இந்தித்திணிப்பு : அரசு குருடாகவும் செவிடாகவும் இருக்கலாமா?

நாட்டு மக்கள் குறைகளை அரசு திறந்த கண் கொண்டு பார்க்க வேண்டும்; மூடாச்செவி கொண்டு கேட்க வேண்டும். மூடிய கண்ணினராயும் காதினராயும் இருப்பின் மக்கள் துன்புறுவதை அரசு அறிந்து களைய வாய்ப்பில்லாமல் போய்விடும். அதனால் அந்த அரசு நிலைக்காமல் போய்விடும். எனவேதான்,

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.   (திருக்குறள் – 555)

என்றார் தெய்வப்புலர் திருவள்ளுவர்.

    மக்களுக்குக் கிடைக்கவேண்டியவை கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமை அல்லது காலம் கடந்தும் கிடைக்காமை, பணி உரிமைப் பயன்கள் பெறுவதில் சிக்கல், நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் இடர்ப்பாடுகள், வேலை வாய்ப்போ தொழில் வாய்ப்போ இன்றி அல்லலுறுதல் போன்று பலவகையாக மக்கள் குறைகள் உள்ளன. அவற்றில் இன்றியமையாத பொதுவான ஒன்றாகச் சேர்க்கப்பட வேண்டியது மொழிக்கு ஏற்படும் தீங்காகும்.

தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு!

தமிழர் வாழ்வே தமிழின் வாழ்வு!

என்பதே பேராசிரியர் சி.இலக்குவனார் வற்புறுத்தி- வந்த கோட்பாடு ஆகும். எனவே, நம் வாழ்வாக விளங்கும் தமிழுக்கு இன்னல் வரா வண்ணம் காக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

மாநிலங் காவலனாவான் மன்னுயிர் காக்குங்காலை

தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்

ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்

ஆனபயம் ஐந்தும்தீர்த் தரசாள்வான் அல்லனோ?’ (பெரியபுராணம்)

எனச் சேக்கிழார் கூறுகிறார். அஃதாவது, நாட்டுக்காவலில் இடையூறு ஆள்வோராலும், உடன்இருக்கும் ஏவலர், நட்புவட்டம், உறவு வட்டம் ஆகியவற்றாலும் பகைவராலும் கள்வராலும்  பிற உயிர்களாலும் தீமை வராமல் காக்க வேண்டும் என்கிறார்.

இவற்றில் சேக்கிழார் முதலிடம் தருவது ஆள்வோரால் தீங்கு ஏற்படாதிருக்க வேண்டும் என்பதையே!

ஆள்வோர் திட்டங்களில் இந்தி, சமற்கிருத, ஆங்கிலப் பெயர்களைச் சூட்டுகின்றனர். வலைத்தளப் பெயரிலும் சமற்கிருதப்பெயர் வைக்கின்றனர். முழக்கங்களிலும் இந்தி அல்லது சமற்கிருதம். தமிழை ஒதுக்கிவிட்டு, இந்தி முதலான பிற மொழிகளைக் கற்பிக்கும் பள்ளிகளுக்கு இசைவு தருகின்றனர்.   இவ்வாறு தமிழ்மொழிக்கு வரம் தீங்கில் முதலிடம் வகிப்பது அரசினால் வரும் தீங்குகளே!

அரசரின் ஏவலராகிய பணியாளர்களாலும் சுற்றத்தார் நடத்தும் கல்வி நிறுவனங்களாலும் தமிழுக்குத் தீங்கு நேர்ந்து கொண்டுள்ளது. தமிழ்ப்பகைவர்களாலும் தமிழுக்கு ஏற்பட்டு வரும் தீங்கு அளவிடற்கரியது.

கள்வர் என்பது, ஏய்ப்பவர், வஞ்சிப்பவன், ஏமாற்றுபவர் என யாரையும் குறிக்கும்.

நெஞ்சில் உரம் இன்றி நேர்மைத் திறம் இன்றி

வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி

எனப் பாரதியார் குறிப்பிடும் வாய்ச்சொல் வீரர்களாகிய அரசியலாளர்களும் இதில் அடக்கம்.

பிற உயிர்கள் என்னுமிடத்தில் ஒன்றிய அரசு, பிற அரசு, பன்னாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் முதலியவற்றின் மூலம் இந்தி, ஆங்கிலத் திணிப்புகளுக்கு இடமளிப்பதைச் சேர்க்க வேண்டும்.

பிறமொழித் திணிப்புகளைக் களைந்தால் மட்டும் போதாது. தமிழ், பிழையின்றிக் குறிக்கப் பெற வேண்டும்; செவ்விய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். தமிழை எழுதுவோர் எந்த அளவிற்குத் தமிழைக் கொலை செய்ய முடியுமோ அந்த அளவிற்குக் கொலை செய்து வருகிறார்கள். இது குறித்து அரசு கவலைப்படுவதில்லை. மறுபுறம் கணிணி வழி மொழி மாற்றம் என்பது சித்திர வதையாக உள்ளது. எடுத்துக்காட்டிற்கு ஒரு முகவரி தமிழில் இவ்வாறு குறிக்கப்பெறுகிறது: “ தமிழ் வால்ச்சர் வீலம், தமீஸ்சேலை”. என்னவென்று புரிகிறதா? “தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை” என்பதுதான் அவ்வாறு குறிக்கப் பெற்றுள்ளது.

