(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 24/ 69  இன் தொடர்ச்சி)

 

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

25 / 69

வள்ளலார் முதல் சிற்பி வரை(2008): (தொடர்ச்சி)

பதினைந்தாவதாகப் புறநானூறு வரலாற்றுப்புதினமா என வினா எழுப்புகிறார்.

நடுநிலையற்ற சமற்கிருத விற்பன்னர்களும் தமிழ் உட்பகைவர்களும் தமிழ் இலக்கியங்களைப்பார்த்து உருவாக்கப்பட்ட சமற்கிருத இலக்கியங்களை முன்னதாகக் காட்டுவதற்காகச் சங்க இலக்கியக் காலங்களைப் பின்னுக்குத் தள்ளுவதையும் எடுத்து அவர்களின் முகத்திரையைக் கிழிக்கிறார்.

கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக மேலை இலக்கியக் கல்வியாளர்கள் சமற்கிருதக் கவிதையியலும் இலக்கியமும் தமிழ்க்கவிதையியல், இலக்கியம் ஆகியவற்றின் தாக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டு வருகிறார்கள். சமற்கிருத நூலாரின் தொனிக் கோட்பாடு தமிழரின் இறைச்சியிலிருந்து பெறப்பட்டது; காளிதாசன் பல கவிதை உத்திகளுக்குச் சங்கச் சான்றோர் கவிதைகளுக்குக் கடன்பட்டிருக்கிறான் என ஐயத்திற்கிடமின்றி நிலை நாட்டியுள்ளனர். இவற்றை நம் நாட்டு நடுநிலையான சமற்கிருத விற்பன்னர்கள்  ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் இப்பொழுது சங்க இலக்கியம் பெற்றுள்ள பெருமையைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டுத் தமிழின் உட்பகைவர்கள் மறைமுக முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்;அவற்றுள் ஒன்று எர்மன் தீகென்(Herman Tieken ) எழுதிய ‘தென்னிந்தியாவில் காவியம்: பழந்தமிழ்ச்சங்கக் கவிதை’ எனும் ஆங்கில நூல்(Kavya in South India: Old Tamil Cangam Poetry) ஆகும். இதன் முதல் நோக்கம் சங்க இலக்கியம் இதுகாறும் கருதப்பட்டு வந்த காலத்திற்கு மிகப் பின்னதென்று காட்டுவதே என முன்னுரையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் முடிவின்படி சங்க இலக்கியம் எட்டாம்நூற்றாணடின் இறுதி அல்லது ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முந்தியதாக இருக்க முடியாது. தமிழகத்தில் சமற்கிருத இலக்கியம் நுழைந்து பல காலம் சென்றே சங்க நூல்கள் தோன்றியிருக்க வேண்டுமென்றும் சங்கஇலக்கிய வகைகளெல்லாம் சில சமற்கிருதக் காவிய இலக்கிய வகைகளின் தழுவல்களே என்றும் சங்கப் பாடல் தமிழில் காவியம் எழுத மேற்கொண்ட முயற்சியின் விளைவே யென்றும் பொய்யுரை புகன்றிருப்பார். இவற்றை நமக்குப் பேரா.ப.ம.நா. எடுத்துரைக்கிறார். மேலும் இந்நூலின் ஆறாம் பகுதி புறநானூறு கற்பனையான சூழல்களையும் பாத்திரங்களையும் கொண்ட வரலாற்றுப் புதினம்(Puram as historical fiction) என்று கூறுவதையும் மறுக்கிறார்.

சங்க இலக்கியங்களை மொழிபெயர்ப்புகள் மூலம் நுனிப்புல் மேய்ந்த தீகென் புறநானூற்றுப் பாடல்களில் எது இயல்பு, எது கற்பனை, எது உலக வழக்கு, எது நாடக வழக்கு, எது மரபு, எது கவிஞனின் படைப்பு என்பவை போன்ற வேறுபாடுகளை யெல்லாம் நுட்பமாக நோக்காமல் தெரிவித்த அடிப்படையான ஏழு கருத்துகளை இக்கட்டுரையில் எடுத்துரைக்கிறார்.

எர்மன் தீகென்(Herman Tieken)  தெளிவாகவோ நிரல்படவோ கூறாமல் சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்லுதல், ஒரு கருத்தை முறையாக விளக்காமல் இன்னொன்றுக்குத் தாவிப் பின் மீண்டும் முன்னதற்குச் செல்லுதல், சான்றுகளை முறையாக விளக்கத் தெரியாமல் தடுமாறுதல், சங்கக் கவிஞர்களின் பெயர்களையும் தொடர்களையும் எழுத்துப் பிழைகளோடு தருதல் ஆகிய குற்றங்களைச் செய்துள்ளதைப் பேரா.ப.ம.நா. தெளிவுபடுத்துகிறார். சங்க இலக்கியச் சான்றோர் ஏ.கே.இராமானுசன், சியார்சு ஆர்த்து போன்றோர் கூறும் கருத்துகளை மறுக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறெல்லாம் அவர் பிழை பட எழுதி யுள்ளார்.

