ஓமானில் பாரதி விழா
ஓமானில் பாரதி விழா
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்!
என்ற பாரதியின் கனவை, வள்ளுவர் நிறைவேற்ற பராசக்தி அருள் புரிந்தாள் என்றால், உங்களால் நம்ப முடியுமா? ஆம்!
கடந்த புரட்டாசி 4, 2049 (20-9-2018) வியாழன் மாலை ‘பாரதி யார்?’ எனும் மேடை நாடகம், மசுகட்டு மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் கபூசு பின் செய்யது அவர்களின் அருளோடும், வாழ்த்தோடும், அனைத்து மக்களின் ஆதரவோடும், மசுகட்டு நகரில் கோலாகலமாக அரங்கேறியது!
எசு.பி.படைப்பாளர்(SB Creations) இயக்குநர் இராமன் குழுவினர் இசைக்கவி இரமணனுடன் னமும்,
பாரதியை ஓமான் நாட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மசுகட்டு தமிழ் மக்களைக் கட்டிப்போடும் தந்திரம் பாரதிக்கு மட்டுமே உண்டு! அப்பப்பா! என்ன நடை! என்ன பாவனை! என்ன தோற்றம்! பாரதியே மீண்டும் வந்து விட்டானோ என்ற உணர்வை அனைவருக்கும் தந்தது இசைக்கவியின் ஒப்பற்ற தியாகத் தோற்றமான ‘பாரதி’!
அதற்குச் சற்றும் குறைவில்லாத வகையில் ஈடு கொடுத்து, செல்லம்மாவாகவே மாறினார் என் அன்புச் சகோதரி திருமதி தருமா இராமன்!
குவளை கிருட்டிணமாச்சாரியாராக நடித்த விசய் சிவா, தன்னுடைய ஓய்வற்ற நிகழ்வுக்கிடையே, இதற்கெனவே மெனக்கெட்டு வந்து, தன் பங்கைச் சிறப்பாகச் செய்து அனைவரையும் சிந்திக்க வைத்தார்!
அது மட்டுமா, அன்பு மகன் விவேக பாரதி, விட்டல் நாராயணன், பரமேசுவரன், கதிரவன்(சன்) தொலைக்காட்சி புகழ் சிரீ கணேசு, தீபா, கிருத்திகா, ஒப்பனைக் குமார், ஒளிவிளக்கு சார்லசு, மேடை அமைப்பிற்கு யுவராசு என அனைவரும் அவரவர் பணியில் மிளிர்ந்தனர்.
இதற்கு இசை அமைத்த என் அன்பு இளவல் வீணை வித்துவான் பரத்வாசு இராமன் தொடப் போகும் உச்சத்திற்கு அளவே இல்லை எனலாம்!
பாரதியார் பாடல்களுக்கு நடன அமைப்பச் செய்த திருமதி. இரேவதி சுந்தர் உழைப்பு அளவிட முடியாதது!
இவர்களோடு இணைந்து நடித்த உள்ளூர்ப் பங்களிப்பாளர்கள் தூள் கிளப்பினார்கள்!
இந்நிகழ்வை,
மசுகட்டில் வசிக்கும் கவிஞரும், எழுத்தாளருமான சுரேசமீ, நடத்தி வரும் திருக்குறள் பாசறை எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது! கவிஞரோடு துணை நின்ற கவிஞரின் மனைவி இரேவதி, குழ்நதைகள் சனனி (அனுசா), மீரா (அஞ்சனா), மற்றும் சுரேசு, சேகர், ஆனந்தி முதலான அத்துனை நண்பர்களும், விளம்பரதாரர்களும் இந்த நிகழ்வை ஒரு வெற்றித் திருவிழாவாகவே மாற்றியிருந்தனர்.
பாரதியின் கனவான அயல்நாடு செல்லவேண்டும் என்பது, ஓம் எனும் நாமத்தோடு தொடங்கும் ஓமானில் நிறைவேறி இருக்கிறது என்றால்,
கனவு மெய்ப்படும் என்ற மெய் வாக்கின் உண்மை விளங்கும்!
Leave a Reply