தமிழ்த்தாய்மையும் கன்னடச் சேய்மையும் இணைய அரங்கம்



தமிழ்க்காப்புக்கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
தமிழ்த்தாய்மையும் கன்னடச்சேய்மையும்
இணைய அரங்கம்
அனைவருக்கும் வணக்கம்!
தமிழ் மொழியையும் அதன் கிளை மொழிகளையும் திராவிட மொழிகள் என்று சொல்லாமல் தமிழ்க்குடும்ப மொழிகள் என்று சொல்ல வேண்டும் என்பார் செந்தமிழ்மாமணி முனைவர் சி.இலக்குவனார்.
இவற்றுள் இந்தியத் துணைக் கண்டத்தில் தென் தமிழ்க்குடும்பப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் தமிழ்க்குடும்பப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் தமிழ்க்குடும்பப் பிரிவில் 5 மொழிகளும், வட தமிழ்க்குடும்பப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன. தென்னாசியா அளவில் தமிழ்க்குடும்பத்தில் 86 மொழிகள் உள்ளன.
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலான உலக அறிஞர்கள் பலரும் “தமிழே உலக மொழிகளின் தாய்” என்று நிறுவியுள்ளனர். அவ்வாறெனில் உலகிலுள்ள எல்லா மொழிகளும் தமிழ்க்குடும்ப மொழிகள்தாம். அவற்றில் ஒரு பகுதி நெருங்கிய உறவு மொழிகளாகவும் பெரும்பகுதி உறவாக இருந்து விலகிய மொழிகளாகவும் உள்ளன.
எனினும் தென்தமிழ்நாட்டில் உள்ள தமிழ்க்குடும்ப மொழிகள் தமிழின் சேய் மொழிகளே என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், இச்சேய்மொழி பேசுவோர், தங்கள் மொழி தமிழின் சேய் என ஒத்துக்கொள்ள மறுக்கினறனர். தாய் அழகாக இல்லாவிட்டாலும் அறிவாக இல்லாவிட்டாலும் தாய், தாய்தான். ஆனால், வளமும் சீரும் சிறப்பும் உயர்தனிச் செம்மொழித் தன்மையும் உள்ள தமிழின் சேய்மொழி பேசுநர் தமிழின் மக்கள் எனச் சொல்வதை இழிவாகக் கருதுகின்றனர்.அதே நேரம் சமற்கிருத மொழியின் சேய் எனக் கூறுவதற்கு மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஆனால், மக்கள் நீதி மையத் தலைவர் கமல் கன்னட மொழியினருடனான நெருக்கத்தைக் காட்டுவதற்காகக் கன்னடத்தின் தாய் தமிழ் என்றதற்குக் கன்னடர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலைத்துறையினர், அரசியல்துறையினர், நீதித்துறையினர் என அனைத்துத் தரப்பாரும் எதிர்க்கின்றனர். ஆராய்ச்சி முறையில் விடையிறுக்காமல் வெறுப்பு நோக்கில் கண்டிக்கின்றனர். இதற்குக் காரணம், தமிழின் தாய்மை குறித்த பாடங்களை இந்திய மொழிகளில் வைக்காமைதான்.
தமிழ்நாட்டில் உள்ள தமிழிசை போன்றவர்களே அரசியலுக்காக இவ்வாறு தெரிவிக்கும் பொழுது உண்மையை உரைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. எனவே,
தமிழ்த்தாய்மையும் கன்னடச்சேய்மையும்
என்னும் தலைப்பில் தமிழ்க்காப்புக் கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து இணையவழிக் கருத்தரங்கம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இணைய அரங்க நாள் : ஆனி 22, 2056 / சூலை 06, 2025
பதிவு செய்வதற்குரிய இறுதி நாள்: வைகாசி 28, 2056 / சூன் 11, 2025
கட்டுரை வந்து சேருவதற்குரிய இறுதி நாள் ஆனி 16, 2056 / சூன் 30, 2025
கட்டுரைகளைச் சீருரு/ஒருங்குகுறி வடிவில் அனுப்புதல் நன்று.
பதிவு விவரத்தையும் கட்டுரையையும்
அனுப்ப வேண்டிய மின் வரி : thirunool50@gmail.com
கட்டுரைகள் பக்க வரையறை யில்லை. ஆனால், பேச்சை 15 நிமையத்திற்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.
பின் வரும் தலைப்பு ஒன்றில் அல்லது மையத் தலைப்புடன் பொருந்தக் கூடிய தலைப்பு ஒன்றில் கட்டுரை அனுப்ப வேண்டுகிறோம்.
தமிழ்த்தாய் – கன்னடச் சேய் உறவுகள்
பெயர்ச் சொற்களில்
வினைச் சொற்களில்
உறவுப் பெயர்களில்
எண்ணுப் பெயர்களில்
இடப் பெயர்களில்
பழமொழிகளில்
மரபுத்தொடர்களில்
இலக்கியங்களில்
மொழியியல் நோக்கில்
வரலாற்று நோக்கில்
கலை பண்பாட்டு நோக்கில்
கட்டுரைகள் பக்க வரையறையில்லை. ஆனால், பேச்சை 15 நிமையத்திற்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.
கட்டுரைகளை, செ.த.ம.நி. மேனாள் பதிவாளர் முனைவர் மு, முத்துவேலு தலைமையிலான குழு தேர்ந்தெடுக்கும்.
பதிவுக் கட்டணம் எதுவுமில்லை. தமிழாய்வாளர்கள் யாவரும் பங்கேற்கலாம்.
ஆதலின், அருந்தமிழ் ஆய்வாளர்களை உடன் பதிந்து கொள்ள வேண்டுகிறோம்.
புவி உருண்டையானது, புவி சுற்றுகிறது முதலான இயற்கை உண்மைகளைத் தெரிவித்த அறிவியலாளர்கள் பழமைவாதிகளாலும் மதவாதிகளாலும் தாக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். தமிழ்மொழியின் தாய்மை நிலையையும் மூத்த நிலையையும் தெரிவிப்பவர்களும் எதிர்ப்புகளைச் சந்திக்கிறார்கள். எனவே, அவர்களுக்குப் புரியும் வகையில் உண்மையை உரைக்கும் வண்ணம் கட்டுரைகளை அனுப்ப வேண்டுகிறோம்.
இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்
Leave a Reply