பெயரை மாற்றிக் கொண்ட மலேசிய (உலகத் தமிழ்) மாநாட்டினருக்குப் பாராட்டு. – இலக்குவனார் திருவள்ளுவன்
பெயரை மாற்றிக் கொண்ட மலேசிய (உலகத் தமிழ்)
மாநாட்டினருக்குப் பாராட்டு.
மலேசியாவில் இவ்வாரம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற இருப்பதை அறிவீர்கள். இது குறித்து முன்னரே “போட்டிக் குழுவை உருவாக்கக் கூடாது. “ என அகரமுதல இதழில் (06.11.2022) “திருவள்ளுவரை இழிவு படுத்தும் சார்சா தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம்!” என்னும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். எனினும் மன்றத் தலைவர் முனைவர் மு.பொன்னவைக்கோவிடமும் பிற பொறுப்பாளர்களிடமும் ஒன்றுபட்டு நடத்துவதே சிறப்பு என வலியுறுத்தி வந்தோம்.
“அடுத்தடுத்து இரு தமிழ் மாநாடுகள் எதற்கு? முதல்வர் ஒன்றிணைக்க வேண்டும்!” (அகரமுதல – ஏப்பிரல் 23,2023) என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
“11ஆவது உலகத்தமிழ் மாநாடு முடிந்தது. மலேசியா தமிழ் மாநாட்டின் நிலை என்ன?” என்னும் கட்டுரையில் (சூலை 12, 2023) “மலேசிய மாநாட்டினரும் தவற்றினை உணர்ந்து புதிய அமைப்பின் பெயரில் முதல் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும். அத்தகைய மாநாட்டிற்கு நம் பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக!” எனக் குறிப்பிட்டிருந்தோம்.
நம் சார்பில் பொதுநல வழக்குரைஞர் தமிழ் இராசேந்திரன் அமைப்பினருக்கு மடல் அறிவிக்கை அனுப்பியிருந்தார். அதில் மன்றத்தை வேறு பெயரில் நடத்தத் தடையில்லை என்றும் புதிய அமைப்பு என்னும் பொழுது முதல் மாநாடாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மன்றத்தின் பெயரில் முறையான வங்கிக்கணக்கு இருக்கையில் அலைபேசி வழியாகப் பணம் பெறுவது குருவிகள் மூலம் பெறுவதற்கு ஒப்பாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மலேசியக் காவல் துறைத் தலைவருக்கும் இது குறித்து முறையீடு அனுப்பியிருந்தார்.
இவற்றின் தொடர்ச்சியாக நம் தரப்பு உண்மையை உணர்ந்து பெயரை மாற்றிக் கொண்ட மாநாட்டினரை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்.
மலேசிய மாநாடடினர் அமைப்பின் பெயரை மாற்றிக் கொண்டதாகச் செய்தி வெளியிடாவிட்டாலும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பெயரில் மாநாடு நடைபெறுவதாகச் செய்தியறிக்கை அளித்துள்ளனர். இவ்வாறே செய்திகளும் வருகின்றன. எனவே நம் வேண்டுகோளை ஏற்று இருக்கின்ற அமைப்பின் பெயரைப் பயன்படுத்தாமல் புதிய பெயர் சூட்டிக் கொண்டமைக்காக மாநாடடினரைப் பாராட்டுகிறோம். அதே நேரம் தமிழ்நாட்டில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் என அரசு நிறுவனம் உள்ளமையால் பெயர்க்குழப்பம் வரலாம். எனவே, ஞாலத்தமிழ் நிறுவனம் அல்லது பன்னாட்டுத் தமிழ் நிறுவனம் என்னும் பெயர்போல் மாற்றி வைத்துக் கொள்ளலாம்.(இது குறித்தும் முன்னரே குறிப்பிட்டிருந்தோம்.)
உண்மையை உணர்ந்து பெயரை மாற்றிக் கொண்டவர்கள் தாங்கள்தான் உண்மையான அமைப்பு என்ற எண்ணத்தை விதைக்கும் வகையில் 11ஆவது மாநாடு எனக் குறிப்பிடுவது சரியல்ல. முறையான அமைப்பின் பெயரில் 11ஆவது உலகத்தமிழ்மாநாடு தமிழ் நாட்டில் (சென்னையில்) நடந்து முடிந்து விட்டது. எனவே அவ்வாறு குறிப்பது சரியல்ல. அ்தே நேரம் 12ஆவதுமாநாடு என்று குறிப்பதற்கும் தகுதியில்லை. எனவே, வீம்பாக எண்ணாமல் தங்கள் நிறுவனத்தின் முதல் மாநாடு என்று குறிப்பதே சிறப்பு என்பதை உணர்த்த விரும்புகிறோம்.
இச்சூழலில் மற்றொன்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஓர் அமைப்பிலிருந்து சிலர் விலகிப் போட்டி அமைப்பை உருவாக்கினால் பிரிவு என்றோ பிளவு என்றோ சொல்லலாம். அப்பொழுது எது உண்மையான அமைப்பு என்ற வினா எழும். இப்பொழுது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றப் பொறுப்பாளர்கள் யாரும் விலகவில்லை. இதன் முன்னாள் தலைவர் தன்னைத் தலைவராகக் கொண்டு ஓர் அமைப்பை உருவாக்கிக் கொண்டார். எனவே, இது புதிய அமைப்புதான். இப்போதைய பெயர் மாற்றமும் புதிய அமைப்பு என்பதை உறுதி செய்துள்ளது. எனவே, முதல் மாநாடாகச் சிறப்பாக நடத்த வேண்டி வாழ்த்துகிறோம்!
வாழ்க உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்!
வெல்க உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்!
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின். (திருவள்ளுவர்,திருக்குறள் 111)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
சரியான போக்கு! பொதுவாக இலக்கிய, மொழியியல் களங்களில் இத்தகைய போட்டிகள் இருப்பது வழக்கம்தான். ஆனால் இம்முறை போட்டி மனப்பான்மையையும் தாண்டித் தாங்கள் சொன்னதைக் கேட்டுப் பெயரை மாற்றிக் கொள்ள மேற்படி அமைப்பினர் முன்வந்திருப்பது உண்மையிலேயே பாராட்டுக்கு உரியது. பெயரை மாற்றிக் கொண்டவர்கள் நிகழ்வின் எண்ணிக்கையையும் மாற்றிக் கொண்டால் மாற்றம் முழுமையானதாகவும் போற்றுதலுக்குரியதாகவும் இருக்கும்.