mozhipoar eekiyar01Muthukumaran03

வீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல!

 

இந்தியை எதிர்த்துத் தமிழைக் காக்கத் தம் இன்னுயிர் நீத்த மொழிப் போராளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஆங்கிலத் திங்கள் சனவரி 25 ஆம் நாள் வீர வணக்க நாள் கொண்டாடுகிறோம். இவ்வாரத்திலேயே தமிழ் ஈழத்திற்காக நல்லுயிர் நீத்த ஈகையர் முத்துக்குமாரன் வீர வணக்க நாளும் வருகின்றது. எனவே, இவ் வீர வணக்க நாள் என்பது 1965 ஆம் ஆண்டு மொழிப்போராளிகளுக்கு மட்டும் என்றில்லாமல்   தமிழ் காக்க முதல் உயிர்ப்பலியான நடராசன் முதல் அனைவருக்குமான வீர வணக்க நாளாகவும் ஈழத்தில் தமிழ் இனம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் உயிர் ஈத்த போராளிகள் உயிர்க்கொடை கொடுத்தோர் அனைவருக்குமான வீர வணக்க நாளாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், ஆண்டுதோறும் வீர வணக்கம் கொண்டாடுவது எதற்காக?

தமிழ் மொழிக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் உயிர்க்கொடை அளித்தவர்கள் நோக்கம் நிறைவேறவா?

நம்மை மொழிப்பற்றாளராகவும் இனப்பற்றாளராகவும் காட்டிக் கொள்ளவா?

இந்தித் திணிப்பும் சமற்கிருதத்திணிப்பும் வளர்ந்தோங்கிக் கொண்டுள்ளது. அதே நேரம் தமிழ் மொழிக் கல்வியும் தமிழ் வழிக் கல்வியும் தமிழ்நாட்டிலேயே மறைந்து கொண்டுள்ளது. ஒரு புறம் தமிழை அழித்துக் கொண்டு தமிழினத்தை அழிப்போருக்கு உதவிக் கொண்டு மறுபுறம் வீர வணக்கநாள் சடங்கு தேவைதானா? நாம் தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் தமிழே ஆட்சி செய்ய ஆவன செய்து விட்டு நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களும் ஆயிரக்கணக்கான போராளிகளும் தற்கொலைப் படையினரும் உயிர்க்கொடை அளித்தவர்களும் கொண்டிருந்த எண்ணத்தை ஈடேற்றித் தமிழ் ஈழத்தை மலரச் செய்து விட்டு அல்லவா கொண்டாட வேண்டும்? குறைந்தது அதற்கான எழுச்சியாக வீர வணக்க நாளை நாம் கடைப்பிடிப்பதாக இருந்தால், அதற்கான முயற்சியிலாவது ஈடுபட வேண்டும் அல்லவா? கட்சித்தலைமைகளின் கொத்தடிமைகளாக இருந்து கொண்டு அல்லது எது நடந்தாலும் வாளாவிருந்துகொண்டு, தமிழைத் துரத்துவோரை ஆதரித்துக் கொண்டு தமிழ் இனத்தை அழிப்போரை வரவேற்றுக் கொண்டு உதட்டளவில் ‘தமிழ் வாழ்க!’ எனச் சொல்லிக் கொண்டு வீர வணக்க நாள் கடைப்பிடித்தால் நாளைய வரலாறு நம்மை எள்ளி நகையாடாதா?

எனவே, தமிழ் நாட்டில் தமிழே ஆட்சி செய்யவும் தமிழரே முதன்மை பெறவும்

தமிழ் ஈழத்தில் ஈழத்தமிழர்களே ஆட்சி செய்யவும் வழிவகை கண்டு வாகை சூடுவோம்!

அதுவே நாம் மொழிப்போராளிகளுக்கும் இனப் போராளிகளுக்கும் செலுத்தும் உண்மையான வீர வணக்கமாகும்!

 

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல இதழுரை 63feat-default

நாள் தை 11, 2046 / சனவரி 25, 2015