agaitation against pranab01

2009-2009இல், தமிழீழத்தில் இனப்படுகொலைப் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றி, அப்போரை சிங்களத்துடன் இணைந்து வழி நடத்தியப் போர்க்குற்றவாளி பிரணாப்பு.  இன்று இந்தியக் குடியரசுத் தலைவராக உள்ள அவர், திசம்பர் 20 அன்று, சென்னை இலயோலாக் கல்லூரியில் நடைபெறும் ஒரு விழாவிற்கு வந்தார். அப்பொழுது அவருக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்றதாகத், தமிழின உணர்வாளர்கள் மீதும், மாணாக்கர்கள் மீதும் தமிழகக் காவல்துறை கொடுந்தாக்குதலை நடத்தியது.

திசம்பர் 19 ஆம் நாள், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், இன உணர்வாளருமான திரு. வ.கவுதமன் அவர்களை நள்ளிரவு இரண்டு மணிக்கு அவர் வீட்டிற்குச் சென்று  தளையிட்டது காவல்துறை. மேலும், இலயோலாக் கல்லூரி மாணாக்கர்களான பார்வைதாசன், இரேமண்ட், கவுதம், மோகன வசந்த்து ஆகியோரையும்,  சோதிலிங்கம் எனும் சட்டக்கல்லூரி மாணவரையும், பிரபாகரன், கனகராசு ஆகிய பொறியாளர்களையும், ஈழத் தமிழ் இளைஞரான தமிழினியன் என்பவரையும் காவல்துறையினர் நள்ளிரவில் பெரும் எண்ணிக்கையில் சென்று பயங்கரவாதிகளைப் பிடிப்பது போல்  தளையிட்டனர்.

black flag03
தாம் கைது செய்யப்பட்டது குறித்து குறுஞ்செய்தி அனுப்பினார் என்று கூறி,தமிழினியன் எனும் ஈழத்து இளைஞரை,  நுங்கம்பாக்கம் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையிலான காவல்துறையினர் வயிற்றிலும், உயிர் நிலையிலும்  மிதிபுதையணி  காலால் மிதித்துச் சித்திரவதை செய்துள்ளனர்.

இக்கைது நடவடிக்கையின் மூலம், மாணவர்களின் பெற்றோருக்கும் அச்சமூட்டியதோடு, கைது செய்யப்பட்டத் தோழர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்று கூட தெரிவிக்காமல் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது காவல்துறை.

நிகழ்ச்சி முடிந்து பிரணாப்பு சென்ற பிறகே, தோழர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மாணாக்கர்கள் மீதான காவல்துறையினர் தாக்குதல் குறித்து முறையிட, சென்னை மனித உரிமைகள் ஆணையத்தில் முறையீடு அளிக்கப்பட்டது.

இத்தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதல் நடத்தியக் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், 07.01.2014 காலை 11 மணியளவில், பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை  ஆர்ப்பரிப்புடன் கண்டன முழக்கங்களை எழுப்பினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தொடக்கவுரையாற்றினார். தோழர் பிரிட்டோ, இயக்குநர் வ.கவுதமன்  ஆகியோர் நடைபெற்ற நிகழ்வுகளை விரிவாக விளக்கினர்.

மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்தியா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் அன்புத்தென்னரசு, விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழ்நாடு முசுலிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி ஆர்.எம்.அனீபா, தமிழ்த் தேச மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக்குமரன், தந்தை பெரியார் தி.க. சார்பில் வழக்கறிஞர் அமர்நாத், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் திரு. ஆனந்தன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழ்நாடு மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி,  தமிழரைக்காப்போம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, ஓவியர் வீரசந்தனம், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, புலவர் கி.த.பச்சையப்பனார், புலவர் இரத்தினவேலவர், புலவர் கோ.இளவழகன்  முதலான பல்வேறு கட்சி, இயக்கப் பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், முருகன்குடி க.முருகன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, பட்டுக்கோட்டை செயலாளர் தோழர் இராசேந்திரன், குன்றாண்டார் கோயில் செயலாளர் தோழர் சி.ஆரோக்கியசாமி, திருச்சி செயலாளர் தோழர் த.கவித்துவன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு  முதலான திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழின உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

எரிகுண்டுகளைப் பயன்படுத்த அஞ்சாதவர்கள் கருந்துணிக்கு அஞ்சுவதேன்?