புரட்சியாளர் பெரியார்
– தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
இன்று பெரியார் எனின், யாவரும் அவர் ஈரோட்டு வே. இராமசாமி என அறிவர். “பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே” என்று பாரதியார் பாடினாலும் அது நிறைவேறியது பெரியார் அவர்களின் பெருந்தொண்டினால்தான் என்பது உலகறிந்த உண்மை. நான்கு வகை வருணமுறை நிலை நாட்டப்பட்டு இந்நாட்டுத் தொல்குடிப் பெருமக்கள் எல்லாரும் சூத்திரர் என்று அழைக்கப்படும் இழிநிலை வேரூன்றி இருந்தது. பிறப்பால் உயர்வு தாழ்வு கருதப்பட்டத் தமிழ்ப் பெருமக்கள் சாதி வேறுபாடுகளால் அலைப்புண்டு தீண்டாமை, பாராமை முதலியவற்றிற்குப் பெருமதிப்புக் கொடுத்து நாயினும் கடையராய் நலிந்து வாழ்ந்தனர். பிராமணியம் மேலோங்கித் தனியாட்சி புரிந்தது. மூடப்பழக்க வழக்கங்கள் எதிர்ப்பின்றி எங்கும் எத்துறையினும் இறுமாந்து கோலோச்சின. அறியாமை இருள் மறைந்திருந்தது. பெரியார் அவர்கள் பிறவிப் புரட்சியாளர். நாட்டுரிமைக்காகக் குடும்பத்தோடு போராடி வந்த அவர், சாதிவேறுபாட்டுக் கொடுமைகளை ஒழிக்கப் போர்க்கோலம் பூண்டு தன் மதிப்பு இயக்கம் கண்டு அயராது உழைத்தார். அவர் உழைப்பின் பயனே இன்று பிராமணணும் பறையனும் ஓரிடத்தமர்ந்து உரையாடி உண்ணும் காட்சி.
பெரியார் அவர்களின் பெரும் புரட்சி தோன்றிலதேல் இன்று தொடர் வண்டிகளில் சாதிக்கொரு பெட்டிகள் சேர்க்கப்பட் டிருக்கும். ஆட்சித்துறை தலைவர்களும், ஆசிரியர்களும் பிராமண குலத்தையே சார்ந்தவர்களாயிருப்பர். உயர்திரு. பக்தவச்சலனார் முதல் அமைச்சராகவும், உயர்திரு. காமராசர் அ.இ. காங்கிரசு தலைவராகவும் ஆகி இருக்க முடியாது. இன்று எங்கு நோக்கினும் பிராமணர் அல்லாதவர்களே தலைமை இடங்களில் வீற்றிருக்கும் காட்சியைக் காண இயலாது. புத்தரால் அழிக்க முடியாத பிராமணியம் பெரியாரால் செல்வாக்கு ஒழிந்தது. பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்று அறவுரை மொழிந்தார், உலகப் பொதுமறையருளிய திருவள்ளுவர். அவ்வறவுரையைச் செயலுக்குக் கொண்டுவந்தார் நம் பெரியார். சாதிகள் இல்லையடி பாப்பா என்றார் பாரதியார். அக் கூற்றை நிறைவேற்றும் அரும் பணியில் தலைமை பெற்றார் தமிழர் தலைவராம் பெரியார். இன்று சாதிகள் முழுவதும் ஒழியிவில்லையாயினும் சாதிப் பாகுபாடுகள் ஆங்காங்குத் தோன்றி மக்களாட்சியை மாசுபடுத்தினும் இனி அவை என்றும் நிலைத்திருக்க இயலாத நிலை தோன்றி விட்டது. இதற்குக் காரணம் பெரியார் அவர்களின் பெரும் புரட்சியேயாகும். அப் பெரியாரின் புகழ் மக்கள் உள்ளவரையில் மறையாது. மன்பதைப் புரட்சி செய்த மாபெரும் வீரர் வாழ்க.
பெரியார் தோற்றுவித்த மன்பதைப் புரட்சி மக்களாட்சி வெற்றி பெறத் துணைபுரிந்து வருகின்றது. புரட்சியாளர்கள் பெருந் தொண்டுகள் நம்மைப் புத்துலகுக்கு அழைத்துச் செல்வதாக. நம் நாடு புதுமை நலம் பெற்றுப் பழமையைப் போற்றிப் பாரில் ஈடு இணையற்று வாழ்வதாக. ஓங்குக புரட்சி. உயர்க தமிழ் நலம். மக்களினம் ஒன்றுபட்டுமாண்புடன் வாழ்வதாக.
குறள்நெறி(மலர்1 இதழ்17): 15.09.1964
Leave a Reply