சென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா – உலகத் தமிழர் பேரவை!
சென்னையில் உலகத் தமிழர்களின்
ஒன்றிணைப்பு விழா – உலகத் தமிழர் பேரவை!
உலகில் உள்ள தமிழர்களை ஒரே குடையின் கொண்டு வரும் எண்ணத்தோடு சென்னையில் உலகத் தமிழர்கள் பங்கு கொள்ளும் விழா ஒன்றினை ஏற்பாடு செய்ய உள்ளது உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பு.
இந்த அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் ஆடி 14, 2047 / 29-07-2016) காலை ஒருங்கிணைப்பாளர் திரு அக்கினி அவர்கள் தலைமையில் நடந்தது. முதலாவதாக, உலகத் தமிழர் பேரவையை தோற்றுவித்த நிறுவனரும், தமிழக மேனாள் மேலவை உறுப்பினருமான காலம் சென்ற முனைவர் இரா. சனார்த்தனம் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் பேரவையின் முதன்மைக் குறிக்கோளாக “ஒன்றுபட்ட உலகத் தமிழினம்” என்பதை ஒரு குடையின் கீழ் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், இதற்காகத் தமிழகத்தில் உள்ள தமிழர் அமைப்புகள், தமிழார்வலர்களைக் கொண்டு சென்னையில் ஒரு கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் ஒன்றிரண்டு மாதங்களில் புலம் பெயர்ந்துள்ள தமிழ் உறவுகளையும் இணைத்துக் கொண்டு சென்னையில் பெரும் திரளாகப் பொது மக்கள் கலந்து கொள்ளும் வண்ணம் அரங்கக் கூட்டத்தை நடத்துவதென்றும், சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் உலகத் தமிழர் பேரவை, புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழர்களை இணைத்துக் கிளைகளை அந்தந்த நாடுகளில் ஏற்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இப்பேரவைக்கான இணையம், முகநூல் மற்றும் காணுரை(whatsApp) குழு தொடங்கப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் திரு. அதியமான் (தலைவர், தமிழர் முன்னேற்றக் கழகம்), திரு. சுப. கார்த்திகேயன் (தலைவர் தமிழர் மறுமலர்ச்சி கழகம்), தமிழார்வலர் திரு. சரவணன் சாவன்சி, தமிழர் மறுமலர்ச்சிக் கழகத்தின் பொதுச் செயலாளர், திரு. முல்லை சோபன் எனப் பலர் கலந்து கொண்டது குறிப்பிடப்பட வேண்டும். மேலும் தற்போது களத்தில் செயல்பட்டு வரும் தமிழ் ஆர்வலர்கள் இந்தக் கூட்டத்திற்கு வர இயலாத காரணங்களைச் சொல்லிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கூட்ட இறுதியில் திரு. முல்லை சோபன் நன்றி கூறினார்.
உலகத் தமிழர் பேரவையின் இணையம் :
worldtamilforum.com
உலகத் தமிழர் பேரவையின் மின்னஞ்சல் :
vorldtamilforum@gmail.com
உலகத் தமிழர் பேரவையின் முகநூல் :
https://www.facebook.com/worldtamilforum/
_
Leave a Reply