வாசனை இழந்தது காங்.; ‘வாசனை’ இல்லா வாசன் – இலக்குவனார் திருவள்ளுவன்
வாசனை இழந்தது காங்.;
‘வாசனை’ இல்லா வாசன்
ஊடகங்களில் உலா வந்த செய்தி உண்மையாயிற்று. ஆம்! வாசன் பேராயக்கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார். புதிய கட்சி தொடங்குகிறார். என்றாலும் புதிய ஊர்தியில் பழைய பாதையில் செல்ல உள்ளாரே தவிர, புதிய பாதையில் நடைபோடப்போவதில்லை என்பதை அவரே உறுதிப்படுத்தி விட்டார்.
தனக்குப் பல பொறுப்புகளையும் பதவிகளையும் தந்த சோனியாவையும் கட்சியையும் தாக்க வேண்டா என எண்ணுவது நல்லது. அவ்வாறில்லாவிட்டாலும் தனிமனிதத் தாக்குதலற்ற அரசியலே நன்று. என்றாலும் கொள்கையில் மாற்றம் இல்லை என்ற பொழுது அவர் எக்கட்சியில் இருந்தால் யாருக்கு என்ன?
பேராயக்கட்சியில் உள்ளவர்களில் பெரும்பகுதியினர் வாசனின் அணியினரே! அந்த அளவில் அக்கட்சி கரைவது மகிழ்ச்சியே! 1967 இல் துடைத்தெறியப்பட்ட அக்கட்சி தலை எடுக்கமுடியாமல் போவது தமிழ்மக்களுக்கு நன்மைதானே! ஆனால், வாசன் பிரிவது கொள்கை அடிப்படையில் அல்ல! அக்கட்சிக் கொள்கைதான் தனக்கும் என்று தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளைப்பற்றிக் கேட்ட பொழுது தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு என்றும் தான் எதிரி என்றுதான் சொல்லிஉள்ளார். பதவியில் இருந்த பொழுதும் தமிழர் நலனுக்கென்று ஒன்றும் பாடுபட்டவர் அல்லர். தொடர்வண்டித்துறையில் மலையாளிகள் ஆதிக்கம் உள்ளது. இலாலு அத் துறையின் பொறுப்பேற்ற பின்பு பீகாரிகள் பெருமளவில் தொடரித்துறையில் நுழைந்தனர். இவர் கப்பல் போக்குவரத்தில் தமிழர்கள் வேலைவாய்ப்பு பெற ஒன்றும் செய்தவரல்லர். காவிரி, பெரியாறு நீர்ப்பங்கீடு முதலான சிக்கல்களில் தமிழ்நாட்டின் குரலை எதிரொலித்தவர் அல்லர்! இராசீவு வழக்கில் அப்பாவிகள் சிக்க வைக்கப்பட்டதில் இருந்து மீட்கவும் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிக்கவும் ஒரு துரும்புகூட எடுத்துப் போட்டவர் அல்லர்! தமிழக மீனவர்கள் சிங்களப்படையினரால் கொல்லப்பட்ட பொழுதும் துன்புற்ற பொழுதும் அமைச்சரவை உறுப்பினர் என்ற முறையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை. பதவி இல்லாதபொழுது ஒன்றும் இருந்த பொழுது ஒன்றும் பேசும் அரசியல்வாதிகளைப் போல் இன்றைக்கு ஈழத்தமிழர் நலனில் கருத்து உள்ளவர்போல் பேசுகின்றார். ஆனால், நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள், வஞ்சகமாகக் கொலையுண்ட பொழுது – கொத்துக் குண்டுகளால் அழிக்கப்பட்ட பொழுது – தமிழ் நிலம் மக்களுடனும் பிற உயிரினங்களுடனும் சிதைக்கப்பட்ட பொழுது – அதற்குப் பின்னரும் சிங்கள வன்முறை தொடர்கின்ற பொழுது – இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என உலக மனித நேயர்கள் குரல் கொடுத்த பொழுது – தமிழகச் சட்டமன்றத்திலேயே கொலைக்குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் தமிழ்ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படவும் தீர்மானம் இயற்றிய பொழுது – தன் பதவிச் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒன்றும் செய்யாத உத்தமர்தான் இவர்.
பதவி நலன்களில் மூழ்கித் திளைத்தபொழுதுதான் அவ்வாறு இருந்தார் என்றால், இப்பொழுதாவது கழுவாயாக எவ்வாறு ஈழத்தமிழர்கள் வஞ்சகத்தில் சிக்க வைக்கப்பட்டனர்? எப்படிக் கொல்லப்பட்டனர்? இந்திய அரசின் பங்களிப்பு எவ்வாறு அமைந்துள்ளது? குற்றவாளிகளும் உடந்தைக் குற்றவாளிகளும் தண்டனை பெற வேண்டிய முயற்சிகளில் எவ்வாறு ஈடுபடவேண்டும்? தமிழ் ஈழம் மலர என்ன செய்ய வேண்டும்? பொதுவாக்கெடுப்பிற்குப் பன்னாடடு மன்றத்தை எவ்வாறு வலியுறுத்தலாம்? தமிழ்நாட்டில் தமிழே எங்கும் ஆட்சி செய்ய என்ன செய்ய வேண்டும்? மத்திய அரசில் தமிழ் தலைமையிடத்தைப் பெற என்ன ஆற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள எல்லா மாநிலக் கல்வித் திட்டத்திலும் வரலாறு முதலான பாடத்திட்டங்களில் தமிழக வரலாறும் சேர்க்கப்பட வேண்டிய நடவடிக்கை என்ன? என்றெல்லாம் அவர் சிந்திக்க மாட்டார். அவர் எண்ணமெல்லாம் தமிழ்நாட்டில் பேராயக்கட்சி – காங்கிரசுக்கட்சி – என்றால்தான்தான் என மெய்ப்பித்து விட்டு மீண்டும் அக்கட்சியில் இணைந்து பதவிகள் பெற வேண்டும் என்பதுதான். ஒட்டுப்பேராயமாக – ஒட்டுக் காங்கிரசாக – இருக்கும் அக்கட்சியுடன் தமிழகக் கட்சிகள் கூட்டணி வைக்க முன் வருவர்; அதன் மூலம் வரும் தேர்தலில் சில தொகுதிகளையாவது அறுவடை செய்ய வேண்டும் என்பதே அதற்கான கனவாகக் கொண்டுள்ளார்.
எனவே, தமிழர் நலனில் ஈடுபாடு கொண்ட கட்சிகள் வாசனின் புதிய கட்சியைப் புறக்கணிக்க வேண்டும். பேராயம் – காங்கிரசு – எந்த வடிவில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இல்லாதொழிய வேண்டும். தமிழ்நாட்டு மக்களும் பேராயக்கட்சியையும் ஒட்டுப்பேராயமாக உலா வரப்புறப்பட்டுள்ள வாசன் கட்சியையும் அடியோடு விரட்ட வேண்டும்.
தமிழறியான் தமிழர்நிலை தமிழர்நெறி
தமிழர்களின் தேவை, வாழ்வு
தமையறிதல் உண்டோ?எந் நாளுமில்லை!
(பாவேந்தர் பாரதிதாசன், தமிழியக்கம்)
என்பதை நாம் உணர வேண்டும். தமிழ்மணம் இல்லா யாராயினும் நம்மை ஆள இடங் கொடுக்கக்கூடாது. எனவே,
தமிழெங்கே! தமிழன்நிலை என்னஎனத்
தாமறியாத் தமிழர் என்பார்
தமிழர்நலம் காப்பவராய் அரசியலின்
சார்பாக வரமு யன்றால்
இமைப்போதும் தாழ்க்காமல் எவ்வகையும்
கிளர்ந்தெழுதல் வேண்டும்! நம்மில்
அமைவாக ஆயிரம்பேர் அறிஞர்உள்ளார்
எனமுரசம் ஆர்த்துச் சொல்வோம்.
(பாவேந்தர் பாரதிதாசன், தமிழியக்கம்)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
ஐப்பசி 23, 2045 / 09.11.2014
Leave a Reply