காவல்துறை அரசா? சுப.உதயகுமாரன் எச்சரிக்கை மணி

தோழர் தியாகு எழுதியமைக்கான கருத்தூட்டக் கட்டுரை

தமிழகக் காவல்துறைக்குள் ஒரு காவித்துறை இயங்கிக் கொண்டிருக்கிறதோ எனும் ஐயம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. குமரி மாவட்ட முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரைக் கடந்த ஆண்டு சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் எந்தவிதமான முகாந்திரமும் இன்றி, “உங்களுக்கு அனைவரையும் கிறித்தவராக்க வேண்டும், அப்படித்தானே?” என்று என்னிடம் கேட்டார். இந்த தவறான, தேவையற்ற, முறையற்ற கேள்வி என்னோடிருந்த தோழர்களையும், என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இப்போது  “கலவரம் நடந்தே தீரும்” என்று பொதுவெளியில் கூச்சமின்றிப் பொறுப்பின்றிப் பேசுகிறவர்கள் அரசியல் செய்யும் கன்னியாகுமரி மாவட்டத்தில், அப்படி ஒரு கலவரம் நடக்க அனுமதிக்கக் கூடாது என்கிற நோக்கத்தோடு, “மத நல்லிணக்கச் சந்திப்பு” எனும் ஒரு நிகழ்வை நாங்கள், குமரி மக்கள் நல்லிணக்கக் குழுவினர், ஒருங்கிணைத்தோம்.

நவம்பர் 18, 2022, வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணிக்கு புனித சவேரியார் கோவிலிலுக்கும், நண்பகல் 12 மணிக்கு அருள்மிகு நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவிலுக்கும், பிற்பகல் 1 மணிக்கு மாலிக்குத் தினார் பள்ளிவாசலுக்கும் சென்று, அங்கு குழுமியிருக்கும் மக்களுடன் கலந்துறவாடி, இந்த “மத நல்லிணக்க சந்திப்பை” நடத்தத் திட்டமிட்டோம்.

குறிப்பிட்ட மூன்று ஆலயங்களின் நிருவாகிகளைச் சந்தித்து அனுமதி வாங்கினோம்; அவர்களும் மிகுந்த ஆர்வத்தோடு ஒத்துழைக்க முன்வந்தனர். நாகர்கோவில் மாநகரத்தலைவர், திமுகவின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. இரெ. மகேசு ஆகியோர் எங்களோடு மூன்று வழிபாட்டுத்தலங்களுக்கும் வருவதற்கு இசைவு தெரிவித்தார். பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள். மும்மதங்களையும் சார்ந்த பொதுமக்கள் கலந்துகொள்வதற்கு மகிழ்ச்சியுடன் முன்வந்தனர்.

ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில் நவம்பர் 16, 2022 அன்று நாகர்கோவில் நகரக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் என்னை தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து, இந்த நிகழ்வை நடத்த இது உகந்த நேரமல்ல; எனவே மேற்படி நிகழ்வை அனுமதிக்க இயலாது என்று சொன்னார்.

நாங்கள் பொதுவெளியில் எதுவுமே செய்யத் திட்டமிடாத நிலையில், காவல்துறையின் அனுமதியை கோரவேண்டியத் தேவையே எழவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, மத நல்லிணக்கம் பற்றிப் பேச எல்லாமே உகந்த நேரம்தான்சனநாயக நாட்டில் மக்களுக்கு இந்த உரிமைகூட கிடையாதா என்றெல்லாம் வாதிட்டேன்.

அது அவரது தனிப்பட்ட முடிவல்ல என்பதை அவரது கண்ணியமான அணுகுமுறை தெளிவாகத் தெரிவித்தது. உடனே குமரி மக்கள் நல்லிணக்கக் குழுவினர் மாநகரத்தலைவரைச் சந்தித்து முறையிட்டோம். அவரும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் பேசி நிகழ்வை அனுமதியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

நவம்பர் 17, 2022 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்து, ஆட்சித்தலைவர் அலுவலகம் சென்றோம். அவர் இல்லாததால், கோட்டாட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற அதிகாரிகளை சந்தித்துப் பேசினோம்.

காவல்துறைக் கண்காணிப்பாளர் மாலை ஐந்து மணியளவில் தன்னுடைய அலுவலகத்துக்கு வருமாறு கேட்டுக் கொண்டதையடுத்து, அங்கே சென்றோம். ஆனால் பணி நிமித்தமாக மாவட்டத்தின் மேற்குப் பகுதிக்கு சென்றிருந்த அவரால் குறிப்பிட்ட நேரத்தில் வர இயலவில்லை. அவரிடம் நேரில் பேசிவிட்டு நிகழ்வை நடத்துவதா அல்லது நீக்குவதா என்கிற இறுதி முடிவை எடுக்கலாம் என்றிருந்தோம்.

ஆனால் இரவு 7:45 மணிக்குக் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் கைப்பேசியில் என்னை அழைத்து, “இந்த நிகழ்வை இப்போது நடத்த வேண்டா, மூன்று வாரங்கள் கழித்துப் பார்க்கலாம்” என்று சொன்னார். ஆனால் இரவு 9:36 மணிக்கு மாநகரத்தலைவர் அவர்களின் உதவியாளர் என்னைக் கைப்பேசியில் அழைத்து, மாநகரத்தலைவர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேசியிருக்கிறார். காலையில் முடிவு சொல்வார்கள் என்று தெரிவித்தார்.

பிறகு இரவு 9:30 மணியளவில் நாகர்கோவில் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் என்னை அழைத்து “நிகழ்வுக்கு அனுமதியில்லை, கடிதம் அனுப்புகிறேன்” என்று தெரிவித்தார். நள்ளிரவு 12:40 மணிக்கு வீட்டுக்கு வந்த காவலர்கள் தூங்கிக் கொண்டிருந்த என்னைத் தட்டியெழுப்பி மறுப்புக் கடிதம் தந்துவிட்டுச் சென்றார்கள். அதில் “கோட்டார் காவல் நிலையத்திற்குட்பட்ட” கிறித்தவ தேவாலயத்தையும், இசுலாமியப் பள்ளிவாசலையும் மட்டும் குறிப்பிட்டுவிட்டு, அதே நாகர்கோவில் காவல்துறை உட்கோட்டத்தின் கீழ் வரும் “நேசமணி நகர் காவல்நிலைய ஆளுகைக்கு உட்பட்ட அருள்மிகு நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவில்” நிகழ்வை கவனமாகத் தவிர்த்திருக்கிறார்கள்.

மேலும் “தற்போது நிலவும் சட்ட ஒழுங்கு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மதநல்லிணக்கச் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்படுகிறது” என்று கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்கள். அப்படியானால் ஒரு மதநல்லிணக்கச் சந்திப்பைக்கூட நடத்த முடியாத அளவுக்கு தமிழ்நாட்டில் “தற்போது நிலவும் சட்ட ஒழுங்கு சூழ்நிலை” மோசமாக இருக்கிறது எனும் தோற்றம் உருவாகிறது. தமிழ்நாடு அரசின் மற்றும் ஆளும் கட்சியின் நிலைப்பாடும் இதுதானா என்கிற கேள்வியும் எழுகிறது.

பொதுமக்கள் கூடுவது, சந்திப்பது, பேசுவது எல்லாமே சட்ட ஒழுங்கு சிக்கலாகப் பார்க்கப்படுவது ஒரு ‘காவல்துறை அரசு’ உருவாவதற்கான அறிகுறி. பொதுவெளிகளில் நடத்தப்படும் நிகழ்வுகளை காவல்துறைக்குத் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயம்தான். அண்மையில் அரங்கக் கூட்டங்களுக்கும் அனுமதி வாங்க வேண்டும் எனும் வழக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இப்போது காவல்துறையிடம் அனுமதி கேட்க வேண்டியத் தேவையில்லை என்றாலும், கேட்காவிட்டாலும், அனுமதி மறுக்கும் (அதாவது தடை செய்யும்) ஒரு புதிய ஏற்பாட்டை காவல்துறை உருவாக்குகிறது.

ஆளுங்கட்சியான திமுகவின் மாவட்டச் செயலாளர் கலந்துகொண்டு சிறப்பிக்கும் நிகழ்வுக்கே தடைவிதிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேல்மட்டத் தலைவர்களின் நிலைமையும் மேம்பட்டதல்ல. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அராஜகத்தை தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்று முன்னாள் முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொன்னது ஓர் அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டு. “ஆட்சிக்கு வந்ததும் கூடங்குளம் போராளிகளின் மீதான வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவேன்” என்று வள்ளியூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உறுதிமொழி அளித்த இப்போதைய முதல்வர் அவர்கள் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற விடாமலிருப்பது இன்னொரு எடுத்துக்காட்டு.

காவல்துறையின் அனைத்து மட்டங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு சாக்குப்போக்கு “மேலிடத்து உத்தரவு” என்பதாகும். அந்த “மேலிடம்” தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகமும் அல்ல, திமுகவின் அண்ணா அறிவாலயமும் அல்ல என்றால், அது எங்கே இருக்கிறது? தமிழ்நாடு காவல்துறை உண்மையிலேயே யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்கிற கேள்வி எழுகிறது. காவல்துறைக்கு வெளியே ஓர் அதிகார மையம் இருக்கிறதோஅவர்கள்தான் இறுதி முடிவுகள் எடுக்கிறார்களோ என்றெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றன.

மக்கள் சிக்கல்களுக்காக ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தினால், ஒரு போராட்டம் நடத்தினால், ஐந்தாறு காவல்துறையினர், உளவுத்துறையினர் முகத்துக்கு நேரே வந்து நின்று காணொளி எடுக்கிறார்கள், படங்கள் எடுக்கிறார்கள், குறிப்பு (notes) எடுக்கிறார்கள். சில நேரங்களில் ஒரு காவல்துறை அதிகாரி புகார் அளிக்க, இன்னொரு அதிகாரி வழக்குப் பதிவு செய்யும் வினோதத்தையும் பார்க்கிறோம்.

இப்போது தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகளிலும் மூக்கை நுழைத்து காட்சிப்படம் எடுக்கிறார்கள். கடந்த அட்டோபர் 18, 2022 அன்று என்னுடைய தந்தையார் திரு. சு. பரமார்த்தலிங்கம் அவர்கள் மரணமடைந்தார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் திமுகவைத் தோற்றுவித்தக் காலத்திலிருந்தே கட்சிக்காக உழைத்த அப்பாவின் விருப்பப்படி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும் ஏனைய மாவட்ட திமுக முன்னணியினரும் அப்பா உடலத்தின் மீது திமுக கொடியைப் போர்த்திய நிலையில் அப்பாவின் இறுதி ஊர்வலம் அட்டோபர் 19, 2022 அன்று காலை 9 மணிக்கு வீட்டிலிருந்து தொடங்கியது. அப்போது நான்கைந்து உளவுத்துறையினர் காட்சிப்படம் எடுத்தார்கள்.

அதேபோல தகனத்திற்கு முன்னால் நடந்த இறுதிச் சடங்குகளையும் உளவுத்துறையினர் வீடியோ எடுத்தார்கள். தாங்கொணா துயரத்தில் இருந்த என்னால் இதனைத் தட்டிக்கேட்க இயலவில்லை. யார் இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது? என்னுடைய தந்தையாரோ, நானோ தீவிரவாதிகள் அல்லர், கொலைக் குற்றவாளிகள் அல்லர். கொள்ளைக்காரர்கள் அல்லர். எங்களை ஏன் இப்படி அத்துமீறி படம் எடுக்க வேண்டும், காட்சிப்படம் எடுக்க வேண்டும்?

நாகர்கோவில் கோட்டாட்சித் தலைவர், குமரி மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற அதிகாரிகளிடம் இது குறித்து நேரில் சந்தித்து முறையிட்டிருக்கிறேன். விரைவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் முறைப்படி முறையிடத் திட்டமிட்டிருக்கிறேன்.

யாரும் எதற்காகவும் எந்த விதத்திலும் இயங்காதீர்கள், வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடப்பதே உங்கள் சனநாயகக் கடமை எனும் செய்தி நமக்கெல்லாம் உரக்கச் சொல்லப்படுகிறது. உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு என்றெல்லாம் பெருமை கொள்ளும் நமக்கு இது ஓர் எச்சரிக்கை மணியாகவே அமைய வேண்டும். தமிழ்நாடு அரசும், ஆளும் கட்சியான திமுகவும் இந்த நிலைமையைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும், இதுகுறித்து மக்களின் ஐயங்களைப் போக்க வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

சுப. உதயகுமாரன்