(தோழர் தியாகு எழுதுகிறார் 153 : சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி தொடர்ச்சி)

காந்தியாரின் இந்திப் பிரசார சபாவும்

மோதியாரின் தமிழ்ப் பிரசார சபாவும் 1

 

இனிய அன்பர்களே!

வாயால் வடை சுடுவதில் வல்லவரான இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி புதிதாக ஒரு வடை சுட்டிருக்கிறார். அதுதான் ‘தமிழ்ப் பிரசார சபா’.

இந்தி மொழியைப் பரப்ப 1918ஆம் ஆண்டு காந்தியார் தென்னிந்திய இந்திப் பிரசார சபை (தட்சிண் பாரத் இந்தி பிரசார சபா) அமைத்தது போல் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி நாடெங்கும் தமிழ்ப் பிரசார சபா அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார். மாநிலத் தலைநகரங்களில் தமிழ் பிரசார சபைக்குக் கிளைகள் அமைக்கப்படும் என்றும், இவை தமிழறிஞர்களின் பொறுப்பில் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்தப் பிரசார சபைகளில் தமிழ் கற்றுத் தேர்ச்சி பெறுவோர்க்கு சான்றிதழும் பட்டயமும் வழங்கப்படுமாம்!

மோதியின் அறிவிப்பில் இந்தத் தமிழ் பிரசார சபைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற ஒரு கேள்விக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை. அஇஅதிமுக தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காலத்தில் இதே போன்ற தமிழ்ப் பண்பாட்டு மையம் அமைக்க இந்திய அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பியதாகவும், ஆனால் இந்திய அரசு நிதி வழங்காமையால் அத்திட்டம் கருக்கலைந்து போனதாகவும் அப்போது அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராசன் சொல்கிறார்.

மோதி திருக்குறள் சொல்வார், பாரதியார் என்பார், புறநானூறு, அகநானூறு எல்லாம் பேசுவார், தமக்குத் தமிழ் தெரியவில்லையே என்று வருந்துவார், தமிழ்தான் உலகிலேயே பழமையான மொழி என்றெல்லாம் பெருமை பீற்றுவார். சமற்கிருதத்தை விடவும் தமிழ் பழமையானது என்று சொல்லுமளவுக்குக் கூட செல்வார். இப்போது தமிழ் பிரசார சபை என்றும் தம்பட்டம் அடிப்பார். ஆனால் இதற்கு நிதி ஒதுக்குவது பற்றி மட்டும் ஊமையாக இருந்து கொள்வார் என்றால், எப்படி இவரது தமிழ்க் காதலை நம்புவது?

தமிழ்ப் பிரசார சபைக்கு நாளைக்கே இந்திய அரசு ஒரு தொகை ஒதுக்கக் கூடும். அது எவ்வளவு என்பதும், எப்படிச் செலவிடப்படும் என்பதும்தான் முகன்மைக் கேள்விகள். இது வரைக்குமான பட்டறிவு என்ன? இந்திக்கும், சமற்கிருதத்துக்கும் இந்திய அரசால் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு? தமிழுக்கு எவ்வளவு? இப்போது மோதி இதில் பெரிய மாற்றம் செய்யப் போகிறாரா?

இந்தியக் குடியரசு அமைந்த காலத்திலிருந்து இந்தி, வடமொழி (சமற்கிருதம்) தவிர வேறு எந்த மொழி வளர்ச்சிக்காகவும் நடுவண் அரசு நிதி ஒதுக்கியதில்லை. அப்போது இந்திய அரசமைப்பின் எட்டாம் அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 14 மொழிகள் இடம் பெற்ற போதிலும் இந்திக்கும் சமற்கிருதத்துக்கும் மட்டுமே இந்திய அரசின் காசு செலவிடப்பட்டது. இப்போது இந்த அட்டவணையில் 22 மொழிகள் இடம் பெற்றுள்ள போதிலும் இந்திக்கும் சமற்கிருதத்துக்கும்தான் சிறப்புச் சலுகையாகக் கொழுத்த செலவு!

