pongal02
தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து  10.01.14 அன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 23-1-2008- இல் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், தை மாதத்தின் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பை காங்கிரசு சார்பில் இ.எசு.எசு.இராமன், பாமக சார்பில் கி. ஆறுமுகம், மார்க்சியப்

கலைஞர் கருணாநிதி

கலைஞர் கருணாநிதி

பொதுவுடைமைக் கட்சி சார்பில் என். நன்மாறன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வை. சிவபுண்ணியம், மதிமுக சார்பில் மு. கண்ணப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கு. செல்வம் ஆகியோர் சட்டப்பேரவையில் வரவேற்றுப் பேசினர்.
1939-இல் திருச்சியில் நடைபெற்ற அகில இந்தியத் தமிழர் மாநாட்டில்  நாவலர் சோமசுந்தர பாரதியார், பெரியார், மறைமலை அடிகள், பாரதிதாசன், திரு.வி.க., தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், பி.டி.இராசன், பட்டுக்கோட்டை அழகிரி, உமாமகேசுவரனார், ஆற்காடுஇராமசாமி (முதலியார்) ஆகியோர் பங்கேற்றனர். அதில் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவிக்கப்பட்டது.
2008-இல் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டதும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து ஆகியோர் அதனைச் சான்றுகள் காட்டி வரவேற்றனர்.
ஆனாலும் 2011-இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தனர்.
இதனால் திமுகவுக்கு எந்த அவமானமும் இல்லை. அதிமுக அரசின் முடிவால் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு இல்லை என ஆகிவிடாது. நான் ஏற்கெனவே தெரிவித்தவாறு, சித்திரை முதல் நாளில் விழா கொண்டாடுவோரை நாம் தடுக்க மாட்டோம். தை முதல் நாளை ஏழை – பணக்காரர் வேறுபாடின்றி தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.