இந்தித் திணிப்பை எதிர்ப்பதாக ஒரு புறம் முழங்கிக் கொண்டே மறு புறம் இந்தியை அரியணையில் வீற்றிருக்கச் செய்கிறார்கள். அரசினர், காணாக் கண்ணினராகவும் கேளாக் காதினராகவும் இருப்பதால்தானே இதுபோன்ற மொழிக் கொடுமைகளை அறியாமல் இருக்கிறார்கள்.

அரசுத் திட்டங்களின் பெயர்கள் கூட இந்தியில்தான். “போஷாக் அபியான், கலா உத்ஸவ், ராஷ்ட்ரிய மத்யமிச்ஷிக்ஷா, நிபுண் பாரத் திட்டம், நிபுன் பாரத் திட்டம், ராஷ்ட்ரியஉச்சதர்சிஷா அபியான், வீர் கதா” – இவையெல்லாம் என்ன தெரியுமா? தமிழ்நாட்டுப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சில திட்டங்களின் பெயர்கள். இந்தி மாநிலத்தில் அல்ல, தமிழ் மாநிலத்தில் பயன்படுத்தப்படும் பெயர்கள். இவற்றைப் பயன்படுத்தச் சொல்லும் நிலையில உள்ளவர்களுக்கும் மானமில்லை. பயன்படுத்தும் துறையினருக்கும் மானமில்லை. (உள்ளவாறு பயன்படுத்திக் காட்ட விரும்பியமையால் கிரந்தச்சொற்கள் பயன்படுத்த நேர்ந்தன.)

இணைய தளங்களின் பெயர்களில்கூட இந்தி அல்லது சமற்கிருதத் தொடர்களைப் பயன்படுத்துகிறார்கள். அரசின் இந்தக் கொடுமைகள் பற்றி முன்னமே கூறியிருக்கிறோம். இப்போது குறிப்பிட விரும்புவது கணிணியில் புகுத்தப்படும் இந்தித் திணிப்பு குறித்தே ஆகும்.

நாம் தேடு பொறியில் நமக்கு வேண்டப்படும் விவரத்திற்கான சொல்லைக் கணியச்சிட்டால் விவரப் பக்கம் பெருமளவில் இந்தியிலேயே வருகிறது. முன்பெல்லாம் கேட்கும் மொழிக்கேற்ப விவரங்கள். செய்திகள், படங்கள், காணொளி போன்று தமிழிலோ ஆங்கிலத்திலோ காட்டப்படும். அவை யாவும் இந்தியே!  நாம் கேட்கும் விவரங்கள் குறித்த குறிப்புகளும் இந்தியே! சான்றுக்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

காலமான நடிகர்-இயக்குநர் மாரிமுத்து குறித்து அறிவதற்காக அப்பெயரை முதலில் தமிழிலும் பின்னர் ஆங்கிலத்திலும் கணியச்சிட்டு விவரம் தேடினேன்.

விவரங்கள் இந்தியில்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன.  இவ் விவரம் மட்டுமல். மாநாகராட்சிகள், அரசுத் துறைகள் எனப் பலவற்றிற்கும் விவரம் தேடினேன். இந்தி! இந்தி! இந்திதான்!  வந்த விவரத்தைத்தான் தலைப்புப் படத்தில் சேர்த்துள்ளேன். காண்க. ஆனால், மூன்று அல்லது நான்கு நாளுக்கு ஒரு முறை தமிழிலும் அளித்து நாடகமாடுகிறார்கள்.

இந்தி விவரத்தைச் சொடுக்கினால் தமிழ் அல்லது ஆங்கிலம் வரலாம். ஆனால் என்ன வந்துள்ளது என்று தெரியாமல் எவ்விவரத்தைச் சொடுக்குவது? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் விவரம் அறிய விரும்புகிறோமா? இந்தி அறிய விரும்புகிறோமா? ஒன்றிய அரசின் உந்துதலால் இ்நதித் திணிப்பு நடைபெறுகையில் தமிழக  அரசு முனைப்பாகச் செயற்பட்டு அதை அகற்ற இயலாதா?

ஒரு நாடு ஒரு மொழி என்று ஒன்றிய அரசு செயற்படுகையில் நாம் நம் நாடு, நம் மொழி என்று செயற்பட வேண்டாவா? அரசு என்ன செய்யப்போகிறது? இந்திக்கு இடமளித்து இருக்கும் இடத்தை இழக்கப் போகிறார்களா? தமிழுக்கு வாழ்வளித்துத் தங்களுக்கும் வாழ்வளித்துக் கொள்ளப் போகிறார்களா? தமிழன்பர்களே நீங்கள் உறங்காமல் அரசிற்கு விழிப்பூட்டி வாருங்கள்!

தமிழா விழி! தமிழே விழி!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதலஇதழுரை