வெடி வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர்-ஊராட்சிமன்றத் தீர்மானம்
வெடி வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர்
ஊராட்சிமன்றத்தில் தீர்மானம்
தேனிமாவட்டத்தில் உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சியில் வெடி(பட்டாசு) வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் எனத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வைகைப்புதூர், முதலக்கம்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, இந்திரா குடியிருப்பு போன்ற பகுதிகளில் திருமண விழாக்கள், புதுமனை புகுவிழா, காதணிவிழா, பூப்புனித நீராட்டு விழா, துக்க நிகழ்ச்சி, கிடாவெட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்குக் காதைப் பிளக்கும் வண்ணம் வெடிகள் வெடிக்கப்படுகின்றன.
இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதுடன், நோயாளிகளும், முதியோர்களும் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் வெடிகளினால் ஏற்படும் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்குக் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதலக்கம்பட்டி ஊராட்சியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடையை மீறி வெடித்த சிலர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுத் தண்டத்தொகையும்(அபராதமும்) விதிக்கப்பட்டது.
இப்பொழுது எப்பொழுதும் வெடி வெடிக்கக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவை தவிர முதலக்கம்பட்டி ஊராட்சிப்பகுதியில் ஓடும் வைகை ஆறு மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகெங்கை மாவட்டங்களுக்குக் குடிநீர் வசதிகளுக்கும், பாசன வசதிகளுக்கும் செல்கிறது. இந்த ஆற்றில் ஈமச்சடங்குகள், நினைவுச்சடங்குகள்(திதிகொடுத்தல்) போன்ற நிகழ்ச்சிகளை ஆற்றில் செய்துவருகின்றனர். இதனால் ஆறு மாசுபடுகிறது. இதனால் ஊராட்சிமன்றப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆறுகளில் நினைவுச்சடங்குகள் போன்ற செயல்களுக்குப் பயன்படுத்தி வருவது கூடாது எனவும் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சடங்ககள் செய்ய வேண்டும் எனவும் ஊராட்சிமன்றத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பாக ஊராட்சிமன்றத் தலைவர் முத்துப்பாண்டி கூறுகையில், வைகை ஆற்றில்நினைவுச்சடங்குகள்ஆற்றுவதற்கு – திதிகொடுப்பதற்கு –ச்சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் மேலும் வெடி வெடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர்.மேலும் வெடி வெடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர். மக்கள் நல்வாழ்விற்காக இவ்வாறு தடைகள் விதித்துள்ளோம் என்றார்.
நல்ல முயற்சி. பிறரும் பின்பற்ற வேண்டும். பாராட்டுகள்.
Leave a Reply