தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மடல் : 2 முறையீடு
விடுநர்
இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர்,அகரமுதல இணைய இதழ் 23 எச்., ஓட்டேரிச்சாலை, சென்னை 600 091 பேசி 9884481652 ; 044 2242 1759 மின்வரி : madal@akaramuthala.inபெறுநர்
தலைமைத் தேர்தல் ஆணையர், பொது(தேர்தல்கள்) துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 மின்வரி :ceo@tn.gov.inநாள் 21.04.2045 / 04.05.2014
மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையர் அவர்களுக்கு
பொருள்: வாக்காளர் பட்டியலை முழுமையாக்கலும் வாக்குகளை விலைபேசுவோரைத் தண்டித்தலும்
வணக்கம்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு நீங்கேள பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அனைவருமே பாராட்ட வேண்டும் என்றால் ஆற்ற வேண்டிய அரும் பணிகள் பல உள்ளன. அவற்றில் இரண்டைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
வாக்களிக்கத் தகுதி உடைய அனைவருக்கும் வாக்குரிமை இருக்கும் வகையில் வாக்காளர்கள் பட்டியல் உருவாக்கப்பட வேண்டும்.அதற்காக நீங்கள் ஏதேதோ முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறி வருகிறீர்கள். (நீங்கள் என்பது உங்களை மட்டுமல்ல, உங்களுக்கு முன்பும் இருந்த தேர்தல் ஆணைய அலுவலர்களையும் சேர்த்துத்தான்). ஆனால், வாக்காளர்களின் சோம்பல் மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தின் செயற்பாட்டுக் குறைபாடுகளும் நிறைவான வாக்காளர் பட்டியல் உருவாகாமைக்குக் காரணம். சான்றுக்கு ஒன்று கூறுகிறேன்.
நாங்கள் மயிலாப்பூர், காரணீசுவரர் கோயில் தெருவில் குடியிருந்த பொழுது வாக்காளர் பட்டியலில் எங்கள் நால்வர் (இ.திருவள்ளுவன், தி.அன்புச்செல்வி, தி.ஈழமலர், தி.ஈழக்கதிர்) பெயர்கள் இருந்தன. இரு தெரு தள்ளி உள்ள மாவு ஆலை முதல் தெருவிற்கு வீடு மாறினோம். முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம் என வாக்காளர் பெயர்ப்பட்டியலைச் சரி பார்த்தால் பெயர்கள் எடுக்கப்பட்டிருந்தன. வாக்காளர்கள், இடம் மாறினால், புதிய முகவரிக்கிணங்கப் பதிவு இருக்கும் வகையில்தானே செயல்படவேண்டும்? ஏன் பெயர்களை நீக்க வேண்டும்? வாக்காளர் இருப்பிடத்தை அறிய முயலாமல் பெயர்களை நீக்குவது முறையற்றதுதானே!
இருப்பினும் முகவரி மாறியதால், புதிய இருப்பிடத்திற்கிணங்க உரிய பதிவுகளை மேற்கொள்ள விண்ணப்பித்தோம். அப்படியும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறவில்லை.
வாக்காளர் சேர்ப்பு முகாம்கள் நடத்துவதாக அறிவிப்பு வந்தது.முன்பு வாக்களித்த சாவடியில் அல்லது பகுதிக்குரிய வாக்குச் சாவடி அமைந்த பள்ளியில், மாநகரத் தொகுதி அலுவலகத்தில், அஞ்சலகத்தில் பதியலாம் என அறிவிப்பு வந்தது.
பள்ளிக்குச் சென்று முதல்வரையே சந்தித்து உரிய படிவங்களைக் கேட்டேன். “எங்களிடம் வாக்காளர் சேர்க்கை குறித்துத் தெரிவித்தார்கள். ஆனால், மாணாக்கர்கள் படிப்பு கெடும் என்பதால், படிவங்களை நாங்கள் வாங்கி வைத்துக் கொள்ளவில்லை” என்றார். எங்கள் பகுதி ச.ம.உ. அலுவலகமும் மாநகர உறுப்பினர் அலுவலகம் ஒரே இடத்தில்தான் அமைந்திருந்தன. அங்கே சென்று கேட்டேன். “பலர் இவ்வாறு வந்து கேட்கிறார்கள். ஆனால், அப்படி எந்தப் படிவமும் தரவில்லை”. என்றனர்.
