(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 12/17 தொடர்ச்சி)

தனித்தமிழ்க் கிளர்ச்சி : 13/17

பெண்களே நாட்டிற்குப் பெருவிளக்காம் ஆதலின்நம்
பெண்களைத் தாழ்த்துவது பேதமையாம் அம்மானை
பெண்களைத் தாழ்த்துவது பேதமையாம் என்றக்கால்
பெண்புத்தி பின்புத்தி என்றதேன் அம்மானை
எனல்தவறு முன்னேற்றம் ஈயவேண்டும் அம்மானை       (61)

சீரிய பண்புடைய செந்தமிழ்ப் பெண்மக்கள்
கூரியநல் மதிநுட்பம் கொண்டவர்காண் அம்மானை
கூரியநல் மதிநுட்பம் கொண்டவர்கள் என்பதைநீ
நேரிய சான்றொன்றால் நிறுவிடுவாய் அம்மானை
சங்ககால ஒளவைமுதல் சான்றுபலர் அம்மானை       (62)

காய்கனிகள் வளமிக்க கவின்தமிழ்நாடு ஓங்கநம்
தாய்கட்கு வீரம் தழைக்கவேண்டும் அம்மானை
தாய்கட்கு வீரம் தழைக்கின் அவர்பெற்ற
சேய்கட்கும் வீரம் செழிக்குமன்றோ அம்மானை
புறநானூற் றாலதனைப் புரிந்திடலாம் அம்மானை       (63)

அன்று (தமிழ்ச் சங்கம்)


இளமைப் பொலிவுடைய இன்தமிழ் அக்காலம்
வளமதுரைச் சங்கத்தில் வளர்ந்ததுகாண் அம்மானை
வளமதுரைச் சங்கத்தில் வளர்ந்ததா மாகில்
வளர்த்தநல் தாயரைநீ வகுத்துரைப்பாய் அம்மானை
புலவரும் வேந்தருமே புகழ்தாயர் அம்மானை       (64)

இன்று


முற்காலத் தமிழாட்சி முற்றும் உணர்ந்துவரும்
தற்காலத் தமிழிளைஞர் தமிழ்வெறியர் அம்மானை
தற்காலத் தமிழிளைஞர் தமிழ்வெறிய ராமாயின்
பிற்காலம் தமிழ்த்தாயே பேரரசி யம்மானை
பேரரசி யோடவளே பெருந்தெய்வம் அம்மானை       (65)

– பேராசிரியர் சுந்தர சண்முகனார்

  (ஆக்கம்:  1948)

தொடரும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்புரை :-

61 – பெண்புத்தி பின்புத்தி என்று பிதற்றும் பேதமையை மறந்து, இனியேனும் பெண்களை முன்னேற்றவேண்டும்.
62 – சங்ககாலத்தில் வாழ்ந்த ஒளவையார், பொன் மொழியார் முதலிய சிறந்த பெண்புலவர்களே, பெண்களின் மதிநுட்பத்திற்குச் சான்றாவார்கள்.
63. ஒரு மறத்தாய் வயதிற் சிறிய ஒரே மகனைச் சண்டைக்கனுப்பி, அவன் மார்பில் புண்பட்டு இறந்ததைக் கண்டு மகிழ்ந்த வரலாறு புறநானூறு எனும் தமிழ் நூலில் காணக்கிடக்கின்றது. ஆதலின் தாய்க்கு வீரம் இருப்பின் சேய்க்கும் (பிள்ளைக்கும்) வீரம் இருக்கும்.

65 – தற்காலத் தமிழிளைஞர்கள் தமிழ்ப்பித்தராகத் திகழ்வதால், இனி தமிழ்த்தாயே தமிழ்நாட்டிற்கு அரசியும், தெய்வமும் ஆவாள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++

[இதழாசிரியர் குறிப்பு: தமிழ்த்தேசிய இலக்கை உடைய கட்சியினரும் அமைப்பினரும் இந்நூலைத் தங்கள் கொள்கை விளக்க நூலாக அறிவித்து நடைமுறைப்படுத்தலாம்.]