வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்!
வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை
ஆரியப் பூசையுடன் தொடங்கினர்!
குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது.
தமிழ் இலக்கியத்தை, தமிழ் மொழியை, தமிழ்ப்பண்பாட்டை, தமிழ் மரபை, இவற்றின்வழி தமிழ் இனத்தைக் காப்பதற்காகத் தொல்காப்பியம் இயற்றியவர்தான் அறிஞர் தொல்காப்பியர்.
ஆனால், அவரது படிமத்தை நிறுவுவதற்கான கால்கோள்விழாவில் ஆரியமொழியில் பூசை! என்ன கொடுமை இது! ஒருவேளை பூணூல் அணிவித்துத் தொல்காப்பியருக்குப் படிமம் எழுப்ப இருக்கிறார்களோ என்று தெரியவில்லை. ஆரியப்பூசாரியாக இருந்தாலும் தமிழில் பூசை நடத்தினால் சரி என அவரிடம் தமிழில் பேசினேன். தனக்குத் தமிழ் தெரியாது என்று கூறிவிட்டார், அந்த ஆரிய மலையாளி. நண்பர் புலவர் த.சுந்தரராசனிடம் இதைத் தடுத்து நிறுத்துமாறு கூறினேன். “இப்பொழுது இருக்கட்டும்! நிறைவு விழாவில் – சிலை திறப்பு விழாவில் – பார்த்துக் கொள்வோம்” என்றார்.
எதிரிகள் எமை நத்துவாய் எனக் கோடி
இட்டழைத்தாலும் தொடேன்
எனப் பாவேந்தர்வழி வாழவேண்டியவர் நன்கொடை கிடைக்கிறது என்பதற்காக இந்து முன்னணி விழாவாக நடத்தியது கொடுமையல்லவா? பூசாரிக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு நாமே நடத்தியிருக்கலாமே! ஆனால் நன்கொடையாளர் மனம் புண்படும் என அதற்கு உடன்படவில்லை.
செம்மொழி நிறுவனம் தொல்காப்பிய முற்றோதல் எனத் தொல்காப்பிய நூற்பாக்கள் ஒலிப்பேழைகளை வெளியிட்டுள்ளது. அவற்றை ஒலிக்கச் செய்திருக்கலாமே! அல்லது தொல்காப்பிய நூற்பாக்களைப் புலவர்களே சொல்லி இவ் விழாவை நடத்தியிருக்கலாமே!
தொல்காப்பியர் ஆய்வு மைய அறக்கட்டளையின் தலைவரான புலவர் கு.பச்சமைால் தன் தலைமையுரையில் ஆரியத்திற்கு எதிராக முழங்கினார். கை தட்டல் பெறுவதற்கான முழக்கமா அது? அவரிடம் இது குறித்துக் கேட்டதற்கு உள்ளுரில் இருவரிடம் பொறுப்பை ஒப்படைத்ததாகவும் அவர்கள் இவ்வாறு செய்துவிட்டார்கள் என்றும் கூறினார். குமரி மாவட்டம் தமிழ்நாட்டில் இல்லையா? அங்கே தமிழர் யாருமிலரா?
தமிழ்மொழிக்காப்பிற்கான போராட்டங்களை நடத்திய – தமிழ் இலக்கியத் தொடர் வகுப்புகளை நடத்தி வருகின்ற – புலவர் த.சுந்தரராசன் அவற்றை உண்மையான உணர்வுடன் நடத்தவில்லையா?
அவரது பெயரில் கிரந்தம் இருக்காது. ஆனால், அவர் அளிக்கும் அழைப்பிதழ்கள் முதலான யாவற்றிலும் கிரந்தம் இருக்கும். தொல்காப்பிய நெறியைப் பின்பற்றாதவர் தொல்காப்பியருக்குப் படிமம் அமைப்பது விளம்பரத்திற்கா? அல்லது வேறு எதற்குமா?
தமிழில் பாடியதற்காக மேடையைக் கழுவிய அவலங்கள் நிறைவேறிய நாடுதான் இது. என்றாலும் ஆரியத்தில் பூசை நடத்தியதற்காக அவ்விடத்தைக் கழுவி மீண்டும் தமிழில் பூசை செய்யும் மனப் பக்குவம் நண்பருக்கு வருமா?
எனவே, புலவர் த.சுந்தரராசன் தமிழ் உலகிடம் தன் அடாச் செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்! அதுவரை அவரது நிகழ்ச்சிகளைத் தமிழன்பர்கள் புறக்கணிக்க வேண்டும்!
தொல்காப்பியர் படிமத்திற்காக நன்கொடை பெறுவதைப் புலவர் த.சுந்தரராசன் நிறுத்த வேண்டும்!
