(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 20/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

21/ 69

வள்ளலார் முதல் சிற்பி வரை(2008): (தொடர்ச்சி)

‘முதல் நாவல்களில் மொழி அ்ரசியல் : பிரதாப முதலியார் சரித்திரமும் இந்துலேகாவும்’ என்னும் கட்டுரை அவ்விரண்டு புதினங்களையும் அவை ஆங்கிலம், சமற்கிருதம், தாய்மொழி ஆகியவற்றை அணுகும் முறைகளைக் கொண்டு ஒப்பிடுகிறது.

வேதநாயகர் தமிழுக்கும் பிற தாய்மொழிகளுக்கும் முதன்மை அளிக்கிறார்.  ஆனால், சந்துமேனோன் ஆங்கிலக் கல்வியை வலியுறுத்துகிறார்; இந்திய மொழிகளில் முதல் புதினங்கள் எழுதிய யாரும் வேதநாயகம்போல் தாய்மொழிக்கு முன்னுரிமை தரவில்லை என்பதையும் குறிப்பிடுகிறார்.

‘பாரதி சொல்லும் பகவத்து கீதை’ என்னும் கட்டுரையில், பாரதியின் ‘பகவத்து கீதை முன்னுரை’ என்னும் சிறு நூலை ஆய்விற்கு எடுத்துக் கொண்டுள்ளார். இந்நூலில் கீதையின் பொருளைத் தொகுத்துத் தரும் பொழுது பாரதி, தமக்கு விருப்பமான கருத்துகளை மட்டும் சொல்லி விரும்பத்தகாதவற்றை யெல்லாம் ஒதுக்கி விடுகிறார். தமிழர் அறிந்தால் வேதனைப்படுவார்களே, பெண்கள் படித்தால் உள்ளம் துடிப்பார்களே, தாழ்த்தப்பட்டவர்கள் கேட்டால் சினம் கொள்வார்களே என்று அவர் கருதிய எண்ணங்களை யெல்லாம் கீதையில் இருப்பதாகவே அவர் காட்டிக் கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

ஆல்பருட்டு சுவைட்சர்(Alert Schweitger), தமது ‘இந்தியச்சிந்தனையும் அதன் வளர்ச்சியும்’ என்னும் நூலில் கீதையையும் குறளையும் ஒப்பிடுகிறார்; குறள்போன்ற பேரறிவைக் காட்டும் நூலை உலக இலக்கியத்தில் எங்கும் காண முடியாது; என்கிறார். திருக்குறளை அறியாத மேலை அறிஞர்கள் கீதையைப் பெரிதுபடுத்திப் பேசுவது இயல்புதான். ஆனால், திருக்குறளை மூலத்தில் ஆழ்ந்து பயிலும் வாய்ப்பைப் பெற்ற பாரதி, கீதைக்கு விளக்கம் எழுதி அதனைவாழக்கை நூலாகப் பரிந்துரைப்பது பாரதி அன்பர்கள் வருந்துவதற்குரிய செயல் என்கிறார்.

‘பாவாணரின் மொழியியல் கோட்பாடுகள்’ என்னும் நெடுங்கட்டுரையில் பாவாணர் மேலைமொழிநூல் வல்லாரிடமிருந்து வேறுபட்டு முன் வைத்த கருத்துகளையெல்லாம் சுருக்கமாகத் தந்து அவரெடுத்த முடிவுகளே சரியானவை என்பதைத் தெளிவு படுத்துகிறது.’இன்றைய நோக்கில் பாவாணரின் அறைகூவல்கள்’ என்னும் கட்டுரை மறைமலை அடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார்போன்ற தனித்தமிழ் இயக்கப் போராளிகளைத் தமிழ் வெறியர்கள் என்று ஒதுக்கி அவர்களின் அறிவுரைகளுக்குத் தமிழர்கள் செவிசாய்க்க மறுப்பது தவறென எடுத்துக் காட்டுகிறது.

‘இனப்பற்று: தமிழரும் மேலை அறிஞர்களும்’  என்னும் கட்டுரை இனப்பற்று மிக்கவர்கள் என்பதாலேயே தமிழறிஞர்கள் சிலர், தாம் வாழ்ந்த காலத்தில்  புகழும் பதவியும் மறுக்கப்பட்டு முடிந்த அளவு இருட்டடிப்புச் செய்யப்பெற்ற கொடுமைகளைக் குறித்துப் பேசுகிறது.

‘பெருஞ்சித்திரனார் பாடல்களில் மரபும் தனி ஆற்றலும்’ என்னும் கட்டுரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை வரலாற்றில் உரிய சிறப்பிடம் தரப்படாமல் ஒதுக்கப்பட்டவரான பெருஞ்சித்திரனாரின் கவிதை எம்மரபைச் சார்ந்தது என்பதையும் அதன் தனித்தன்மைகள் யாவை என்பதையும் விளக்குகிறது.பெருஞ்சித்திரனார் தமிழின் பெருமையையும் தொன்மையைும் சொல்லும்போது பேருவகையும் தமிழின் நிலை இவ்வாறு உள்ளது என உரைக்கும்போது அவலமும் ஆறாத்துயரமும் தமிழின் புறப்பகைவரைச் சாடும்போது அறச்சினமும் உட்பகைவரைச் சுட்டும்போது நகையும் எள்ளலும் தமிழுக்கு உழைப்போரைப் போற்றும்போது பெருமிதமும் தமிழைக் காட்டிக்கொடுப்போரை ஏசும்போது இளிவரலும் அருவருப்பும் தூண்டப்படும் என்கிறார்.

‘பின்னைக் காலனித்துவப் பின்னணியில் தங்கப்பா’ என்னும் கட்டுரை மூலம்,இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மரபுக் கவிதைக்குத் தொடர்ந்து ஏற்றத்தை அளித்து வரும் இலெனின் தங்கப்பாவைச் சிறப்பிக்கிறார். ‘சிற்பியின் சிறையில் மகாகவி’ என்னும் கட்டுரை சிற்பி எழுதிய ‘பாரதி – கைதி எண்:253’ எவ்வகை இலக்கியத்தைச் சார்ந்தது என்னும் கேள்விக்கு விடை காண முயன்றுள்ளது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 22/ 69  இன் தொடர்ச்சி)