மயிலாப்பூர் அஞ்சலகத்திற்குச் சென்று கேட்டேன். “எங்களிடம் அப்படிச் சில படிவங்களைத் தந்தார்கள். யாரும் வாக்காளர் சேர்க்கைக்காக வரவில்லை. எனவே, திருப்பி அனுப்பி விட்டோம்” என்றனர். “இறுதி நாள் வரை காத்திராமல் ஏன் அனுப்பி விட்டீர்கள்” என்றேன். “யாருமே வராத பொழுது படிவங்கள் சும்மா இருப்பானேன் என்று அனுப்பி விட்டோம்” என்றனர்.
சென்னை மாநகராட்சிக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். “செய்தித்தாள்களில் வந்தவாறு எல்லா இடங்களிலும் வாக்காளர் சேர்க்கைப்பணி பார்க்க முடியாது. எனவே உங்கள் வட்டாட்சியர் அலுவலகம் சென்று கேளுங்கள்” என்றனர்.
அதற்குள் இறுதி நாளும் வந்து விட்டது. உங்கள் அலுவலகத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இணை ஆணையர் பேசினார். “மீண்டும் சனவரியில் அறிவிப்பு வரும். அப்பொழுது பதிந்துவிடுங்கள், உங்கள் பெயர் எப்படியும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும், கவலைப்படாதீர்கள், நீங்கள் தெரிவித்த குறைபாடுகளைக் கவனிக்கிறேன்” என்றார்.
“இணையவழிப் பதிவினை எளிமையான முறையில் அறிமுகப்படுத்தாமல் எங்களை ஏன் அலைய விடுகிறீர்கள்” என்றேன். “அடுத்து இணைய வழியாகவே நீங்கள் பதிந்து கொள்ளலாம்” என்றார். பெண்அலுவலர் பேசிய கனிவான முறையும் கருத்துடன் கேட்டதும் மனநிறைவை அளித்தது. ஆதலின் மேற்கொண்டு எங்கும் அலையவில்லை.
2012 இல் இணைய வழியாகப் பதிவு செய்தேன். இந்த முறை எங்களில் மூவருக்கு எங்கள் வீட்டு முகவரியிலும் மகள் திருமணமாகி மாமனார் குடும்பத்துடன் வசிப்பதால் சைதாப்பேட்டை முகவரியிலும் பதிந்தோம். எந்த விவரமும் தெரியாமையால் மண்டல அலுவலகத்தில் தொலைபேசி வழி தொடர்பு கொண்டேன். (எந்த அலுவலகத்துடன் தொடர்புகொள்ள வேண்டும் என்பதற்குப் பல்வேறுஅலுவலகங்களில் உளளவர்களுடனும் பேசித்தான் தெரிய வந்தது. மாநகராட்சிப் பணியாளர்கள் சரியான விவரத்துடன் இருந்தால் பணி எளிமையாக இருந்திருக்கும்.) “வீட்டிற்கு ஆள் வருவார்கள். சரிபார்த்த பின்பு பெயர்கள் சேர்க்கப்படும்” என்றனர். சில வாரம் கழித்து, “யாரும் வரவில்லையே” எனப் பேசினேன். “உங்கள் ஒளிப்படங்களை எடுத்து வையுங்கள். சரிபார்க்க வருபவர்கள் கேட்டுப்பெறுவார்கள்” என்றனர். “இணையவழிப் படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவே! ஏன், கேட்கிறீர்கள்” என்றேன். “படம் இருந்தால் வேண்டா. ஆனால் சரிபார்க்க ஆள் வருவார்கள்” என்றனர். இதேதான் சைதாப்பேட்டைத் தொகுதியில் மகளின் பெயர் சேர்க்கைக்கும். ஆனால் எங்கும் யாரும் வரவில்லை.! வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இல்லை. சட்டமன்றத் தேர்தலிலும் முந்தைய நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்காளிக்கும் வாய்ப்பு பறிபோனதற்கு, தேர்தல்ஆணையத்தின் செயற்பாடுகள் சரிவர அமையாமையே காரணம்.
