தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார்

முன்னுரை – க. அன்பழகன்

தண்டமிழ்ப் பெரியார், சாந்தசீலர், ஒழுக்க ஒளி திரு. வி. க. அவர்களின், உயர்வெண்ணும் உள்ளத்தினின்றும் வெளிப்பட்ட ஒப்பற்ற கருத்தோடைகளிற் சில ஈண்டு தொகுக்கப்பெற்றுள்ளன. தமிழ் நாட்டின் மேடைகள் அனைத்தும், கட்சிகள் யாவும், சமயக் குழுக்கள் எல்லாம், அவரது பொன்னுரையால் பொலிவு பெற்றதை மறக்கவியலாது. தமிழும் தமிழரும் அவரது கருத்தோடையில் திளைத்து மறுமலர்ச்சி எய்தியுள்ளதையும் நாமறிவோம். அத்தகு பெரியாரின் உரை ஒவ்வொன்றும். நிகழ்ந்தபின் – தொகுக்கப்பட்டு அச்சியற்றப் பெற்றிருத்தல் வேண்டும். அதனால், தமிழகம், காலத்திற்கும் பெறும் பயன் அளவிடற்பாற்றோ. மாறாக முயற்சி கெட்டு, ஊக்கங்குன்றி, எழுச்சியற்ற இந்நாட்டில், அவரது பொன்னுரைகள் முற்றும் காக்கப்படவில்லை. காதிற்குப் புலனான பலவற்றுள் சிலவே கண்ணுக்குப் புலனாகும் வடிவு பெறுவனவாயுள்ளன. எனவே அவற்றையேனும், ஏற்றுப் போற்றிப் பயன் பெறுவது தமிழர் கடனேயன்றோ.

அத்தகு நோக்கத்தாலேயே, “தமிழ்க்கலை ” வெளியிடப் படுகின்றது. தமிழ்க்கலை’ என்று ஒன்றைக் குறிப்பிடுவதற்கே இடமில்லாதபடி அதன் தனிமை’ மறைக் கப்பட்டிருந்தது

ஒரு காலம் தமிழ்க்கலை இகழப்பட்டது. பிறிதொருகாலம். ‘தமிழ்க்கலை’ தமிழகத்திலேயே இடம் பெறாது தவிக்கிறது. இந்நாள் வரை. ஆனால் தமிழ்க் கலையின் தனிமையும், உயர்வும், உலகிற்கே வழிகாட்டியாகும் ஆற்றலும், தனித் தனியான உரைகளில் விளக்கப் பட்டுள்ளன. தண்டமிழ்க் கவிதைபோல் “சாந்தம்” தழுவிய சீலரால் கலையின் பாப்பு, தன்மை , பயன் பலவும் விளக்கப் பட்டுள்ளன. வாழ்க்கைத் துறையில், பட்டினியை நீக்குவதே, பட்டினிப் பட்டாளத்தை ஒழிப்பதே, கலையென முழக்குகிறார். நம் நாட்டிற்குத் தட்ப வெப்ப நிலைக் கேற்ப தோன்றி வளாந்த தனிக் கலைகள் ஓம்பப்பட வேண்டும் என நவில்கின்றார். நாட்டை வளப்படுத்த விஞ்ஞானக் கலைவரை வேண்டுமென விளக்குகிறார். விஞ்ஞானம் ஆக்கத் துறையிலேயே பயன்படுத்தப்பட வேண்டும், என எச்சரிக்கிறார். அறப்புரட்சி, உள்ளப் புரட்சியை விழைகிறார்.

கிராம வாழ்க்கையின் இயற்கை நலத்தை வியக்கின்றார். பொறாமை நீக்கி, மிகுபொருள் விரும்பாது, அருளொடு அன்பொடும் வாழும்படி அறிவுறுத்துகிறார். சீர்திருத்தத்தின் உயர்வையும், வள்ளலாரின் குறிக்கோளையும் விளக்குகிறார். வள்ளலாரின் வாக்கால், “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக”-என சூளுரைக் கின்றார். மார்க்குசு கண்ட நெறியினும், அவரது குறிக்கோளை நிறைவேற்றும் தமிழர் நெறியின் மாண்பைப் புலப்படுத்துகிறார்.

