kakkan_congress01

பேராயக்கட்சி ஆட்சியல் உள்துறை அமைச்சராக இருந்தும் எளிமையால் பெயர் பெற்றவர் கக்கன்.  இவர் போன்ற உழைப்பாளிகளையும் ஈகையரையும் பேராயக் கட்சி புறக்கணித்தது. அவர்கள் கருத்துகளை ஒதுக்கித் தள்ளியது. இதனால் பேராயக் கட்சியான காங்.கில் பலர் மனப்  புழுக்கத்தில் உள்ளனர்.  அவர்களில் ஒரு பகுதியினர்  கக்கன் பெயரில் தமிழ் மாநிலக் காங்கிரசு என்ற கட்சியைத் தொடங்க உள்ளனர். மதுரை மாவட்டத் துணைத்தலைவராகக் காங்.கில் இருந்த பெரியசாமி இதற்கான ஏற்பாடுகளை ஆற்றி வருகிறார்.

 

சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர்  செவ்வி அளித்தார். அப்போது அவர்  பின்வருமாறு கூறினார்.

தமிழகக் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். இலங்கையில் நமது ஈழ மக்கள் கொல்லப்படும்போது காங்கிரசுக் கட்சி அமைதியாக இருந்தது. அப்போது நான் அமைச்சர்களாக இருக்கும் வாசன், சிதம்பரம் போன்றவர்களிடம் இது தொடர்பாக ஒருநிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்று தொடர்ந்து பேசிவந்தேன். ஆனால் அவர்கள் ஈழ மக்கள் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர். அதேபோல் காங்கிரசுக் கட்சிக்குப் பாடுபட்டவரும் காங்கிரசு  ஈகையரும் ஊழல் அற்ற உயர்ந்த மனிதருமான கக்கனைத் தமிழகக்  காங்கிரசுக் கட்சியினர் மறந்துபோய்விட்டனர்.

இது பற்றியெல்லாம் பல முறை தமிழக காங்கிரசு தலைமையிடம் முறையிட்டும் பலன் கிடைக்காத காரணத்தால் தற்போது கக்கன் பெயரில், ”தமிழ் மாநிலக் கக்கன் காங்கிரசுஎன்னும் கட்சியைத் தொடங்குகிறோம். வரும் 23ஆம் நாள் மதுரையில் தமிழ் அன்னை சிலை முன்பு கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி இக்கட்சியின் கொள்கையை அறிவிப்போம். ஈழ மக்களுக்கு  இரண்டகம் செய்த காங்கிரசுக் கட்சியை எதிர்த்து தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொள்வோம்.

 

தமிழகத்தில் காங்கிரசு தனித்து நின்றால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறாது என்பது முற்றிலும் உண்மை. என்னைபோல் பல ஆண்டு காலம் காங்கிரசுக் கட்சிக்கு உழைத்து மனம்வெதும்பி உள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எங்கள் கட்சியில் இணைவதாகத் தெரிவித்துள்ளனர். கக்கன் பெயரில் கட்சி தொடங்கக் கூடாது என்று தற்போது காங்கிரசுக் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இவைபோன்ற மிரட்டல்களுக்கு  அஞ்சாமல் கக்கன் பெயரில் கட்சியைத் தொடர்ந்து நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்த்தேசிய உணர்வுடன் செயல்பட்டுத் தமிழ்நாட்டு மக்களுக்கும் உலகத் தமிழர் நலனுக்கும் பாடுபட ‘அகரமுதல’ இணைய இதழ் வாழ்த்துகிறது.

kakkan01