பாரதிதாசனின் தமிழ் உணர்வு
பாரதிதாசனின் தமிழ் உணர்வு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் என்பது அவரது எழுத்துகள் அனைத்திலும் துடிப்பாக இடம் பெறுவதைக் காணலாம்.
தமிழ் மொழியில் ஈடுபாடு
தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் முப்பரிமாணங்களில் பாரதிதாசன் கவிதைகள் முத்தமிழை முழுமையாக வலம் வந்திருக்கின்றன. உலகக் கவிஞர்களிலேயே ஒரு மொழியை உயிருக்குச் சமமாக நினைத்துப் பாடியவர் பாரதிதாசன் ஒருவராகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்குத் தமிழ் மொழியை நேசித்தார்.
காதலி ஒருத்தி தன் காதலனோடு கொஞ்சிப் பேசும் மொழிகூடத் தமிழ் மொழியாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவர்.
மங்கை ஒருத்தி தரும் சுகமும் தமிழ்மொழிக்கு ஈடாகாது என்று பேசியவர்.” உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்று வாழ்ந்தார் பாவேந்தர்,
வீரத்தாயில் ‘மலையைப் பெயர்க்கும் தோள் உடையோராக வளருங்கள், கீழ்ச் செயல்கள் விடுங்கள், வீரத்தைப் போற்றுங்கள், வீரத்தில் உயருங்கள்’ என்று அனைத்துத் தமிழர்களுக்கும், குறிப்பாகப் பெண்ணினத்துக்கும் அறைகூவல் விடுப்பதைக் காணமுடிகிறது.
தமிழர்களின் விழிப்புணர்ச்சி
வீரத்தாயில்
என் நாட்டை நான் ஆள ஏற்ற கலையுதவும்
தென்னாட்டுத் தீரர்; செழுந்தமிழர்; ஆசிரியர்
என்று சுதர்மன் மூலமாகப் பேசுகிறார் கவிஞர். தொல்காப்பியம், திருக்குறளுக்கு மட்டும் விளக்கம் தருபவன் தமிழ் ஆசிரியன் இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் சூழ்ச்சிகளுக்கு இடங்கொடாமல், தமிழின் ஆக்கத்திற்கும், தமிழ்நாட்டின் ஆட்சிக்கும் தமிழர்கள் விழிப்புடன் இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துபவரே தமிழாசிரியர் என்று வீரத்தாயில் நிலை நிறுத்தியுள்ளார்.
இவ்வாறு, வீரத்தாய் காவியப் பண்பும் பாத்திரப் படைப்புகளும் தமிழே உருவானவர்களாகக் காணப்படுகின்றனர்.
தமிழனின் வீரப் பரம்பரையம்
தமிழ்ப் பெண்களை வீராங்கனைகளாகவும் வீரப் புதல்வரைப் பெற்றவர்களாகவும் நினைவூட்டி, தமிழர்களின் வீரத்திற்குச் சான்றாகக் காணப்படுகின்ற புறநானூற்று வீரக்கதைகளை நினைவுபடுத்திடவும் வீரத்தாய் எனும் பெயரில் காவியம் படைத்தளித்துள்ளார் பாவேந்தர் பாரதிதாசன்.
பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல் செய்யப் புறப்படுவெளியில்!
என்று இளைய உள்ளங்களுள் வீரத்தை ஊட்டியவர் பாரதிதாசன். தாம் படைத்த மூன்று காப்பியங்களிலும் வீரப்பெண்களைத் தலைமைப்படுத்தியே அமைத்துள்ளார்.
‘சஞ்சீவி பர்வதத்தின் சாரலில்‘ குப்பனின் மனைவி வஞ்சியும், ‘புரட்சிக்கவி‘யில் கவிஞனின் காதலி அமுதவல்லியும், ‘வீரத்தாயில்‘ விசயராணியும் வீரம் செறிந்த கதைமாந்தர்களாகக் காணப்படுகின்றனர்.
விசயராணியை அறிமுகம் செய்யும்போதே வீரமும் உறுதியும் அமைந்தவளாகக் காட்டுகிறார் கவிஞர். அதுபோலவே ‘வீரத்தமிழன்’ எனும் பாடலில் இராவணனை, மாசுபடுத்தி ஊறுபடுத்தப்பட்ட தமிழ் மறவர்களில் மூத்தவனாகக் காண்கிறார் பாரதிதாசன். தமிழனின் வீர மரபினை இராவணனைப் படைத்ததன் மூலம் போற்றிப் பெருமிதம் கொள்கிறார் கவிஞர்.
தமிழனின் வீரப் பரம்பரையத்தை நினைவுபடுத்த விரும்பியே வீரத்தாய் காவியத்தில் தன் மகனைத் தாயே வீரனாக்குகின்ற வகையில் படைக்கிறார். சுதர்மனை நோக்கி வீசிய சேனாபதியின் வாளினைத் தனது வாளினால் துண்டித்துவிடும் வீர மகளாக விசயராணி காணப்படுகிறாள்.
“பறித்தெடுத்த தாமரைப் பூம் பார்வையிலே வீரம்
பெருக் கெடுக்க நிற்கின்றாய் பிள்ளையே”
எனும் வரிகளைப் பிறநாட்டு வேந்தர்கள் மூலம் சுதர்மனின் வீரத்தைப் பேச வைக்கிறார் கவிஞர் பாரதிதாசன். அதுபோலவே,
ஆவி சுமந்து பெற்ற அன்பன் உயிர் காப்பதற்குக்
கோவித்த தாயின் எதிர் கொல் படைதான்
என் செய்யும்
என்றும் விசயராணியின் வீரத்தைப் புலப்படுத்துகிறார். கடைசியில் புரட்சிக்கவியில் வருவது போலவே ‘குடியரசு’ ஓங்க, வீரமகன் அரசியல் அறிவிப்பு செய்வதைக் காண முடிகிறது. இவ்வாறு தாயையும் மகனையும் வீரத்தின் விளைநிலமாக அமைத்துக், கொடியவர்களிடம் இருந்து நாட்டைக் காக்கும் வீரப் பெண்ணாகவும் அதே நேரத்தில், ஒழுக்கம் மிக்க வீரப்புதல்வனைப் பெறும் வீரத்தாயாகவும் படைத்துத் தமிழரின் வீர மரபினை நிலை நிறுத்தியுள்ளார் பாவேந்தன் பாரதிதாசன்.
தமிழர் விடுதலை தொடரட்டும் ;உங்கள் சேவை தொடர மேலும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்