முதல்நாளே நான் நாகர்கோயில் சென்றிருந்தமையால், அங்குள்ள தமிழமைப்பு நண்பர்களிடம் விழாவிற்குச் சேர்ந்து போகலாம் என அழைத்தேன். ஆனால், அவர்கள், “எங்கள் பெயர் எதுவும் இருக்காது பாருங்கள். நாங்கள் இவ்விழாவைப் புறக்கணித்து விட்டோம்” என்றார்கள். சிலர் தொல்காப்பியருக்குச் சாதி முத்திரை குத்தினார்கள். சாதிகள் இல்லாக் காலத்தில் வாழ்ந்த தொல்காப்பியரைச் சாதிச் சிறையில் அடைக்காதீர்கள் என்றால், “விழா நடத்துவோர் அதைத்தான் செய்கிறார்கள்; அதைத்தான் கூறுகிறோம்” என்றார்கள். அதற்காக நீங்கள் தொல்காப்பியரைச் சாதிச் சேற்றில் தள்ள வேண்டா என்றேன். அதுமட்டுமல்ல காரணம், “அவர்கள் நன்கொடை வாங்குவது முறையல்ல. அதனாலும் நாங்கள் விழாவிற்கு வரவில்லை” என்றார்கள்.
“தொல்காப்பியர் படிமத்தைச் சிறப்பாக அமைக்கும் நற்செயலுக்கு நன்கொடை வாங்கினால் என்ன தவறு” என்றேன். “எதற்கு நன்கொடை? இடத்திற்கும் விலையில்லை! படிமத்திற்கான முழுச்செலவையும் நன்கொடையாக ஒருவரே அளிக்க முன்வந்துவிட்டார். பிறகு நன்கொடை திரட்டுவது தொல்காப்பியருக்கா? இவர்களுக்கா” என்றனர். “தொல்காப்பியர் என்பதற்காக அனைத்துக் கட்சியினரும் நன்கொடை அளிப்பர். தமிழன்பர்களும் நன்கொடை அளிப்பர். இவ்வாறு தேவையின்றித் திரட்டுவது எதற்கு என உங்களுக்குப் புரியவில்லையா? ஆகவேதான் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம்” என்றார்கள். தமிழுக்காக ஒன்றுபடுங்கள் என்று சொன்னதும் “நீங்கள் சொல்வதால் திறப்புவிழாவில் பங்கேற்கிறோம்” என்றனர்.
விழா மேடை அவர்கள் கூறியது முற்றிலும் சரி எனக் காட்டியது.
புலவர் த.சுந்தரராசன், “வள்ளல் வெள்ளைச்சாமி சிலைக்கான முழுச் செலவு பத்து இலட்சம் உரூபாயையும் தருகிறார். எனினும் அவருக்கு முழுத்தொல்லையும் தரமாட்டோம். நாங்கள் சில இலட்சங்கள் தந்துவிட்டு மீதியை அவரிடம் பெறுவோம்” என்றார். மேடையிலேயே சில நூறாயிரங்கள் நன்கொடைகள் குவிந்தன. சிலர் பாதி தருகிறோம். மீதி வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர்.
ஒருவர் சென்னைக்கு வந்து நன்கொடை பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். குமரி மாவட்ட நண்பர்கள் கேட்பதுபோல், படிமத்திற்கான பணம் ஒருவரே அளிக்கும் பொழுது நன்கொடை எதற்கு? அப்படி அதில் தங்கள் பங்களிப்பு இருக்க வேண்டுமெனக் கருதினால் இவர்களைப் போன்ற பொறுப்பாளர்கள் ஆளுக்குப் பத்தாயிரம் உரூபாய், முதன்மை உறுப்பினர்கள் ஆளுக்கு ஆயிரம் உரூபாய், பிறர் ஆளுக்கு நூறு உரூபாய் எனத் தம் பங்களிப்பை அல்லவா அளிக்க வேண்டும்! அவ்வாறில்லாமல் ஊரார் மடியில் கை வைப்பா்னேன்!
எனவே, புலவர் த.சுந்தரராசனும் பிறரும் உடனே நன்கொடை பெறுவதை நிறுத்த வேண்டும்! இதுவரை பெற்ற நன்கொடையை வங்கியில் நிலை வைப்பாக வைத்துக் கிடைக்கும் வட்டித் தொகையில் படிமப் பேணுகைக்காகச் செலவிட வேண்டும். எனவே, நன்கொடை இனி்த்தேவையில்லை என அறிக்கை விடவேண்டும்! தொல்காப்பியப் படிமம் என்பது தமிழ்க்காப்பிற்கான குறியீடாக இருக்க வேண்டுமேதவிரச், சிலர் பணம் திரட்டும் கருவியாக இருக்கக்கூடாது!
