(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

9/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

10/ 69

 

இருபத்தாறாம் கட்டுரை வாசிப்போன் – அனுபவத் திறனாய்வு.

இத்தலைப்பில் தமிழ் வாசிப்புகளை ஆராயும் பேரா.ப.ம.நா. பின் வரும் குறிப்பிடத்தக்க கருத்துகளை நமக்கு அளிக்கிறார். 

ஒரு நூல் அதனை வாசிப்போரிடம் எத்தகைய மன உணர்வை ஏற்படுத்துகிறது? படிப்போர் யாவரும் பெறும் துய்ப்பு ஒரு தன்மையதா? நூல் கூற முயலும் பொருளும் கற்போன் புரிந்து கொள்ளும் பொருளும் ஒன்றாகவே இருக்குமா? ஒரு நூலைப் பலர் பலவாறு புரிந்து கொள்ளும்போது அப் பல பொருள்களையும் அந்நூல் கூறும் பொருள்களாக ஏற்றுக் கொள்ளவேண்டுமா? சில பொருள்கள் பொருத்தமுடையவை, சில பொருத்த மற்றவை, ஒரு பொருளே சரியானது, மற்றவை தவறானவை. ஒரு பொருள் சிறந்தது, ஏனையவை சிறப்பற்றவை என்றெல்லாம் பேசுவது முறையாகுமா? வாசிப்போன் -துய்ப்புத் திறனாய்வு (Reader-Response Criticism) எனும் அணுகுமுறை இத்தகைய வினாக்களை எழுப்பி ஆராய்கிறது. அதனோடு அமையாமல் வாசிக்கும் முறையிலும் பனுவல்களைப் புரிந்து கொள்ளும் வகையிலும் நமக்குத் துணை செய்யக் கூடிய கருத்துகளைத் தரவல்ல முன்மாதிரியான செயற்பாட்டுத் திறனாய்வையும்(Applied Criticism) மேற்கொள்கிறது.

இவ்வாறு அடுக்கடுக்கான வினாக்களைத் தொடுத்து நம்மைத் தெளிவுபடுத்தும் பேரா.ப.ம.நா.,நம் தமிழ் மூதாதையர்களும் ஓர் இலக்கியம், கேட்போனிடம் எத்தகைய உடனடித் தாக்கத்தை ஏற்படுத்த வல்லதென்பதில் கவனம் செலுத்தினர் எனவும் விளக்குகிறார்.

இறைவன் படைத்ததாக உயர்த்திச் சொல்லப்படும் வேதத்தைவிட மாணிக்கவாசகரின் திருவாசகம் உயர்ந்தெதன்று சிவப்பிரகாசர் கூறுவதும் இம்மரபின் வழிதான். வேதம் கேட்டு மனம் உருகுவார் யாவரும் இலராகத் திருவாசகம் யாவரையும் உருக்கும் தன்மை கொண்டிருப்பது அதன் சிறப்பை நிலைநாட்டும் என்பது அவர் துணிபு.

வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி

நெஞ்ச நெக்குருகி நிற்பவர்க் காண்கிலேம்;

திருவாசகம் இங்கு ஒருகால் ஓதில்

கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்

தொடுமணல் கேணியில் சுரந்து நீர்பாய

என இதனைச் சிறப்பாகக் கூறுவார்.

வாசிப்போன் துய்ப்பிற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு வேண்டுமா?

அருட்திரு இராமலிங்க அடிகளாரும் திருவாசகம் விளைவித்த தாக்கத்தை, அஃது தம் உடலையும் உயிரையும் முழுதுமாக ஆட்கொண்ட இன்பத்துய்ப்பாக விளக்குவார்.

புதினத்தின் பொருளை, ஒரு தனி நடை கட்டுப்படுத்தாதலால் அதனைப் பலர் பலவாறாகப் புரிந்து கொள்வதும், ஒருவரே வெவ்வேறு வாசிப்பில் வெவ்வேறு வகையாகப் புரிந்து கொள்வதும் இயற்கை என்கிறார் ஐசர். ஆதலின் வாசகன் படிப்பதன் பொருளைப் புரிந்து கொள்ளத்  தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பார் அவர். இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகத்தான் பல கவிதைகள் அவரால் தரப்படுகின்றன.

உறைகழி வாளின் உருவு என்பது இருபத்தேழாம் கட்டுரை.

உறைகழி வாள் என்றால் உறையிலிருந்து நீக்கப்பட்ட வாள் (உருவம்போல்) எனப் பொருள். பள்ளியறையில் தலைவி படுத்துள்ளாள். அருகில் வரும் தலைவன் அவள்மீது போர்த்தியுள்ள துணியை நீக்குகிறான். அப்பொழுது உறையிலிருந்து நீக்கியதும் வாள் பளிச்சென்று ஒளிவீசுவதுபோல் அவள் உறுப்புகள் பளிச்சிடுகின்றன. நாணமுற்ற தலைவி கூந்தலினால் மறைக்க வேண்டிய உறுப்புகளை மறைக்கிறாள். இதனை விளக்கவரும் புலவர்  விற்றூற்று மூதெயினனார் உறைகழி வாளின் உருவு என்னும் உவமையைக் கையாண்டுள்ளார்.