1977க்குப் பின் வடமொழி செம்மொழி என்று சொல்லி அதற்கென இந்திய அரசு வழக்கத்துக்கு மேல் சிறப்பு ஒதுக்கீடு செய்தது. செம்மொழிகள் என்ற வகையில் அரபு, பாரசீக மொழிகளுக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஒதுக்கீடு செய்தது.

நான் 1994ஆம் ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) மாநாட்டுக்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்றிருந்த போது சிக்காகோவில் திரு பாபு அவர்களின் இல்லத்தில் சில நாள் தங்கியிருந்தேன். அப்போது அவர் என்னிடம் “தமிழைச் செம்மொழியாக ஐநா அறிந்தேற்கச் செய்ய வேண்டும்” என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.

“நாங்கள் ஏற்கெனவே ஐநா அமைப்பான யுனெசுகோ-வை அணுகி வருகிறோம். ஆனால் அரசு வழியாக இந்தக் கோரிக்கை வந்தால்தான் எடுபடும். இந்திய அரசிடம் இந்தக் கோரிக்கையைத் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பலரிடம் இது பற்றிப் பேசியிருக்கிறோம். தமிழ் அமைப்புகள் இதற்கு முன்முயற்சி எடுத்தால் வெற்றி பெற முடியும்.”

யாரும் அறிந்தேற்றாலும், இல்லையென்றாலும் தமிழ் எல்லா வகையிலும் செவ்வியல் மொழிதான். செம்மொழிகளுக்கெல்லாம் செம்மொழிதான்! பரிதிமாற் கலைஞர் முதல் முனைவர் வா.செ. குழந்தைச்சாமி வரை செம்மொழிகளுக்கெல்லாம் செம்மொழியான உயர்தனிச் செம்மொழி தமிழ் என்ற கருத்தை நிறுவினார்கள். ஆனால் தமிழின் செம்மொழித் தகுதியை ஐநாவின் கல்வி பண்பாட்டு அமைப்பு அறிந்தேற்றால் பல வகையிலும் தமிழுக்கு வளம் சேர்க்க வழி பிறக்கும். இந்திய அரசு வடமொழிக்குச் செலவிடுவது போல் தமிழுக்கும் செலவிட வேண்டி வரும்.    

நான் என் ஐயத்தைச் சொன்னேன்: “தமிழை ஒரு தேசிய மொழியாகவே இந்திய அரசமைப்பு அறிந்தேற்கவில்லை. தமிழ்நாட்டிலேயே ஆட்சிமொழி, கல்விமொழி, நீதிமொழி என்ற நிலைகளை முழுமையாக அடையப் போராட வேண்டியுள்ளது. செம்மொழி அறிந்தேற்பால் என்ன பெரிய பயன் விளைந்து விடப் போகிறது?”

“செம்மொழித் தகுதி என்பது தனி. அதற்கு அங்கீகாரம் பெறுவது தமிழுக்கான ஆக்கப் பணிகள் செய்ய உதவும். மற்றபடி உங்கள் போராட்டம் தொடர்வதில் சிக்கல் இல்லை.”       இதற்கிடையில் தமிழைச் செம்மொழியாக அறிந்தேற்கக் கோரி சாலை இளந்திரையன், சாலினியார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களும், புலவர் சுந்தரராசனைச் செயலாளராகக் கொண்ட தலைநகர்த் தமிழ்ச் சங்கமும் மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டத்தாலும், விடா முயற்சியாலும் செம்மொழிக் கோரிக்கை வலுப்பெற்றது. செம்மொழிக் கோரிக்கைக்காகப் போராடத் தில்லி சென்றிருந்த போதுதான் சாலினியார் ஒரு சாலை நேர்ச்சியில் (விபத்து) உயிரிழந்தார்.

2004ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வென்று மன்மோகன் சிங்கு தலைமையிலான அமைச்சரவையில் திமுகவும் இடம்பெற்று, தமிழ் செம்மொழி என்று அறிந்தேற்கப் பெற்றது. “அம்மா எனக்கும்” என்று தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியம் என்று ஒவ்வொரு மொழியாகக் கேட்ட போது எல்லாமே செம்மொழிதான் என்று அறிவிக்கப்பட்டது – தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்குவதைப் போலத்தான்! அல்லது கோயிலில் சுண்டல் வழங்குவதைப் போலத்தான்!

