வெருளி நோய்கள் 1476 -1480: இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி நோய்கள் 1476 -1480
- நிலைப் பேழை வெருளி – Armarophobia
நிலைப் பேழைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நிலைப் பேழை வெருளி.
மூடிய பேழையைத் திறந்தால் பூதம் வரும் என்பது போன்ற கதைகளைப் படித்தவர்கள் அல்லது கேட்டவர்கள் அதனை உண்மை என நம்பி பேழைமீது பேரச்சம் கொள்கின்றனர்.
சிறுஅகவையில் பேழையில் நுழைந்து அது மூடப்பட்டிருந்தாலோ பிறருக்கு இத்தகைய நேர்வு நடந்திருந்தாலோ பேழை மீது பேரச்சம் கொண்டு (நிலைபபேழை வெருளிக்கு ஆளாகின்றனர்.
சிறுவகை பேழையும் உள்ளதால் நிலைப்பேழை எனக் குறித்துள்ளோம். சுவர்ப்பேழை மீதும் இதே போன்ற காரணமற்ற அச்சத்தால் வெருளி வரும்.
அறைகலன் வெருளி உள்ளவர்களுக்கு இவ்வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
Armario என்னும் இசுபானிய மொழிச்சொல்லின் பொருள் பேழை.
இச்சொல் போர்த்துகீசியர்கள் வாயிலாகத் தமிழில் புகுந்து அலமாரி எனப்படுகிறது.
00
- நிழல் வெருளி-Sciophobia/Sciaphobia/Umbraphobia
நிழல் குறித்த அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் நிழல் வெருளி.
சிலர் ஒளி குறைந்த அறையில் இருக்கும் பொழுது நிழல் கண்டு பெரிதும் அஞ்சுவர். சிலர் தனிமையில் தததம் நிழல் கண்டே அஞ்சுவர்.
scio / shadow என்னும் கிரேக்கச் சொற்களின் பொருள் நிழல்.
00
1478.நிறுத்த வெருளி-Insistophobia
ஊர்திகளை நிறுத்துவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் (ஊர்தி) நிறுத்த வெருளி.
நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்திய பின்னர் வரும் ஊர்திகளை நிறுத்துவோரால் தம் ஊர்தியைச் சரியாக எடுக்க முடியாது, பிற வண்டிகள் இடையூறாக அமையும், இதனால் காலத்தாழ்ச்சி ஏற்படும் என்றெல்லாம் பெரிதும் பேரச்சம் கொள்வர்.
சில நேரங்களில் நிறுத்துமிடம் இல்லாத இடங்களில் வண்டியை நிறுத்த வேண்டி வந்தாலும், வண்டியின் பாதுகாப்பு, போக்குவரத்துக் காவலர்கள் வண்டியை எடுத்துச் சென்று விடுவர், அதனை மீட்க அலைய வேண்டும், விதி மீறலுக்கான ஒறுப்புத் தொகை கட்ட வேண்டி வரும், என்பனபோன்ற கவலைகளைப் பெருக்கிக்கொண்டு தேவையின்றி அஞ்சுவர்.
Insist இலத்தீன் சொல்லின் பொருள் நிறுத்தல்.
00
- நில் சின்ன வெருளி – Stopsignphobia
நில் சின்னம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நில் சின்ன வெருளி.
திடீர் என்று நில் சின்னம் காட்டப்பட்டால் வண்டி ஓட்டுவதில் தடுமாற்றம் ஏற்படும், நேர்ச்சி ஏற்படும் எனப் பேரச்சம் கொண்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.
அவ்வாறு காட்டப்படுவது போக்குவரத்தில் இயல்பானதாக இருந்தாலும் தீக்குறியாக(அபசகுனமாக)க் கருதி அறியாமையால் கவலை கொள்வோரும் உள்ளனர்.
பயண வெருளி(amaxophobia) உள்ளவர்களுக்கும் நேர்ச்சி வெருளி (dystychiphobia) உள்ளவர்களுக்கும் நில் சின்ன வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
- நிறுத்தக வெருளி – Tingchechekuphobia
நிறுத்தகம்/ நிறுத்துக் கூடம் / நிறுத்தறை(parking garage) குறித்த வரம்பற்ற பேரச்சம் நிறுத்தறை வெருளி.
நிறுத்தகத்தில் வண்டியை விடுவதால் அல்லது அங்கிருந்து வண்டியை எடுப்பதால் இடர் ஏற்பட்டுக் காலத்தாழ்ச்சியாகி மேற்காெள்ளும் பணியில் இன்னல் ஏற்படும் எனக் கவலை கொள்வோர் உள்ளனர்.
தத்தம் வீடுகளில் வண்டி நிறுத்தறை இல்லாதவர்கள் வாடகை அடிப்படையிலான பொது இடங்களில் நிறுத்துவார்கள். வாடகை குறித்தும் பேணும் நிலை குறித்தும் தேவையற்ற கவலை கொள்வர்.
இவற்றால் நிறுத்தறை வெருளிக்கு ஆளாகின்றனர்.
Tingchecheku என்னும் (மண்டரின்) சீனச் சொல்லுக்கு நிறுத்தகம்/ நிறுத்துக் கூடம் / நிறுத்தறை(parking garage) என்று பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply