மதுரை சூழலியல் சந்திப்பு

 ஐப்பசி 8, 2045 / அக். 25,2014

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைக் கோட்பாடுகள் இலக்கணமாக பார்க்கப்பட்டனவே தவிர, இன்று உலக விவாதத்திற்குரிய சூழலியல் அறிவியலாக நம்மால் கருத்தில் கொள்ளப்படவில்லை. உயிர்களின் இயங்கியலுக்கு அடிப்படையாக இருக்கும் நிலமும் பொழுதும் முதற்பொருளாக வகுத்து கொண்ட நம் தொல்குடி சமூகம், தெய்வத்தை முதற் பொருளுக்குள் அடக்காமல் அதை கருப்பொருளுக்குள் அடக்குகிறது. நிலமும் பொழுதும் ஆகிய இரண்டு முதற்பொருள்களே, அத்திணையில் உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன. எனவே பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே தான் உயிர்வாழ அடிப்படைத் தேவையான தெய்வம், மரங்கள், பறவைகள், விலங்குகள், நீர்நிலை, தொழில், உணவு, பொழுதுபோக்கு என அனைத்தையும் கருப்பொருளுக்கு வகுத்து கொள்கிறார்கள். இவற்றின் காரணமாக ஒவ்வொரு திணையிலும் சூழல் வேறுபட்டுள்ளது. இன்று மேற்கத்திய நவீன அறிவியல் பேசும் சூழலியலை அன்றைக்கே தன் இயற்கை வாழ்வியலாக இணைத்து கொண்டவர்கள் நாம்.

இயற்கை அளித்த இந்த வாழ்வியலை இழந்து கொண்டிருக்கும் சூழலில் அது குறித்து அதிகம் சிந்திக்க, செயல்பட வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. கானமயில், பிணந்தின்னி கழுகு, சிட்டுக் குருவி என வெகுவாக காணப்பட்ட பல உயிரினங்கள் இன்று நம்மோடு இல்லை. நகரத்தில் மின்மினி பார்த்து எத்தனை நாட்கள் ஆயின? தூக்கணாங்குருவி கூடுகட்டுவதைக் கடைசியாகப் பார்த்தது எப்போது? அதனால் நமக்கென்ன என்ன? தலைப்பிரட்டை தவளைகள் அற்றுப் போனதால்தான் கொசுக்கள் பெருகிப் போயின என்றும், அதன் விளைவாகவே கொசுக்காய்ச்சல்(மலேரியா), எலும்பு முறிவுக் காய்ச்சல்(டெங்கு) போன்ற நோய்களுக்கு நாம் ஆளாகிக் கொண்டிருக்கிறோம் என்கிறது சூழலியல் பார்வை. ஆக இயற்கையில் உள்ள ஒவ்வோர் உயிரும், உயிரற்ற பொருளும் ஒரு சங்கிலித் தொடர் போல நம்மோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. உயிரிய நேசத்தோடு திட்டமிடபட்டதே இந்தப் பறவைகள்- பல்லுயிரியம் கள ஆய்வு.

மதுரை மாவட்டத்தில் உள்ள பறவைகள்-பல்லுயிர்களின் இப்போதைய நிலையை ஆவணம் செய்யவே இந்தக் கள ஆய்வை நடத்துகிறோம். இந்த ஆண்டு கார்காலம் தொடங்கிப் பின்பனி காலம் வரை (அக்டோபர் – மார்ச்சு) மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், வேளாண் நிலங்கள், சிற்றூர்கள், வனப்பகுதி என மதுரையின் குறுக்கும் நெடுக்கமாக அலைந்து பறவைகள்-பல்லுயிர்களின் நிலை குறித்து ஆவணப்படுத்தப் போகிறோம். பல்லுயிர்களின் வழக்கு மொழி, பெயர்கள், கதைப்பாடல்கள், சொலவடைகள் எனப் பல்லுயிர்களோடு மதுரை மாவட்ட மக்கள் கொண்டுள்ள பண்பாட்டு வகையிலான தொடர்பு குறித்து ஆவணம் செய்யவும், இதன் வழியாகப் பல்லுயிரிய பாதுகாப்பில் பொது மக்களின் பங்களிப்பை பெருக்கவும் முனைப்போடு பல்லுயிர்கள் குறித்த புரிதலை இயன்றவரை கடைநிலை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வண்ணம் விழிப்புணர்வை பரப்புவும் இந்தக் கள ஆய்வு பயன்படும் என்று நம்புகிறோம். கள ஆய்வுகளின் இறுதியில் பெறப்பட்ட / சேகரித்த தகவல்களின் உண்மை நிலையை பணியறிவுடைய தேர்ந்த வல்லுநர்களோடு ஆராய்ந்து, அதன் வழியே பெறப்படும் தகவல்களின் திரட்சியை நூலாகவோ, கண்காட்சியாகவோ வடிவமைத்து, மதுரை மாவட்ட நிருவாகத்தோடு பகிர்ந்து கொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆர்வமுள்ள எவரும் இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொள்ளலாம். நம்மோடு சூழலியல் தளத்தில் இயங்குகிற தோழர்கள் புதிதாக இணையும் நண்பர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள்.

azhai_madurai_suuzhaliyal

வருகிற ஐப்பசி 8, 20415 / 25.10.2014 (சனி, மாலை 5 மணி) காந்தி அருங்காட்சியகத்தில் கருத்தரங்கமாகத் தொடங்குகிறோம். அதற்கு அடுத்த நாள் ( ஐப்பசி 9, 2045 / 26.10.2014) காலை சாமநத்தம் கண்மாயில் கள ஆய்வு தொடங்கும். அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

தொடர்புக்கு: 9843136786, 8608266088