தொண்டிக் கடற்கரையில் தோண்டத் தோண்ட .. 500க்கும் மேற்பட்ட தெய்வப் படிமங்கள்
திருவாடானை: தொண்டி, நம்புதாளை கடற்கரையில், 500க்கும் மேற்பட்ட கடவுள் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை, பூப்பதனிடுதல் முறையில், முகலாயர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட்டவையா எனக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.இராமநாதபுரம், தொண்டி கடற்கரையில், 21.01.14 நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றவர்கள், அங்கே, சிறிய கடவுள் சிலைகள் கிடப்பதைக் கண்டனர். அவர்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சார்புஆய்வாளர் இந்திரா முதலான காவலர்களும் மீனவர்களும், கடலில் இறங்கி, மேலும் சிலைகள் இருக்கின்றனவா எனத் தேடினர். இதில்,கடவுள் மந்திர எழுத்து பொறித்த செப்புத்தகடுகள், படிகலிங்கம், பச்சை நி றச்சிவன் சிலைகள் கிடந்தன. மேலும், கடற்கரை மணல் பகுதிகளிலும், தோண்டத் தோண்ட, வெள்ளியிலும் வெண்கலத்திலும் சிலைகள் கிடைத்தன. தொடர்ந்து, நம்புதாளை கடற்கரையில் உள்ள, முருகன் கோவில் பின்புறமுள்ள ஆற்றில், நான்கு அடி உயரக் காளி சிலை, மனிதத் தலையை வெட்டி கையில் வைத்திருப்பது போன்ற நிலையில் கிடந்தது. மொத்தம், 500க்கும் மேற்பட்ட சிலைகள் கிடைத்துள்ளன. இதனால், அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சிலைகளை, மந்திர வாதிகள் பயன்படுத்தினரா அல்லது வெளி நாடுகளுக்குக் கடத்த முயன்றவர்கள், இங்கு பதுக்கி வைத்திருந்தனரா எனக் காவல்துறையினர் உசாவி வருகின்றனர்.
பூப்பதனிடுதல்: இது குறித்து, வரலாற்று ஆர்வலர்கள் கூறியதாவது: கடந்த, 13 ஆம் நூற்றாண்டுகளில், தில்லியில் இருந்து, முகலாயர்கள், தமிழகத்தில் படையெடுப்பு நடத்தினர். அவர்களிடம் இருந்து, கோவில் சிற்பங்களைக் காக்க, உரிய பூசைகள் செய்து, மண்ணுக்குள் புதைத்தனர். இந்தப் பாதுகாப்பு முறை, பூப்பதனிடுதல் என, அழைக்கப்படுகிறது.
சிலைகளைப் பாதுகாக்க: சில ஆண்டுகளுக்கு முன், ஆனந்தூர், தேவிப்பட்டினம் பகுதிகளில், பூப்பதனிடுதல் முறையில், பாதுகாக்கப் பட்ட சிலைகள் மீட்கப்பட்டன. தற்போது, கிடைத்துள்ள சிலைகளும், அந்த முறையில் பாதுகாக்கப்பட்டவையாக இருக்கலாம். தொல்லியல் துறையின், ஆய்வுக்கு பிறகே, முழுமையான தகவல்கள் தெரியவரும். இவ்வாறு, அவர்கள் கூறினர். கைப்பற்றப்பட்ட சிலைகள், திருவாடானை வட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நன்றி : தினமலர்
Leave a Reply