இராசபட்சவின் இராசதந்திரம்!
– தினமணி ஆசிரியர் (நவ.13.,2013)
1976இல் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்குப் பிறகு இலங்கையில் நடக்க இருக்கும் பெரிய பன்னாட்டு நிகழ்வு பொதுவளஆய மாநாடுதான். இந்த இடைவெளியில் அங்கே எந்தவொரு பன்னாட்டு நிகழ்வும் நடைபெறாமல் இருந்ததற்குக் காரணம், அங்கிருந்த அரசியல் சூழல். இப்போது, இப்படி ஒரு மாநாட்டைக் கூட்டி, இலங்கையில் எல்லாமே இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது என்று காட்ட முற்படுகிறது இராசபட்ச அரசு.
பொதுவளஆய மாநாடு வெற்றிகரமாக நடப்பது அதிபர்இராசபட்சவுக்கும், அவரது அரசுக்கும் ஒரு மதிப்பு நிலை. …. இலங்கையில் போர் நடந்த போது, பதவிநலத்திற்காக, இனப்படுகொலையை வேடிக்கை பார்த்தவர்கள்; அப்போதுஇராசபட்ச அரசுக்கு இராணுவவழியிலும், அரசதந்திர முறையிலும் உதவ முற்பட்டவர்கள்; கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்து கொண்டிருக்கும் சிங்களக் குடியேற்றத்தைப் பார்த்தும் பார்க்காமல் இருந்தவர்கள் பொதுவளஆய மாநாட்டில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றுதான். சீனாவுடனான இலங்கையின் நட்புறவு அதிகரித்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்று அச்சப்படுவோர், இனப்படுகொலை நடக்கும்போது எண்ணியிருக்க வேண்டும் அதை. கண் கெட்ட பிறகு சூரியவணக்கம் செய்கிறார்கள்…
இலங்கையில் நடந்த இனப் படுகொலையைப் பற்றிப் பேசாமல், .. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காணாமல் ஏதோ தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுபோல ஒரு நாடகத்தை அரங்கேற்றித், தலைமையாளர் மன்மோகன் சிங்கு அதிபர் இராசபட்சவிடம் மன்னிப்புக் கேட்காத குறையாக, தான் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாததற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். மாநாட்டில் இந்தியா கலந்து கொள்கிறது, ஆனால், தலைமையாளர் கலந்து கொள்ளவில்லை. புரிகிறதா சூட்சுமம்? இராசபட்சவின் இராசதந்திரம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது!
Leave a Reply