அட்டை-மலையருவி :attai_malaiaruvi

எதுகை மோனை தமிழ்மக்களுக்கு இயல்பாகவே கைவரப் பெற்றவை!

 நாடோடிப் பாடல்களுக்கென்று சிறப்பான சில இயல்புகள் உண்டு. குறிப்பிட்ட ஒரு பாடலை முதல் முதலில் யாரேனும் ஒருவர் இயற்றியிருக்கத்தான் வேண்டும். அவர் இலக்கியப்புலமை படைக்காவிட்டாலும் மற்ற பாமரர்களைப் போல் இல்லாமல் ஓரளவு சொல்வன்மை உடையவராகவே இருப்பார். கூலி வேலை செய்யும் பெண்கள் தம்மிடம் உள்ள இயற்கையான ஆற்றலால் அவ்வப்போது பாடல்களைப் பாடுவதும் உண்டு. இலங்கையில் மட்டக் களப்பு என்னும் பகுதியில் இன்றும் இவ்வாறு பாடல்கள் முளைக்கின்றன.1 எதுகை, மோனை, ஓசை என்னும் மூன்றும் தெரிந்தவர்கள் பாடல்களைப் பாடிவிடலாம்.

எதுகை மோனை

  எதுகை மோனை என்பவை தமிழ்நாட்டு மக்களுக்கு இயல்பாகவே கைவரப் பெற்றவை என்றே சொல்லவேண்டும். “மானங் கெட்டவளே – மரியாதை கெட்டவளே, ஈனங் கெட்டவளே – இடுப் பொடிந்தவளே” என்ற வசவில்கூட எதுகையும் மோனையும் இருக்கின்றன. அடிமுதலில் எதுகை வருவதென்பது தமிழுக்கே அமைந்த தனிச்சிறப்பு. பேச்சு வழக்கில் எத்தனையோ தொடர்கள் எதுகைச் சிறப்புடையனவாகப் புரளுகின்றன. அக்கிலி பிக்கிலி, அக்கம் பக்கம், அசட்டுப் பிசட்டு, அடிதடி, அமட்டல் குமட்டல், ஆசாரம் பாசாரம், ஏழை பாழை, கண்டதுண்டம், காமா சோமா என்பவைபோல உள்ளவற்றைக் காண்க. அப்படியே மோனை நயம் அமைந்த தொடர்களுக்கும் குறைவில்லை. அல் அசல், ஆடி அமாவாசை, கல்யாணம் கார்த்திகை, கொள்வினை கொடுப்பினை, பற்றுப் பாத்திரம், கோயில் குளம், தோப்புத் துரவு முதலியவற்றைக் காண்க. பேச்சு வழக்கில் தண்ணீர் பட்டபாடாக வழங்கும் எதுகை மோனைகள் பழமொழிகளில் சிறப்பாக அமைந்திருப்பது வியப்பன்று. ‘அக்கரைக்கு இக்கரை பச்சை’, ‘அகதியைப் பகுதி கேட்கிறதா?’, ‘அகம் ஏற சுகம் ஏறும்’, ‘ஒன்றைப் பெற்றாலும் கன்றைப் பெறு’, ‘குட்டையில் ஊறிய மட்டை’ என்பனபோல ஆயிரக்கணக்கான பழமொழிகளில் எதுகை அமைந்திருக்கிறது. அப்படியே, ‘சிங்கத்தின் காட்டைச் சிறுநரி வளைத்தாற்போல’ ‘சூலிக்குச் சுக்குமேல் ஆசை’, ‘தலை ஆட்டித் தம்பிரான்’, ‘தீயில் இட்ட நெய் திரும்புமா?’, ‘பெண்சாதி கால்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு’, ‘மனப்பால் குடித்து மாண்டவர் அநேகர்’ என்பன போன்றவற்றில் மோனை நயத்தைக் காணலாம்.

  1. நூலாசிரியர் குறிப்பிடுவது, அவர் காலத்து இலங்கையின் நிலைமையை. மற்றபடி, இன்று அங்கு தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே!

– சிலேடைப் புலி கி.வா.சகந்நாதன்: மலையருவி

கி.வா.சகந்நாதன் :Ki.Vaa.Ja_ki.vaa.sakanathan

 

 

தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_e.bhu.gnanaprakasan