தீகென் தந்த ஏழு பொய்யுரைகளுக்கும் தக்க மெய்யுரைகளையும் அளித்துள்ளார். புறநானூற்றில் இடம் பெறும் வரலாற்று மாந்தர்களைக் கற்பனைப் பாத்திரங்கள் எனக் கூறும் தீகெனுக்கு வநன்மையாக மறுப்பு அளித்துள்ளார். தீகென், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் பற்றி அவர் பெற்றுள்ள குறை அறிவை வைத்துக்கொண்டு ஆய்வு நூல்களை எழுதாமல் மூல மொழியிலோ மொழி பெயர்ப்பிலோ புறநானூற்றுக் கவிதைகளை மீண்டும் மீண்டும் படித்து மகிழச்சி காணவும் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழுக்கு எதிராக இட்டுக்கட்டும் தவறான கருத்துகளைப் பரப்பியும் அத்தகைய போலிக் கருத்தாளர்களை உயர்த்தியும் வரும் கூட்டத்தார், ஆய்வுச் செம்மல் பேரா.ப.மருதநாயகத்தின் கருத்துகளைப் பரப்பியும் அவரைச்சிறப்பித்தும் போற்ற வேண்டும்.

பதினாறாவதாகவும் நிறைவாகவும் புறநானூற்றுப் பாடல்களின் மூன்று மொழி பெயர்ப்புகளை ஒப்பிட்டு ஆய்வுரை வழங்குகிறார்.

புறநானூற்றுப் பாடல்கள் பலவற்றிற்கு ஆங்கிலத்தில் கவிதையாகவும் உரைநடையாகவும் மொழி பெயர்ப்புகள் வந்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்த பின் வரும் மூன்று மொழி பெயர்ப்புகளைப் பேரா.ப.ம.நா.ஆய்விற்கு எடுத்துள்ளார்:

1.போப்பு அடிகளாரின் ‘தமிழ் வீரப்பாடல்கள்’(G.U.Pope, Tamil Heroic Poems. 1910).

2.ஏ.கே.இராமானுசத்தின் ‘காதலும் போரும் குறித்த பாடல்கள்’(A.K.Ramanujan, Poems of Love and War, 1985)

  1. சியார்சு ஆர்த்து, அங்குஎயிஃபெட்சு ஆகியோரின் ‘போரும் ஒட்பமும் குறித்த நானூறு பாடல்கள்’(George L.Hart & Hank Heifetz, The Four Hundred Poems of War and Wisdom, 1999)

  இவற்றுள் போப்பு அடிகளாரின் மொழி பெயர்ப்புத் தொகுதியில் 71 புறநானூற்றுப் பாடல்களும் ஏ.கே. இராமானுசத்தின் மொழி பெயர்ப்புத் தொகுதியில் 58 புறநானூற்றுப் பாடல்களும் சியார்சு ஆர்த்து – அங்கு எயிஃபெட்சு மொழி பெயர்ப்பில் புறநானூறு முழுமையும் கவிதை வடிவில் இடம் பெற்றுள்ளன.

மூவரின் மொழிபெயர்ப்புச் சிறப்புகளைப் பாராட்டும் பேரா.ப.ம.நா. சில பாடல்களின் மொழிபெயர்ப்புகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு ஒப்பீட்டுரை வழங்குகிறார். எனவே, நிறைகளை மட்டும் குறிப்பிடாமல், குறைபாடுகள் காணுமிடங்களில் அவற்றைக் குறிக்கவும் தவறவில்லை. புறநானூறு தமிழருக்கு அறிமுகமான பொழுது மொழிபெயர்ப்பைச் செய்தவர் போப்பு அடிகளார். அதன் சிறப்புணர்ந்து அதனைத் தமிழர்க்கும் மேலையோர்க்கும் சொல்லும் பணியில் ஈடுபட்டார் அவர். மேலை இலக்கிய வுலகில் இன்று புறநானூற்றிற்கும் ஏனைய சங்க இலக்கியங்களுக்கும்  கிடைத்திருக்கும் செல்வாக்கிற்குப் பெரிதும் காரணமானவர் இராமானுசன். சங்க இலக்கியங்கள் யாவற்றையும் பயின்று  கவிஞர் ஒருவரின் உதவியுடன் புறநானூற்றுக்கு முழுமையான மொழிபெயர்ப்பு தந்தவர் சியார்சு ஆர்த்து. போப்பு அடிகளாரின் வழக்கிழந்த ஆங்கிலத்தையும் இராமானுசத்தின் சில கவர்ச்சியான உத்திகளையும் தவிர்க்க வேண்டுமென்று இவர்கள் கருதியது தெளிவு. மூலப்பாடலின் சந்த இன்பத்தை ஓரளவிற்கேனும் மொழி பெயர்ப்பில் கொண்டு வர முனைந்திருந்தாலும் கூட்டு முயற்சியில் விளைந்த இம் மொழிபெயர்ப்பு முற்றும் விளக்க முறை மொழி பெயர்ப்பாகி மூலத்தின் முருகியல் சிறப்பைக் கொண்டுவர முடியாமல் போனது குறித்த வருத்தத்தையும் பதிவு செய்கிறார் பேரா.ப.ம.நா.

இவ்வாறு பதினாறு கட்டுரைகள் மூலம் புறநானூற்றுப் பாடல்களில் சொற்பொருள் விளக்கம், அணிநயம், உவமைநயம் முதலான சிறப்புகளையும் கருத்தாழங்களையும் மட்டும் பேரா.ப.ம.நா. காணவில்லை. இன்றைய திறனாய்வாளர்கள் பார்வையில் அவற்றை நமக்கு விளக்கிச் சிறந்த திறனாய்வுச் செம்மலாகத் தம்மை இந்நூல்வாயிலாக நமக்குக் காட்டுகிறார். சமற்கிருத வாணர்களின் பொய்யுரைகளுக்குத் தக்க மறுப்பாய்வைத் தெரிவித்துத் தமிழின் முதன்மைச் சிறப்பையும் நமக்குப் புலப்படுத்துகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 26/ 69 )