சங்கச்சான்றோர்கள் எழுதிய கவிதைகளின் வெற்றிக்குக் காரணம் அவர்கள் சொல்லுவதை அழகாகச் சொல்லத் தெரிந்திருந்ததுபோலவே சொல்லத் தேவையற்றதையும் சொல்லக்கூடாததையும் சொல்லாது விடும் கலையிலும் வல்லுநர்களாய் இருந்தமையே ஆகும் என எடுத்துரைக்கிறார் பேரா.ப.ம.நா. அதற்கு அவர் தேர்ந்தெடுத்தது மேலே விளக்கியுள்ளவாறு அகநானூற்றில் வரும் 136 ஆவது பாடல். “கவிதையின் ஒவ்வொரு சொல்லும் ஒலியும் காட்சியுருவும் கவிதை கூற முனையும் முழுப் பொருளுக்கும் கவிதை படிப்போனிடம் விளைவிக்கும் இறுதித் தாக்கத்திற்கும் துணை செய்வனவாய் அமையும். இத்தகைய பங்களிப்பைச் செய்யாத எதனையும் கவிதையில் காண்பது அரிது. அகப்பாடல் ஒவ்வொன்றும் ஒரு பாத்திரத்தின் கூற்றாக, ஒரு குறிப்பிட்ட சூழலில் வெளிவரும். இச்சூழலைத் தெளிவுபடுத்தித் திணையும் துறையும் பின்னால் வந்தவர்களால் சேர்க்கப்பட்டன. பேசும்பாத்திரத்தையோ சூழலையோ மாற்றிக் கவிதையைப் படிக்கும்போது கிடைக்கும்  பொருள் வேறாவதும் உண்டு.” என்றும் விளக்குகிறார்.

இருபத்தெட்டாம் கட்டுரை நடையியல்.

ஓர் எழுத்தாளன் கையாளுகின்ற மொழி நடையை அறிவியல் முறையில் ஆராய்வது நடையியல்(Stylistics) ஆகும். கிரேக்க உரோமானிய நாடுகளில் பழங்காலத்தில் சொற்பொழிவாளர்களின் மொழி நடையை விளக்குவதற்கான கோட்பாடுகளையும் அணிவகைகளையும் வகுத்துப் பேச்சுத்திறனியல்(Rhetoric) என உருவாக்கியதையும் அது வளர்ந்து நடையியலாக மலர்ந்ததையும் பல்வேறு நடையியல் குழுவினரைப்பற்றியும் விளக்குகிறார்.

இருபத்தொன்பதாவது கட்டுரை என்புருகிப்பாடுகின்றிலை என்பதாகும்.

ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு

 அன்பு இலை என்புருகிப்பாடுகின்றிலை

என்பது மாணிக்க வாசகரின் திருவாசகப் பாடலடி. இதனை அடிப்படையாகக் கொண்டு பழந்தமிழ்ப்பாடலின் சிறப்பான நடையியலைக் குறிக்கிறார். அன்பினால் என்பு உருகுவதில்லை. ஆனால், கவிஞர் தம் மனம் அன்பின் ஆழத்தைக் காட்டவில்லையே என்பதைச் சொல்ல “என்பு உருகிப்பாடுகின்றிலை” என்று முற்படுத்திக் காட்டும் (foregrounding) உத்தியைக் கையாளுவதையும் விதந்தோதுகிறார். திருவாசகத்தில் ஒவ்வொரு பாடலையும் உளி கொண்டு செதுக்கிய சிற்பம்போல் அளித்துள்ளமையை அழகுபட விரிவாக விளக்குகிறார். 

கவிதையின் வடிவம், அதன் சொல்லமைப்பு, ஒலியமைப்பு ஆகியவற்றில் ஈடுபாடு காட்டும் நடையியல் குறித்து முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டவர், நடையியல் அணுகுமுறை தமிழ் இலக்கிய மரபிற்குப் பெரிதும் ஏற்றது என இக்கட்டுரையில் விளக்குகிறார். தொல்காப்பியர் செய்யுளியலில் குறிப்பிடும் யாப்பிலக்கணப் பகுதி இருபத்தாறும் வனப்பு எட்டும் இவை குறித்துப்  பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தரும் உரை விளக்கமும் தமிழின் நடையியல் சிறப்பைக் குறிப்பன என்கிறார்.

நடையியல் சிறப்புகளைப் புலப்படுத்தும் பல பாடல்கள் இருப்பினும்  எடுத்துக்காட்டிற்குக் குறுந்தொகைப் பாடல் ஒன்றினை(40) விளக்குகிறார். புதுமைத் திறனாய்வு, உளவியல திறனாய்வு, குமுகவியல் திறனாய்வு, சிதைவாக்கத் திறனாய்வு போன்ற அணுகுமுறைகளுக்கு இடமளித்துப் பாராட்டப்பெற்ற பாடல் என இதனைக் குறிக்கிறார்.

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்

செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

என்னும் பாடல்தான் அது. பாடலை இயற்றிய புலவர் பெயர் தெரியாததால் இதில் வரும் உவமையால் அவர் செம்புலப் பெயனீரார் என அழைப்பதே இப்பாடலின் சிறப்பைப் புலப்படுத்தும். மேலும் நடையியலுக்கும் அமைப்பியலுக்கும் உள்ள வேறுபாடுகளையும் இக்கட்டுரையில் விளக்குகிறார்.

சிலப்பதிகாரம் நடையியலார்க்குப் பெரு விருந்தாக அமைவதை விளக்குகிறார். வேனில் காதையில் இளவேனில் பருவத்தின் வருகையைத் தென்றலும் குயிலும் தெரிவிப்பனவாக வரும் நடைச்சிறப்பை எடுத்துரைக்கிறார். வழக்குரை காதையில் சொற்சிக்கனம்   கொண்ட நடையியல் நுணுக்கம் குறித்தும் விளக்குகிறார். நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பத்திப் பாடல்களில்  உள்ள சிறந்த நடைச் சிறப்பையும் நமக்கு உணர்த்துகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 11/ 69)