சார்சா தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம்!– இலக்குவனார் திருவள்ளுவன்
திருவள்ளுவரை இழிவு படுத்தும் சார்சா தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம்!
1966-ஆம் ஆண்டுமுதல் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 11 ஆவது உலகத்தமிழ் மாநாட்டைச் சார்சாவில் சூலை 2023இல் நடத்த இருப்பதாகத் தகவல் வந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. 90களில் அரசு சார்பாகத் துபாய் செல்ல வாய்ப்பு இருந்தும் வேறு அலுவல் பணிகளால் செல்ல முடியாமல் இருந்தது. எனவே, இப்பொழுது இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என எண்ணினேன். உலக மாநாடுகள் வணிக நோக்கு மாநாடுகளாகக் கருதி அவற்றைப் புறக்கணித்து வந்த நான், இம்முறை பங்கேற்கும் ஆர்வம் வந்தது. ஆனால் சில நாட்களிலேயே சிங்கப்பூரில் சூனில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற உள்ளதாகச் செய்தி வந்தது.
முன்னரே சிங்கப்பூருக்கு நான்கு முறை சென்று வந்துவிட்டமையால் இம்முறை அமீரகம் செல்லலாம் என எண்ணினேன். ஆனால் அறிவிப்புகளைப் பார்த்தால் இரண்டுமே உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நடத்தப்படுவதாக இடம் பெற்றிருந்தது. ஏன் இந்தப் பிளவு என்று அதிர்ச்சியாக இருந்தது. உடன் அறிவித்த முனைவர் பொன்னவைக்கோ அவர்களிடம் அலைபேசி வழி கேட்டேன்’ “ஓற்றுமையாகச் சிறப்பாக நடத்தலாமே” என்றேன்.
“எங்களுக்கும் அதுதான் எண்ணம். ஆனால் தவறு எங்கள் மீது இல்லை. 2019-ஆம் ஆண்டு சிகாகோவில் கடந்த 10 ஆவது உலகத்தமிழ் மாநாட்டில் 11 ஆவது மாநாட்டிற்கான குழுவிற்குத் தலைவராக என்னையும் பிற 9 பொறுப்பாளர்களையும் முன் மொழிந்து தெரிவு செய்தவர் அப்போதைய தலைவரே. அவரேதான் தன் பெயரில் இப்பொழுது 11 ஆவது உலகத் தமிழ் மாநாடு சார்சாவில் நடைபெறும் என அறிக்கை விடுத்துள்ளார். எங்களுக்கெல்லாம் இஃது அதிர்ச்சியாகத்தான் உள்ளது. அவரைப் பின்னிருந்து மற்றொருவர் முடுக்கி விடுகிறார். தான் தெரிவு செய்த குழுவைத் தானே ஏன் மாற்றுகிறார் எனத் தெரியவில்லை. அவர்களை அமைதிப்படுத்தி ஓர் அமைப்பாகச் செயல்பட்டால் எங்களுக்கும் மகிழ்ச்சியே” என்றார். தொடர்பான வேறு சிலரிடமும் வினவினேன். அவர்களும் இதேபோல்தான் கூறினர்.
இலங்கையில் இருந்து ஒரு நண்பர், “இரு மாநாடுகள் வேண்டா என எழுதுங்கள்” என்றார். “நான் எழுதினால் கேட்டுக் கொள்வார்களா? எனினும் உரியவர்களிடம் முன்னரே பேசியுள்ளேன்.” என விவரத்தைத் தெரிவித்தேன். மீண்டும் பேசுமாறு கூறி இலங்கையில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையை வெளியிடுங்கள் என்றார். “அந்த அறிக்கை உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்ற வரலாற்றைத் தெரிவிக்கும் விரிவான அறிக்கையாக உள்ளது. இரு தரப்பையும் ஒற்றுமைப்படுத்தும் வகையில் அறிக்கை தாருங்கள். வெளியிடுகிறேன்; சார்சா மாநாட்டினர் யாருடனும் எனக்குத் தொடர்பு இல்லை. தொடர்பு விவரங்களைத் தந்தால் அவர்களிடமும் பேசுகிறேன்” என்றேன். விரிவான அறிக்கையைச் சுருக்கச் செய்தியாக எழுதி வந்த நான், சுருக்க அறிக்கை வரும் என எதிர்பார்த்து அதனை முழுமையாக்கி வெளியிட வில்லை. மீண்டும் சிங்கப்பூர் மாநாடு நடத்தும் உ.த.ஆ.மன்றத்தினர் சிலரிடம் பேசினேன். வி.கே.டி.பாலனும் இதுகுறித்து நேரில் வந்து பேசியதாகவும் தாங்கள் எப்பொழுதும் ஒன்றுபட்டுச் செயல்படுவதையே விரும்புவதாயும் தெரிவித்தனர். இதனை இலங்கை நண்பரிடம் தெரிவித்தேன்.
