின்னர் தக்க மருந்தைத் கொடுத்துப் படிப்படியாக நோய் அறவே தீர்ந்து போகும் அளவு செய்தல். எனவே, ‘தீர்ப்பான்’ என்ற சொல்லால் மருத்துவத்தின் பொருள் அழுத்தம் புலனாகிறது. இவ்வாறு ‘தீர்ப்பவன்’தான் மருத்துவத்திற்கு உயிரூட்டமளிப்பவன் இதற்கு ‘மருத்துவன்’ என்னும் சொல் ஈடாகாது. மருத்துவன் என்பதற்கு, மருத்துவம் செய்பவன்’, ‘மருந்து கொடுப்பவன்’ எனத்தான் பொருள். இவன், மருந்தைத் தேர்பவன் தீர்ப்பவன்தான் மருந்தின் உயிரோட்டத்தால் நோயாளியின் உயிரோட்டத்தை இயக்குபவன்-இயங்க வைப்பவன். இவ்வழுத்தமுள்ள ‘தீர்ப்பான்’ என்னும் சொல் திருவள்ளுவரின் மருத்துவ ஆக்கச் சொல். இந்தச் சொல்லும் திருவள்ளுவரின் மருத்துவ அறிவியலைப் புலனாக்குகிறது.
அடுத்து ‘மருந்து’ என்றார். இஃது இயற்கை மூலிகையையும், நிலம்தரும் முப்பு’ என்னும் நீற்றையும்’ செயற்கைக் கலவை, புடம் போடுவது, வடித்தெடுப்பது’ அரைத்தெடுப்பது முதலியவற்றையும் குறிக்கும், இம் மருந்துதான் நோய் தீர்க்க இன்றியமையாதது. என்றாலும், மற்ற மூன்றும் அமைந்தால்தான் இம்மருந்து உரிய பயனை உரிய காலத்தில் தரும். எனவே, நான்கு கூறுகளில் ஒன்றாக மருந்தைக் குறித்தார்.
நான்காவதாக “உழைச் செல்வான்” குறிக்கப் பட்டான். இவன் நோயாளியின் அணுக்கன். உடனிருந்து உரிய நேரத்தில் உரியவற்றைச் செய்து துணை நிற்பவன். இக்காலத்தில் இதனை மகளிர் பெருமளவில் செய்கின்றனர். இன்னோர் ‘செவிலியர்’ எனப்படுகின்றனர். தமிழ் அகப் பொருள் இலக்கியங்களில் பெற்றெடுத்த தாய் ‘நற்றாய்’ எனப்படுவாள். அணுக்கமாக இருந்து போற்றி வளர்க்கும் தாய் ‘செவிலித்தாய்’ எனப்படுவாள். இச்செவிலித்தாய் போன்றவர் செவிலியர். மேலை மருத்துவத்தில் இச்செவிலியர் முறை முன்னரே இருப்பினும் அதனை முறை யாக்கி நிறைவாக்கிய பெருமை 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நைட்டிங்கேள் என்னும் பெருமகளையே சார்ந்தது. இவ்வம்மையால்தான் மருத்துவத்தில் செவிலித் தொண்டு முறைப்படுத்தப் பெற்றது.
இது திருவள்ளுவரால் கி. மு. முதல் நூற்றாண்டில் முறைப்படுத்திக் கூறப்பட்டுள்ளமை மருத்துவ அறிவியலின் அணுக்கத்தைக் காட்டுகிறது.
மருந்தில் தொடங்கி மருந்தில் நிறைவு
மருந்தை கூறத் துவங்கியவர் இதன் முதற் குறளாக “மிகினும் குறையினும் நோய் செய்யும்” என்று நோய்க்குக் காரணத்தைக் காட்டி அடுத்து, மருந்து பற்றித் தொடங்கினார்.
அதன் தொடக்கம் “மருந்து என வேண்டாவாம்’. என்றதைக் கண்டோம். ‘மருந்து’ என்னும் சொல்லுடன் தொடங்கினார். நிறைவான பத்தாவது குறளில், “அப்பால் நாற்கூற்றே மருந்து” என்று நிறைவேற்றினார். ‘மருந்து’ என்று தொடங்கி மருந்து என்று நிறை வேற்றியமை ஒரு சொல்லமைப்பு நயம் மட்டும் அன்று: இவ்வமைப்பில் உள்ள ஆழ்ந்த கருத்து வெளிப்படுத்தக்கது
முதலில் “மருந்து என வேண்டாவாம்” என்று மருந்து வேண்டாம் என்றார். நிறைவில்
“அப்பால் நாற்கூற்றே மருந்து” என்று மருந்து வேண்டுவதைக் குறித்தார். வேண்டா என்றவர் ‘வேண்டும்’ என்றது முரணா? அரணா? இரண்டில் எது என்று அறிய இக்கால அறிவியல் துறை ஒன்றைக் காண வேண்டும்.
உடலிய உளவியல்
அறிவியல் துறைகளில் ‘உளவியல்’ (Psychology) ஒன்று. இதன் ஒரு கூறாக ‘உடலிய உளவியல்’ (Physiological Psychology) உள்ளது. இஃது ‘உள்ளத்தின் உணர்விற்கும் உடலின் செயற்பாட்டிற்கும் உறவு உண்டு’ என்னும் கருத்தைக் கொண்டதாகும்.
உள்ளத்தில் தோன்றும் மகிழ்ச்சி உடலின் நலத்திற்குக் துணை செய்யும். உள்ளத்தில் தோன்றும் தொய்வோ கலக்கமோ, அதிர்ச்சியோ உடலின் தொய்விற்கும் தாக்கத்திற்கும் துணையாகும். இஃது ‘உடலிய’ உளவியலின் கோட்பாடு.
மருந்து-வேண்டாம்-வேண்டும்
இக்கோட்பாட்டின் முன்னோடி அறிகுறிதான் “மருந்து என வேண்டா” என்றதும் “நாற்கூற்றே மருந்து” என்றதும் ஆகும். “மருந்தென வேண்டா” என்றது உளவியல் அறிந்த பாங்கு மருந்துவேண்டும் என்றது உடலியலும் நோயியலும் செறிந்த செய்முறைக் கருத்து
(தொடரும்)
கோவை. இளஞ்சேரன், அறிவியல் திருவள்ளுவம்
Leave a Reply