இப்போது, தமிழ், வடமொழி உட்பட 6 இந்திய மொழிகள் செம்மொழிகளாக அரசின் அறிந்தேற்பைப் பெற்றுள்ளன. இந்த ஆறு மொழிகளுக்கும் இந்திய அரசு செய்யும் நிதி ஒதுக்கீட்டை ஒப்பாய்வு செய்தால் இந்திய அரசின் பாகுபாடான அணுகுமுறை தெட்டெனப் புலப்படும்.

2017-18, 2018-19, 2019-20 ஆகிய மூன்றாண்டுகளை எடுத்துக்காட்டாகக் கொள்வோம். மோதி ஆட்சிக்கு உட்பட்ட இந்த மூன்றாண்டுகளில் தெலுங்கு, கன்னட மொழிகள் ஒவ்வொன்றுக்கும் சம அளவில் முதலாண்டு ஒரு கோடியும், இரண்டாம் ஆண்டு 99 இலட்சமும், மூன்றாம் ஆண்டு 1.07 கோடியும் ஒதுக்கப்பட்டன. ஒடிய, மலையாள மொழிகளுக்கு வளர்ச்சி மையங்களும் அமைக்கவில்லை, நிதியும் ஒதுக்கவில்லை.

அதேநேரத்தில், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னையைச் சேர்ந்த தன்னாட்சி அமைப்பான மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் (CENTRAL INSTITUTE OF CLASSICAL TAMIL – CICT) தமிழுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி குறைந்துள்ளது. 2017-18ஆம் ஆண்டில் ரூ.10.59 கோடியும், 2018-19இல் ரூ.4.56 கோடியும், 2019-20இல் ரூ.7.7 கோடியும் ஒதுக்கப்பட்டன. இது நாடாளுமன்றத்தில் அரசு சார்பில் தரப்பட்ட தகவல்.

இதே மூன்றாண்டுகளில் வடமொழிக்கு ஒதுக்கியது எவ்வளவு தெரியுமா?   

2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் சிவசேனா உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர் அளித்த விடையில், “மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (HRD) இராசுட்டிரிய சமற்கிருத சன்சுதானத்தை நிறுவியதாகவும், அதற்காக கடந்த 3 ஆண்டுகளில் உரூ.643.84 கோடி நிதி ஒதுக்கியதாகவும் கூறப்பட்டது. சன்சுதானுக்கு 2019-20-ஆம் ஆண்டில் உரூ.231.13 கோடியும், 2018-19இல் உரூ214.28 கோடியும், 2017-18இல் உரூ198.31 கோடியும் ஒதுக்கப்பட்டன” எனக் கூறப்பட்டது.

அதாவது மூன்றாண்டுக்கும் சேர்த்து ஏழு கோடி மக்கள் பேசும் தமிழுக்கு 22 கோடிக்கும் குறைவு. 2011ஆம் ஆண்டுக் கணக்குப்படி வெறும் 45 ஆயிரம் பேர் பேசும் வட மொழி சமற்கிருதத்துக்கு உரூ.643 கோடி! 45 ஆயிரம் பேருக்குத் தெரிந்த மொழிக்கு 643 கோடி! தமிழ்நாட்டில் மட்டும் 7 கோடிப் பேருக்குத் தெரிந்த மொழிக்கு 22 கோடி!  

வடமொழி யாருக்கும் தாய்மொழி இல்லை! அது மக்கள் மொழியன்று, செத்த மொழி!  தமிழ்நாட்டில் அக்கிரகாரத்திலும் தமிழ்தான் பேசுகிறார்கள். ஆண்டவனோடு அந்தரங்கம் பேசுவதற்கு மட்டும்தான் வடமொழி! அது இலத்தீன் போல் வெறும் சமயச் சடங்கு மொழி! அதற்கு ஏன் இவ்வளவு பெருந்தொகை செலவிட வேண்டும்? அந்த மொழியில்தான் புராணங்கள் உள்ளன, வேதங்கள் உள்ளன. வருண சாதிக் கட்டமைப்பைக் காத்து இந்துத்துவ அரசியலை ஊட்டி வளர்க்க வடமொழி தேவை.

தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல்
174