அவர் சிறிது நாள் கழித்து “நீங்கள் அவர்கள் ஆள்” என்று எழுதியப் பதிவை எனக்கு அனுப்பினார். அப்பொழுது நான் அவர் சார்சா மாநாட்டினர் பக்கம் இருப்பதால் நடுநிலையாகக் கருத்து தெரிவிக்கும் என்னை இவ்வாறு கூறுவதாகப் புரிந்து கொண்டேன்.
யார் வேண்டுமென்றாலும் அல்லது எந்த அமைப்பு வேண்டுமென்றாலும் உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தலாம். ஆனால், ஒரே அமைப்பின் பெயரில் ஏட்டிக்குப் போட்டியாக மாநாடுகள் நடத்துவது இந்த அமைப்பைத் தோற்றுவித்த தனிநாயக அடிகளாருக்கும் அமைப்பில் முன்நின்ற அறிஞர்களுக்கும் இழுக்கு தேடுவதாகும். ஒரு மாநாடு முடிந்ததும் அடுத்த மாநாடு குறித்து முடிவெடுத்து முறையாக அறிவிப்பதே செல்லத்தக்கதாகும். எனவே, பத்தாவது மாநாட்டுப் பொதுக்குழு தேர்ந்தெடுத்த முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையிலான குழுவினர்தான் உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் உண்மைப் பொறுப்பாளர்கள். எனவே, இவர்கள் எடுக்கும் முடிவே சரி. மாற்றுக் கருத்து இருந்தால் இக்குழுவில் தெரிவிக்க வேண்டுமேயன்றிப் போட்டிக் குழுவை உருவாக்கக் கூடாது.
இதுவரை நான், எந்த மாநாட்டில் பங்கேற்கலாம் எனக் கேட்டவர்களிடம், “நீங்கள் உங்கள் வாய்ப்பிற்கேற்ப எந்த மாநாட்டிலும் பங்கேற்கலாம். இயலுமெனில் இரண்டு மாநாடுகளிலும் பங்கேற்கலாம். ஆனால், நான் முறையான அமைப்பு நடத்தும் சிங்கப்பூர் மாநாட்டில் பங்கேற்கிறேன்” எனத் தெரிவித்து வந்தேன்.
இப்பொழுது என் கருத்தை மாற்றிக் கொண்டேன்.
சார்சாவில் நடைபெறும் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டை உலகத்தமிழராய்ச்சி மன்றத்தின் பெயரில் நடத்தக் கூடாது. அதே பெயரில் நடைபெற்றால் இதனை உலகத் தமிழர்கள் புறக்கணிப்பதே முறையாகும். இது குறித்து உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தினர் வழக்கு தொடுத்து தடை பெறுவது சிறப்பாகும்.
புறக்கணிப்பதற்கு இதைவிட மற்றோர் இன்றியமையாத காரணம், இம்மாநாட்டில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்தரங்கப் பொருண்மைகள் உள்ளன. அவை குறித்துப் பார்ப்போம்.
இம்மாநாட்டில், சிறப்பான குறட்பணியைச் சிறப்பாக நடத்தி வரும் திருக்குறள் அமைப்பு ஒன்றுக்குத் தனி அமர்வு அளித்துள்ளனர். இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விழாக்களையும் 1330இற்கும் மேற்பட்ட ஆய்வரங்கங்களையும் நூற்றுக்கு மேற்பட்ட மாநாடுகளையும் நடத்தியுள்ளது இந்த அமைப்பு. வள்ளுவர் கோட்டத்தில் இதுவரை சனிதோறும் 975 ஆய்வரங்கங்களை நடத்தியுள்ளது. நானூறாயிரம் திருக்குறள் சான்றோர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் திருக்குறள் விருதுகள் வழங்கியுள்ளது. இதன் திருக்குறள் தலைமைத் தூதர் நூற்றுக்கணக்கிலான திருக்குறள் தூதர்களை அமர்த்தி அவர்கள் வழி குறள்நெறி பரப்புரை, குறளாய்வுகள் மேற்கொண்டு வருகிறார். நூற்றுக்கணக்கில் மேடையேற்றம், நூல்கள் வெளியீடு எனச் சிறப்பான பணிகளை ஆற்றி வரும் இதன் தலைமையிலுள்ள செம்மொழி விருதாளரான அறிஞருக்கு உலகின் உயர்ந்த விருது எதைக் கொடுத்தாலும் பொருத்தமாகத்தான் இருக்கும். ஆனால், ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு போல் இப்போது நடுநிலை என்ற போர்வையில் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் களங்கம் ஏற்படுத்தி வருவது வேதனையாக உள்ளது. என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கானவர்களின் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் வணக்கத்திற்கும் உரிய அவர் என்ன செய்கிறார் என்பதை எழுதவே கை கூசுகிறது. திருவள்ளுவர், திருக்குறள் தொடர்பான மாற்றுக் கருத்துகளுக்கும் மதிப்பளித்து உண்மையை வெளிக் கொணருகிறாராம். இதன்மூலம் அவ்வாறு சொல்பவர்கள் கருத்து தவறு என்பது மெய்ப்படுமாம். ஆனால், உண்மையில் இதுபோன்ற களங்க அமர்வுகள் நடைபெறவே அது வழி வகுக்கும்.