பணம் திரட்டுவது எவ்வாறு அமையும் என்பதற்கு விழாவிலேயே சான்று கிடைத்தது. தமிழன்பர் ஒருவர், கோயில்பட்டியிலிருந்து மகிழுந்து எடுத்து வந்து இரவு உணவிற்குப் பணம் தருகிறேன் என்றார். 300 பேருக்கு உணவளிக்க வேண்டும் என்றும் ஒருவருக்கு உரூபாய் 100 ஆகும் என்றும் புலவர் த.சுந்தரராசன் தெரிவித்தார். அப்பொழுதே முப்பதாயிரம் உரூபாயை அளித்தார். ஆனால், அங்கிருந்தவர்கள் 150 பேர்தான். “மார்த்தாண்டம் உணவுவிடுதியில் சிறப்புச் சாப்பாடே 90 உரூபாய்தான்! இப்படித்தானே நன்கொடை பாழாகும்” என்றனர் வந்திருந்தோர். “நன்கொடைதான் பெற்றார்களே! வந்திருந்தவர்களுக்கு ஒன்றும் தரவேண்டா! மேடையில் இரு்நதவர்களுக்காவது தேநீர் முதலானவை அளித்திருக்கலாமே” இவ்வாறு வந்திருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். “தண்ணீரையே கேட்டபின் வாங்கித் தந்தவர்களுக்கு இதிலெல்லாம் நாட்டமிருக்காது” என்றும் ஒருவர் கூறினார்.
விழாவைத் தொடங்கியதிலும் தங்களின் ஆரியச் சார்பைக் காட்டிவிட்டார் புலவர். இந்து முன்னணி விழாவல்லவா? அதற்குரிய நேரத்தில்தானே தொடங்க வேண்டும்! எனவே, பிற்பகல் 2.00மணி என அழைப்பிதழில் குறித்திருந்தாலும் பிற்பகல் 3.49 மணிக்கு விழா தொடங்கியது. காரணம், பூசை 3.00 மணிக்குத்தான் நடத்தப்பட வேண்டுமாம். “நல்ல நேரம் எல்லா நேரமும்தான்” என்றதற்கு அப்படி எல்லாம் நடத்த முடியாதாம். அப்படி என்றால் நல்ல நேரம் பார்த்து முடிவு செய்தே அழைப்பிதழில் குறிப்பிட்டு இருக்கலாமே! “உரையாற்றும் நிகழ்ச்சியைத் தொடங்கிவிடுங்கள். பிறகு பூசையை வைத்துக் கொள்ளுங்கள்” என்றதற்கும் “அது எப்படி முடியும்” என்று மறுத்து விட்டார் புலவர் த.சுந்தரராசன். எனினும் பிற்பகல் 2.45 மணிக்குப் பூசை தொடங்கியது. தமிழ் நாட்டிற்குரிய குத்துவிளக்கை ஏற்றாமல் மலைாயளப்பாணியிலான விளக்கைத்தான் ஏற்றினர். ஆரியச் சடங்கிற்கு ஒரு மணி நேரம் ஆனது.
அடுத்தவர் என்ன சொல்லுவார்கள் என்ற நாணமுமின்றி எப்படித்தான் துணிந்து ஆரியப் பூசையில் ஈடுபட்டனரோ! தமிழன்னை இவர்களை மன்னிப்பாரா? உட்பகையாய்க்கருதி வீழச் செய்வாரா?
எனவே, புலவர் த.சுந்தரராசன்
- ஆரியப் பூசை நடத்தியமைக்கு மன்னிப்பு கோர வேண்டும்.
- நன்கொடை திரட்டுவதை நிறுத்த வேண்டும்.
- குமரி மாவட்டத் தமிழமைப்புகளை இணைத்து படிமப்பணியை முடிக்க வேண்டும்.
- சாலையோரத்தில் படிமம் அமைப்பதால் உரியவர்கள் இசைவினை முன்கூட்டியே பெற வேண்டும்.
தமிழக அரசு
- 2001-2002 ஆம் ஆண்டு கொள்கை விளக்க அறிவிப்பில் தொல்காப்பியர் புகழரங்கம் நிறுவுவதாகத் தெரிவித்துள்ளது. அதனையும் பிற புகழரங்கங்களையும் உடனே நிறுவ வேண்டும்.
- செம்மொழி காத்த செம்மல் மா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் ஆவணி 25, 1942 / செப்.10, 1911 அன்று குன்னூரில் அமைத்த தொல்காப்பியர் படிமமும் பூங்காவும் பாழடைந்த நிலையில் உள்ளன. அதைப் புதுப்பிக்க வேண்டும்.
- எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் தொல்காப்பியருக்குப் படிமம் அமைத்தல் வேண்டும்.
- உலகப் பல்கலைக்கழகங்களில் தொல்காப்பிய ஆய்விருக்கைககள் அமைக்க வேண்டும்.
- ஊரின் மையப்பகுதியில் இடம் தந்து பூங்கா அமைத்து, அங்கே தொல்காப்பியர் படிமம் அமைய உதவ வேண்டும்.
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும். (திருவள்ளுவர், திருக்குறள் 457)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 77, சித்திரை 20, 2046 / மே 03, 2015
Leave a Reply