மேலுலக இன்பத்திற்குப் பயன்படுவதா வாழக்கை? என்று- தற்கால உலக வாழ்க்கைக்குப் பயன்படுவதுதான் உண்மையான வாழ்க்கை என உணர்த்துகிறார் குழந்தைகள் உணவுக்குக் ஏங்கிக்கிடக்க, தங்கமயில் வாகனம், வெள்ளி (இ)ரிசபம், வாணவேடிக்கை முதலான பேயின் விழவுக்குப் பொருள் பாழாவதைக் கண்டு கண்ணீர் சொரிகிறார். பொதுவுடைமையாகிய இறைவன் தீட்சதரின் தனிவுடமையாயின், அவ்விடத்தில் இறைவன் இல்லை, இல்லை என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

‘வாழ்க்கை நிலையாமை’, பெண்ணை வெறுத்தல்’, ”பேதம் பாராட்டல்” முதலிய ஊறு விளைவிக்கும் கொள்கைகள் இடைக் காலத்தில் நுழைந்தவற்றைச் சுட்டுகிறார். இயற்கையோடு இயைந்த, ஒளி, காற்று, நீர் ஆகியவற்றில் தோய்ந்த வாழ்வின் நலத்தை உணர்த்துகிறார். நல்லுணவு, நல்லுடல், நன்முயற்சி, நற்றொண்டு வேண்டும் என வலியுறுத்துகிறார்.

மேலும் – இந்த நன்னிலை விளைய, பாசீச வெறி ஆட்சி ஒழிந்து, சமதரும மக்களாட்சி மலர விழைகின்றார். உலகப் பொதுமை விளையும்படி உரிமைப் பயிர் தழைக்க வேண்டுமானால், தமிழ்நாடு தமிழருக்கு ஆகவேண்டும். தமிழரின் நெறி தழைத்தோங்க, குறள் நெறி குவலயம் எங்கும் பரவ, திராவிடப் பண்பாடு- உரிமையோடு உலவி உலகை வாழச் செய்ய, திராவிடக் கலை மணம் கமழ, “திராவிட நாடு திராவிடருக்கே” ஆக வேண்டும் என முழக்குகிறார்.

மக்களும், மன்றங்களும், அவரது விளக்கத்தை ஏற்று அவ்வாறே முழக்குகின்றனர். இந்நிலையில் அவரது உயர் நெறியை ஒவ்வொருவரும் நன்கு உணரவேண்டு மன்றோ ? எனவே, இந்த ஏடு வெளிவருகிறது. பெற்றுப் பயன் காண்பது ஒவ்வொருவரின் கடமையுமாகும் என நான் கூற வேண்டுமோ?

க. அன்பழகன்.


பதிப்புரை

மணிவிழாக் கண்ட மாண்புடைப் பெரியார், தமிழுருவாகிய தலைவர் திரு. வி. க. அவர்களின் சொற்பொழிவுகளை மக்கள் அனைவரும் படித்துப் பயன்பெற நூல் வடிவில் தந்துள்ளோம். தக்க புலவர் பார்வையிட்டபின் இதனை வெளியிடலாமெனத் திரு. வி. க. விரும்பினார்கள். விரும்பிய வண்ணமே, இச் சொற்பொழிவுகளை அழகுறச் செப்பனிட்டுத் தந்த புலவர் மணி, அன்பு கணபதி அவர்கட்கும், முன்னுரை தந்துதவிய பேராசிரியர் க. அன்பழகன், எம்.ஏ. அவர்கட்கும், சொற்பொழிவுகளைக் குறித்துத் தந்த அன்புப் பழம் நீ அவர்கட்கும், துணை புரிந்த புலவர் மு. கோவிந்தசாமி அவர்கட்கும். எங்கள் நன்றியும் கடப்பாடும் என்றும் உரியன.

நல்லன்பு வாழ்க!

பதிப்பகத்தார்.

(தொடரும்)
தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்)
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார்