credit_atm

     வங்கிக்குச் செல்லாமல் எந்நேரமும் பணம் எடுக்கும் வாய்ப்பினை எல்லா நேரத் தானியங்கி மையங்கள் அளித்து வருகின்றன. தான் கணக்கு வைத்துள்ள வங்கிகியின் தானியங்கிப் பொறியில் மட்டுமல்லாமல் பிற வங்கிகளின் தானிப்பொறிகளிலும் பணம் எடுக்கும் வாய்ப்பைக் குறைத்துப் பிற தானிப் பொறிகளில் மாதத்திற்கு 5 தடவைக்குமேல் எடுத்தால்  கட்டணம் என அறிமுகப்படுத்தினர். இப்பொழுது் கணக்கு வங்கி, பிற வங்கி  என்ற வேறுபாடின்றி ஒருவர் மொத்தமாக மாதம் ஐந்து தடவைக்குமேல் தானிப் பொறியைப் பயன்படுத்தினால் கட்டணம் பெற இந்திய வங்கிகள் சங்கம்,  சேம(ரிசர்வு) வங்கிக்குப் பரிந்துரைத்துள்ளது.

தானிப்பணப்பொறியால் பொதுமக்களுக்கும் நன்மை! வங்கிகளுக்கும் ஆதாயம்!

வங்கிக்குக் குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்று கால்கடுக்கக்காத்திருந்து, பணிநேரத்தில் இழப்புற்று அமைதியிழந்து திரும்பும் அவலம் பொதுமக்களுக்கு இல்லை. வேறு  வேலையாக  வெளிய செல்லும் பொழுதுகூடப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். தேவைக்கேற்பக் குறைந்த அளவு பணம் எடுத்தால்போதுமானது. உடனுக்குடன் மீதி இருப்புத் தொகையும்  தெரியவருவதால் திட்டமிட முடிகிறது. வங்கிகளுக்குக்  காசோலைச் செலவு மிச்சம். பணிப்பளு குறைவதால் பணியாளர்கள் ஊதியச் செலவு குறைந்து ஆதாயம் பெருகுகிறது! எப்பொழுதோ ஒரு முறை வந்தால் திட்டமிட இயலாமல் கூடுதல் பணத்தை எடுக்கும் மக்கள், எந்நேரமும் பணம் எடுக்க வாய்ப்பு உள்ளதால்  தேவையான பணத்தைமட்டுமே எடுப்பர். இதனால் மக்களின் பணம் வங்கியில் இருப்பாக இருந்து வங்கிக்கு நன்மை தருகிறது. இப்படி எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம். இதை  எல்லாம் மறந்துவிட்டு, வங்கிகளுக்கு வீண் செலவு என்பதுபோல் அறியாமையால் கருதி இத்திட்டத்தைப் பரிந்துரைக்கும்  இந்திய வங்கிகள் சங்கத்தைக் கடுமையாகக் கண்டிப்போம்! கட்டுப்பாடின்றித் தானிப்பணப்பொறிகளில்  பணம் எடுக்கும் வாய்ப்பைப் பறிக்க வேண்டா என இந்தியச்சேம வங்கிக்குத் தெரிவிப்போம்! ..

ஒவ்வோர் உரிமையாகப் பறி கொடுக்க ஒத்துக் கொண்டால் இறுதியில் அடிமைத் தளையில்தான்  பிணைக்கும் என்பதை மறக்க வேண்டா!