மே 17 நினைவேந்தல், சென்னை
தமிழீழத்தில் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட நமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஆறாண்டுகள் ஆகின்றது. இந்த இனப்படுகொலைக்கான ஒரே காரணம் அவர்கள் தங்களின் நியாயமான உரிமையான தம் தாயக விடுதலையைக் கோரியது ஒன்றே. சிங்களப் பேரினவாத இலங்கையோடு சேர்ந்துகொண்டு இந்த இனப்படுகொலையை நடத்தியவர்கள் இந்தியாவும் மேற்கத்திய நாடுகளுமே என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமது வணிக நலன்களுக்காகவும் மண்டல மேலாதிக்கத்திற்காகவும் நமது இனத்தைக் கொத்து கொத்தாகக் கொன்று குவித்துள்ளனர்.
இவர்கள் தான் தற்போது பாதிக்கப்பட்ட தமிழர்களின் போராட்டங்களின் நெருக்குதலால் ஒப்புக்குச் சில வெற்றுத் தீர்மானங்களைக் கொண்டும் பின்னணியில் தமது வணிக ஒப்பந்தங்களை நிறைவேற்றிக் கொண்டும் வருகின்றனர். மேலும் தமிழர்தம் நீதிக்கான போராட்டத்திற்கு மேற்குலகம் இலங்கைக்குள் ஆட்சி மாற்றம் என்பதையே தீர்வாக முன்வைக்கிறது. இந்தியா தனது பங்கிற்குத் தீர்வாக வெற்று ஒப்பந்தமான 13ஆவது சட்டத் திருத்தம் என்ற ஒன்றைச் சொல்லி வருகின்றது. இவற்றால் தமிழர்களுக்கு எவ்வித மாற்றமும் வந்துவிடப்போவதில்லை. இனப்படுகொலையாளியோடு இணைந்து வாழ்வதென்பது உலகின் எந்த இனத்தாலும் ஏற்றுகொள்ள முடியாத ஒன்றாகும். இனப்படுகொலையில் கூட்டாளியாகச் செயல்பட்ட ஐநா தன் மீதுள்ள குற்றத்தை மறைக்க உலக நாடுகளின் கைப்பாவைகாகச் செயல்பட்டு வருகின்றது. இந்தியா, உலக நாடுகள் மற்றும் ஐநா வின் நோக்கமென்பது தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைப்பதும் அதன்மூலம் தமிழீழவிடுதலைக்கான கோரிக்கையை வலுவிழக்க செய்வதுமே.
பிணந்தின்னி கழுகுகளாய்த் தமிழீழத்தைச் சுற்றி வட்டமிடுகின்ற இந்தியா அமெரிக்க முதலான பன்னாடுகளின் பிடியிலிருந்து ஒரு தாய்ப்பறவையாய் இருந்து தமிழீழ கோரிக்கையைக் காக்கும் இடத்தில் இன்று தாய்த்தமிழகம் இருக்கின்றது. இந்நிலையில் நமது முதன்மை நோக்கம் என்பது தமிழீழத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலையே என்பதை உலகிற்கு சொல்லவேண்டியதாகும். இவ்வாறே இனப்படுகொலைக்கு உள்ளான ஒவ்வோர் இனமும் தங்களின் வலிகளை உலகிற்குச் சொல்லி தமது கோரிக்கைகளை முன் நகர்த்தி வருகின்றனர்.
இந்த அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழீழத்தில் 2009 ஆண்டு மே மாதம் கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சம் தமிழர்களை நினைவேந்தி வருகின்றோம். அதேபோன்று இந்த ஆண்டும் மே மாதம் 17 ஆம் நாள் ஞாயிற்றுகிழமை மாலை 4 மணியளவில், சென்னை தமிழர் கடற்கரை (மெரினா) கண்ணகி சிலை அருகில் தமிழர்கள் நாம் ஒன்றுகூடி இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நெஞ்சில் ஏந்தி அவர்களுக்காக மெழுகுவத்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்துவோம்! இது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுக் கடமையாகும்.
இந்நிகழ்விற்கு அனைவரும் தங்கள் குடும்பத்தார் நண்பர்களுடன் கலந்துக்கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்
Leave a Reply