(வெருளி நோய்கள் 1311 -1315 : தொடர்ச்சி)

  1. துணைவர் வெருளி – Spousophobia

கணவன் அல்லது மனைவி, தன் மனைவி அல்லது கணவன்மீது கொண்டுள்ள அளவுகடந்த பேரச்சமே (வாழ்க்கைத்) துணைவர் வெருளி.
துணைவரின் தவறான பழக்க வழக்கங்கள், முரட்டுக் குணங்கள், பொறுப்பற்ற தன்மை, கட்டாயத் திருமணம், உள்ளத்தில் இடம் தராமை போன்றவற்றால் வாழ்க்கைத் துணைவர் மீது அளவுகடந்த வெறுப்பு கொள்வோர் உள்ளனர். ஒருவரை மற்றொருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து அன்பு செலுத்தினால், திருவள்ளுவர் கூறுவதுபோல் வாழ்க்கைத் துணை நலத்தைப் பேணினால், இதற்கு இடமில்லை.
00

  1. துமி ஓவிய வெருளி – Pɤnrophobia

வண்ணங்களைத் தூவி வரையப்படும் துமி ஓவியம் தொடர்பான தொடர்பான அளவு கடந்த பேரச்சம் துமி ஓவிய வெருளி.
முதலில் தூவு பூச்சு வெருளி எனக் குறிப்பிட்டிருந்தேன். Spray Painting என்பதன் நேர் பொருள். எனவே, மனம் நிறைவளிக்கவில்லை. வண்ணத் துளிகள் மூலம் வரையப்படம் ஓவியம் என்னும் பொருளில் துமி ஓவியம் எனக் குறித்துள்ளேன். (துமி = துளி)
00

  1. தும்மல் வெருளி – Sternutaphobia

தும்மல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தும்மல் வெருளி.
மணிக்கு 160 அயிரைப்பேரடி(கி.மீ.) விரைவில் தும்மல் வருவதாகக் கூறுகிறார்கள். எனவே, இதன் தாக்கத்தால் அச்சம் வருவது இயற்கைதான். எனினும் இல்லாத நோய்களை இருப்பதாக எண்ணி அதன் காரணமாகத் தும்மல் வருவதாகப் பலர் அஞ்சுகின்றனர்.
தும்மினால் யாரோ நம்மை நினைப்பதாகக் கூறும் பழக்கம் உள்ளது. தும்மினால் 100 ஆண்டு வாழ்க என்னும் பொருளில் 100 என்று சொல்வதும் நம்மிடையே உள்ளது. தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
ஊடியிருந்தோமா தும்மினார் யாம் தம்மை
நீடுவாழ் கென்பாக்கு அறிந்து.(குறள் எண் 1312) என்கிறார்.
அஃதாவது, காதலரோடு ஊடியிருந்த நேரம் பேச வைப்பதற்காக அவர் தும்மினாராம். அப்பொழுதுதானே நீடு வாழ்க என வாழ்த்திக் காதலி பேசுவார், என்கிறார்.
அதேநேரம் ஒற்றைத்தும்மல் தும்மினால், தொடங்க இருக்கும் செயல் அல்லது புறப்பட்டுப் போகும் நோக்கம் நிறைவேறாது, இது கெட்ட அறிகுறி என்று எண்ணும் பழக்கம் உள்ளது. இதனால் நோய் அறிகுறியாக மட்டுமல்லாம் கேடு அறிகுறியாகக் கவலைப்பட்டு அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
Sternuta என்னும் இலத்தீன் சொல்லிற்குத் தும்மல் எனப் பொருள்.
00

  1. துயில் வெருளி – Hypnophobia/Somniphobia / Seruphobia

தூக்கம் குறித்த தேவையற்ற மிகையான பேரச்சம் துயில் வெருளி.
உறக்க வெருளி(Somniphobia), தூக்க வெருளி(seruphobia) எனத் தனித்தனியாகக் கூறுவதை விட எல்லாவற்றையும துயில் வெருளி என்றே சொல்லலாம்.
புது வருவாயையுடைய ஊரின் தலைவனோடு தங்கிய இன்பத்தைத் தரும் இனிய துயிலில் இருந்து எழுப்பியதற்காகத் தலைவி சேவல்மீது சினம் கொள்வதாக மதுரைக் கண்ணனார் (குறுந்தொகை 107, 6-7) கூறுகிறார். தூங்கினால் கனவு வரும்; கனவு வந்தால் தலைவன் வருவான் என உறக்கத்தை விரும்பும் தலைவிகள் உண்டு. ஆனால் இப்பொழுதெல்லாம் உறங்கினால் கெட்டக் கனவு வரும் என அஞ்சுவோர் உள்ளனர்.
படுக்கச் சென்றால் அப்படியே இறப்பு வரும் எனப்பேரச்சம் கொள்வோரும் உள்ளனர். பொதுவாக உடல் நலமற்றவர்கள், தள்ளா அகவையில் உள்ள முதியோர் இவ்வாறு பேரச்சம் கொள்வோர்.
இளைஞர்கள் உறங்கினால் மார்பில் ஏறிக் கன்னிப்பிசாசு / மோகினிப் பிசாசுஅழுத்தும் என அஞ்சுவதும் உண்டு.
hypnos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு சொல்லிற்குத் துயில் எனப் பொருள்.
00

  1. துயில் எச்சில் வெருளி – Aquadormophobia