“1. திருக்குறள் ஆரியத் தழுவல் பெற்ற நூல்
2. ஆதி பகவன் என்னும் பெயரைத் திருவள்ளுவர் வேதங்களில் இருந்து
பெற்றார்
3. திருக்குறள் உலகப் பொதுமறை அன்று; அது இந்துத்துவா நூல்
4. திருவள்ளுவரின் காலம் கி. பி. பத்தாம் நூற்றாண்டு
எனச் சனாதனச் சார்பாளர்கள் பரப்பி வரும் கருத்துகளின் வன்மை மென்மைகளை ஆராய்வதே இவ்வமர்வின் நோக்கமாகும்.” என்பனவே இவ்வமைப்பின் கூற்றுகள்.
திருவள்ளுவர் தெலுங்கர், திருக்குறளை அதிகாரம் ஒன்றிற்கு ஒருவர் என நூற்று முப்பத்து மூவர் எழுதியுள்ளனர், திருவள்ளுவர் குறளி வகுப்பைச் சேர்ந்தவர்; எனவே, அவர் நூலுக்குக் ‘குறளி’ என்று பெயரிட்டு அது குறள் என மாறியது போன்ற வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளை ஏன் விட்டு விட்டார் எனத் தெரியவில்லை.
உண்மையிலேயே நடுநிலை ஆராய்ச்சி என்றால், திருக்குறள் ஆரியத் தழுவல் அல்ல, திருக்குறள் உலகப் பொதுமறையே, திருவள்ளுவரின் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என்பன போன்று தலைப்புகள் வழங்கியிருக்கலாமே. சனாதனச் சார்பாளர்கள் கருத்துகள் எனக் குறிப்பிட்டால் நடுநிலைமை ஆகிவிடுமா? அக்கருத்துகளுக்கு ஏன் முதன்மை தர வேண்டும்?
“திருக்குறளில் வருணாசிரமக் கருத்துகள்” போன்ற கொடுந்தலைப்புகளும் ஆராயப்பட உள்ளன. தலைப்பில் அவ்வாறு குறிப்பிட்டு விட்டு வருணாசிரமக் கருத்துகள் இல்லை என முடிப்பது நடுநிலையாகாது.
திருக்குறள் அமைப்பின் பெயரால் திருக்குறளை இழிவு படுத்தும் பொருண்மையிலான அமர்வை உடனே சார்சா மாநாட்டினர் நிறுத்த வேண்டும். திருக்குறளின் சிறப்புகளைக் கூற வேண்டுமென்றால் பொது அமர்விலேயே அவ்வமைப்பினர் தெரிவித்துக் கொள்ளலாம். இவ்வாறு அவ்வமைப்பிற்குத் தடை விதிக்க வில்லை என்றால் உலகத்தமிழன்பர்கள் யாவரும், குறள்நெறிப் பற்றாளர்கள் யாவரும் சார்சியா மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும்.
நடுவுநிலைமை அல்லது கருத்துரிமை என்ற போர்வைகளில் திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளுக்குத் தமிழ்நாட்டரசும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஓர் அமைப்பை முறையற்ற முறையில் பயன்படுத்தியும் திருவள்ளுவருக்குக் களங்கம் கற்பிக்கவும் நடைபெறும் மாநாட்டிற்கு எவ்வகை ஆதரவையும் தமிழ்நாட்டரசு தரக் கூடாது என்றும் வேண்டுகிறோம்.
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல். (திருவள்ளுவர்,திருக்குறள் 113)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை
ஐப்பசி 20, 2053 / 06.11.2022
Leave a Reply