கடந்த ஆண்டு புழுதிவாக்கம் குடி வந்தோம். வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடப்பதாக அறிந்து உரிய பள்ளிக்கூடம் (தந்தை பெரியார்மேனிலைப்பள்ளி) சென்றோம். மாலை 5.00 மணி வரை முகாம் நடைபெறும் என்று தெரிவித்து இருந்தனர். ஆனால், நீங்கள் 3.00மணிக்கு வந்திருக்கிறீர்கள். 5.00 மணிக்குள் படம் எடுக்க முடியாது என்று சொல்லி எங்களையும் அப்பொழுது வந்திருந்த பலரையும் பள்ளிக்குள் விடவில்லை. ஆனால், அடுத்து புழுதிவாக்கம் உயர்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில் விண்ணப்பங்களை உரிய ஒளிப்படங்களுடன் அளித்தோம். ஒரு வழியாக வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பெயர்கள் இடம் பெற்று வாக்களிப்பு உரிமையைப் பயன்படுத்தினோம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பினும் எழுத்துப் பிழைகள் உள்ளன. என் பெயர் ‘திருவள்ளவர்’ எனத் தவறாக உள்ளது. என் விவரத்திலும் மனைவியின் விவரத்திலும் மகனின் விவரத்திலும் என் பெயர் வெவ்வேறாக எழுத்துப் பிழைகளுடன் குறிக்கப்பட்டுள்ளது. நல்லவேளை, ஆண், பெண் விவரம் சரியாக உள்ளன. சரியான முறையில் பெயர் விவரங்கள் பதியவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றேன்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களின் இருப்பிடச் சான்றை அளித்தால் வாக்களிக்கலாம் என்பதை நடைமுறைப் படுத்தினால் இச்சிக்கலைத் தீர்க்கலாம். இதில் தவறு நேராவண்ணம் தேர்தல் ஆணையமே பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வருவோர் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து நான் தெரிவிக்கப் போகும் வேண்டுகோள்தான் முதன்மையானது.
தேர்தலில் பணம் புழங்குவதற்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தீர்கள். என்றாலும் வாக்களிக்கப் பணம் கொடுத்தவர்கள், கொடுக்க முயன்றவர்கள் தண்டனை பெற்றால்தானே முறையாக இருக்கும். தேர்தலில் பணம் கொடுத்ததாக 60க்கு மேற்பட்ட வழக்குகள் உங்களிடம் பதிவாகி உள்ளன. ஆனால், இதழ்களில் நூற்றுக்கணக்கிலான முறைகேடுகள், படங்களுடன் வந்துள்ளன. உங்களுக்கு உண்மையிலேயே வாக்குரிமை விலைபோகக்கூடாது என்பதில் நம்பிக்கை இருந்தது எனில், நீங்கள் செய்ய வேண்டியது குற்றவாளிகளைத் தண்டிக்கச் செய்வதே!
நீதிபதி ஒருவர் தலைமையில் குழு அமைத்து, இது பற்றிய உசாவுதலை வாக்கு எண்ணிக்கை நாளுக்குள் முடித்து உண்மைக் குற்றவாளிகள், வாணாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்படுவதும், அவர் சார்ந்த கட்சி அவர்போட்டியிட்ட தொகுதியில் 10 ஆண்டுகளேனும் போட்டியிடும் தகுதியை இழ்நததாக அறிவிப்பதுமே உண்மையான அறமாகும். குற்றவாளி என அறியப்பட்டவர் வாக்குகளை எண்ணக்கூடத் தேவையில்லை. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்குள் விரைவாக உசாவலை மேற்கொண்டு தண்டனைகளை அறிவிக்க வேண்டும். இல்லையேல் உங்கள் பணி கண்துடைப்புப் பணிகளாகத்தான் கருதப்படும்!
செய்தக்கஅல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். (குறள் 466)
ஒருமுறை வீடு மாறிய பின், வாக்களிக்க எவ்…வளவு போராட வேண்டியிருக்கிறது! ‘வாக்களிப்போர் எண்ணிக்கை குறைகிறது’, ‘படித்தவர்கள் வாக்களிப்பதில்லை’ எனவெல்லாம் கூப்பாடு போடும் நாம் இதைக் கவனிக்க வேண்டும்!
இங்கு அரசு சார்ந்த எல்…லாவற்றையுமே போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது! எல்…லாவற்றையுமே…! இப்படித் தனக்கான எல்லாவற்றையுமே போராடித்தான் பெற வேண்டும் எனும் நிலையில் இருப்பதால்தான் ‘ஈழப் பிரச்சினை’ போன்ற பிரச்சினைகளை அடுத்தவர் பிரச்சினைகளாகக் கருதி, அவற்றுக்குப் போராட முன் வர மாட்டேன்கிறார்கள் நம் மக்கள்! அடிப்படை விதயங்களுக்கே மக்களைப் போராட வைத்து விட்டால், உரிமைகள், அறநெறிகள், சமூகநலன் போன்ற பெரிய விதயங்களுக்குப் போராட மக்கள் முன் வர மாட்டார்கள்; முன் வர நேரமிருக்காது என்பதால்தான் நம்மை இப்படியே வைத்திருக்கிறார்கள்! இதுவும் ஒரு அரச சூழ்ச்சியே! இங்கு நடப்பது மக்களாட்சி என எவன் சொன்னது?