தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா?
நலம், வளம், தளர்வின்மை, விடாமுயற்சி, நம்பிக்கை, ஆற்றல், வெற்றி, பெருமை, செல்வம், இன்பம், மகிழ்ச்சி, புகழ், உயர்வு, சிறப்பு, வாணாள், துணிவு, எல்லாமும் பெற்றுத் தமிழுடன் நூறாண்டு வாழ இத்தமிழர் திருநாளில் வாழ்த்துகிறேன்.
அதே நேரம் தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா என்ற சிந்தனையும் எழுகிறது.
தமிழர் திருநாளைத் தமிழர் திருநாள் என்றுகூடச் சொல்ல மனமின்றித் தமிழரே திராவிடர் திருநாள் என்கின்றனரே! தமிழ் நாடாக இருந்தாலும் பிற நாடாக இருந்தாலும் தமிழர் கொண்டாடும் பொழுது அது தமிழர் திருநாளே! தமிழ்க் குடும்பமொழியினர் கொண்டாடும் பொழுது தமிழ்க்குடும்பத் திருநாள். அவர்கள் அதனைத் திராவிடர் திருநாள் என்றால் பரவாயில்லை. ஆனால், தமிழரே தமிழர் திருநாளைத் திராவிடர் திருநாள் என்பது எப்படி ஏற்புடைத்தாகும்?
இன்னும் ஒரு சாரார் பொங்கல் திருநாளைச் சங்கராந்தி என எழுதியும் பேசியும் பரப்பியும் வருகின்றனர். நாமோ இவர்களுக்குப் புகழ்மாலை சூட்டி வருகிறோம். அப்படி என்றால் தமிழர் திருநாள் எனக் கொண்டாடும் தகுதியை நாம் இழந்துவிட்டோம் என்றுதானே பொருள்?
“நும்நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்” எனப் பதினொன்றாம் நூற்றாண்டிலேயே உரையாசிரியர் இளம்பூரணர் நாம் யார் என்னும் உண்மையைக் கூறியுள்ளார். நாம் மொழியாலும் இனத்தாலும் நாட்டாலும் தமிழே! ஆம். அரசியல் யாப்பின்படி இந்தியராக இருந்தாலும், நாம் தமிழ் மொழியர், தமிழ் இனத்தர், தமிழ் நாட்டர். ஆனால் திராவிட மொழியராக -திராவிட இனத்தவராக – திராவிட நாட்டவராகப் பறைசாற்றிக் கொள்கிறோம். இது குறித்து நாம் வெட்கப்படுவதில்லை. இவ்வாறிருக்க, தமிழர் திருநாளைக் கொண்டாடுவதற்கு என்ன தகுதி உள்ளது?
நாம் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் தமிழை மறந்து விடுகிறோம். தமிழைத் தமிழாகப் பேசுவதில்லை. தமிழைத் தமிழாக எழுதுவதில்லை. தமிழ்ச் சொற்களை மிக மிகக் குறைவாகவும் அயற்சொற்களை மிக மிக மிகுதியாகவும் கலந்தே பேசுகிறோம். அஃது என்ன மொழி என்று நமக்கே தெரியாது. என்ன மொழி என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒலிக்கோவையும் அயற் சொற்களும் கலந்த கலவையைப் பேசும் எழுதியும் வரும் நாம் தமிழர் திருநாள் கொண்டாடுவதற்குத் தகுதியுடையவர்தாமா?
இன்றைய கலைவடிவங்களில் ஒன்றே திரைக்கலை. வெள்ளித்திரையும் சின்னத்திரையும் திரைக்கலையில் அடங்கும். ஆனால் பெரும்பாலான படங்களின் பெயர்கள் தமிழாக இல்லை. இலக்கியம் என்று சொல்லும் அளவிற்குப் பல திரைப்பாடல்கள் வந்தன. இன்று பெரும்பாலான பாடல்களில் பிற மொழிச்சொற்கள் மேலோங்கி இருக்கும். அல்லது சொற்களே இல்லாத ஒலிக்கோவையாக இருக்கும். நாம் இரும்புக் காதினர்போல் கேட்டும் கேளாச் செவியராக இருப்போம். தமிழராகப் பிறந்தும் தமிழராக வாழா நாம் தமிழர் திருநாள் கொண்டாட என்ன தகுதியிருக்கிறது?
தமிழர்கள் கட்டும் தமிழ்க்கோயில்களில் தமிழ்க் கடவுளரின் படிமங்கள் இருக்கின்றன. சாதிகளற்ற தமிழ்க் கடவுளர்களின் படிமங்களில் பூணூல் எதற்கு? திருமுருகன் பெயரை மறந்து சுப்பிரமணியன் என்றும் பாலசுப்பிரமணியன் என்றும் தீனரீசன், தீட்சிதன், மயூரவாகனன் மனோதீதன், செயபாலன், இசுகந்தகுரு, சுவாமிநாதன், சண்முகம், சரவணபவன், செளந்தரீகன், சுகிர்தன், சுசிகரன், சுதாகரன், சுப்ரமண்யன், கிரிசலன் என்பன போன்ற பல சமற்கிருதப் பெயர்களாலும் வெட்கமின்றிக் குறிப்பிடுகிறோமே!
அடியார்க்கு நல்லானைப் பக்தவத்சலன் என்றும் அம்மையப்பனைச் சாம்பசிவன் என்றும் உலகுடையானைச் சகதீசுவரன் என்றும் கேடிலியை அட்சயன் என்றும் சொக்கனைச் சுந்தரன் என்றும் தாயுமானவனை மாத்ருபூதம் என்றும் தான்தோன்றியைச் சுயம்பு என்றும் தூக்கிய திருவடியனைக் குஞ்சிதபாதன் என்றும், ஆலமரச் செல்வனைத் தட்சிணாமூர்த்தி என்றும் பெருவுடையானைப் பிரகதீசுவரன் என்றும் மாதொருபாகனை அர்த்தநாரி என்றும் வழித்துணையா னைமார்க்க சகாயன் என்றும் அண்ணாமலையானை அருணாசலேசுவரன் என்றும் பிறைசூடனைச் சந்திரசேகரன் என்றும் இன்னபிறவாக இறைவர்களின் பெயர்களைச் சமற்கிருதமாக்கியதை ஏற்றுப் பயன்படுத்தி உணர்வற்றப் பிண்டங்களாக வாழ்ந்து வருகிறோமே! தமிழ் உணர்வற்ற நாம், தமிழர் திருநாள் கொண்டாடத் தகுதி உள்ளதா?
கடவுளர் பெயர்களை மாற்றியது மட்டுமல்ல. வழிபாட்டிலும் தமிழ் இல்லை.
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
என்றார் திருமூலர். (திருமந்திரம் 81). சமற்கிருதத்தால் நாம் கடவுளை அழைத்தால் அவர் எப்படி அருள்வார்? அரசின் அறிவிப்பின்படிச் சில கோயில்களில் மட்டும் அழைபேசியில் அழைத்தால் பூசாரி வந்து தமிழில் வழிபாடு செய்வாராம். ஆனால், நடைமுறையில் இஃது இல்லை. ஏன்? தமிழில் மட்டும்தான் வழிபாடு. அழைத்தால் வந்து சமற்கிருத வழிபாடு என்று சொல்ல வேண்டியதுதானே! இதற்குக்கூட மனமில்லா நாம், தமிழர் திருநாள் கொண்டாடத் தகுதி உள்ளவர்தாமா?
அக்சா, அட்சரா, அட்சிதா, அசுவிதா, கர்சிதா, கலிமா, கனிகா கனிசுமா, கசோல், கட்சிகா, கஃச்வி, உமாமாகேஃச்வரி, கிரிசா, சக்திப்ரியா, சடாட்சரி, சடாதாரி, கமலா வர்சினி, கரிட்சிணீ , கமலாசிரீ, அகேமியா, அக்சரா, அக்சிதா, அக்ம, அர்விகா, அக்சா, அட்சரா, அட்சிதா, அஃச்விதா, கர்,ஷிதா கலிமா கனிகா கனிஃச்மா, கசோல், கட்சிகா, கஃச்வி என்றெல்லாம் பொருள்புரியா சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி மகிழ்கிறோமே! உண்மையிலேயே நாம் தமிழர்கள்தாமா? தமிழர் திருநாள் கொண்டாடக் கிஞ்சித்தும் தகுதி உள்ளதா? “தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக!” எனத் தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் முழங்கியமை இவர்களின் செவிகளில் ஏறவில்லையா?
தமிழில் பயின்ற பழந்தமிழர்கள்தான் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள், ஐம்பெருங்காப்பியங்கள் முதலிய புகழ்மிகு இலக்கியங்களைப் படைத்தனர்; உலகம் புகழும் கல்லணை, கலைநுட்பம் மிக்க கோயில்கள் முதலியவற்றைக் கட்டினர்; பருவநிலைக்கு ஏற்ற அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டினர்; சிற்பக் கலைக்குக் கோயில்கள் மட்டுமல்லாமல் மாமல்லபுரமும் தலைநிமிர்ந்து நிற்கிறது; வானக்குடை(பாராசூட்டு) அமைப்பு, செயற்படும் வகை குறித்து போகர் சித்தர் குறிப்பிட்டுள்ளார்; தொடர்பான அறிவியல் நூல்கள் இல்லாவிட்டாலும் வானூர்திகள் குறித்து இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். நோய்நாடி அதன் முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடும் சிறந்த தமிழ் மருத்துவங்கள் இன்றும் சிறந்து விளங்குகின்றன. ஆனால், கல்வியில் தமிழ் மெல்ல மெல்ல – அல்ல அல்ல விரைவாகவே மறைந்து அழிந்து கொண்டிருக்கிறது. கல்வியில் தமிழையே இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் திருநாள் எனக் கொண்டாடுவதற்கு என்ன தகுதி உள்ளது?
பொங்கல் வாழ்த்து என்றோ பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்றோ தைத்திருநாள் வாழ்த்து என்றோ தமிழர் திருநாள் வாழ்த்து என்றோ வேறுவகைகளில் தமிழில் கூறாமல் ஆங்கிலத்தில் அல்லவா வாழ்த்துகிறோம். தமிழர் திருநாளைக் கொண்டாட என்னதான் தகுதி நம்மிடம் உள்ளது?
இவ்வாறு எங்கும் எதிலும் தமிழைத் துறக்கும் நாம்
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? (மாக்கவி சுப்பிரமணிய பாரதியார்)
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௫௰௨ – 652)
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை -அகரமுதல
தை 01, 2056 /14.01.2025
Leave a Reply