(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 2/2 தொடர்ச்சி)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல்

ஆசிரியர் முன்னுரை

  உலகில் வழங்கும் மொழிகட்கெல்லாம் முற்பட்ட தொன்மை யுடையது நம் செந்தமிழ். ஆகவே அதனைப் பழந்தமிழ் என்று அழைத்துள்ளோம். இன்னும் பல அடைமொழிகளும் தமிழுக்கு உள. அடைமொழிகளைச் சேர்த்தே தமிழை அழைப்பது புலவர்களின் பெருவழக்காகும். பைந்தமிழ், நற்றமிழ், ஒண் தமிழ், வண் தமிழ், தண் தமிழ், இன்றமிழ் என்பனவற்றை நோக்குக. அதன் பண்பும் பயனும் கருதியே இவ்வாறு அழைக்கப்பட்டு வருகின்றது.

  மொழியே நம் விழி; மொழியின்றேல்  நமக்கு வாழ்வு இன்று; வாழ்வில் வளமும் இன்பமும் பெறல் அரிது.

            எண்என்ப ஏனை எழுத்துஎன்ப; இவ்விரண்டும்

            கண்என்ப வாழும் உயிர்க்கு

எனும் வள்ளுவர் பெருமான் வாய்மொழி முற்றிலும் உண்மையொடு பொருந்திய பொருளுரையாகும். ஆதலின் நமக்கு வாழ்வளிக்கும் நம் மொழியைக் கற்றலும், அதன் இயல்பும் வரலாறும் தெரிதலும் நமது இன்றியமையாக் கடன்களாகின்றன.

  நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக நம் மொழியை மறந்தோம்; வேற்று மொழியைக் கற்றோம்; வேற்று நாட்டவராகவே வாழத் தலைப்பட்டு விட்டோம்.

            ஆங்கிலம் ஒன்றையே கற்றார்; அதற்கே                                          

      ஆக்கையும் ஆவியும் ஈந்தார்;

            தாங்களும் வேற்றவர் ஆனார்; தமிழின்        

             தொடர்பு அற்றுப் போனார்

என்று பிறர் கூறி எள்ளும் இழிநிலை பெற்றோம். ஆங்கிலேயர் ஆட்சி அகன்றுவிட்டது; ஆனால் ஆங்கிலமொழி அகன்றிடக் கண்டிலோம். ஆங்கிலேயரை அகற்றினோம்; ஆனால் ஆங்கிலத்தை அகற்றமாட்டோம் என்று அறைகின்றனர் நம் நாட்டுப் பெரியவர்களில் சிலர்.

 ஆங்கில மொழியை அகற்ற வேண்டுமென்று நாமும் கூறவில்லை; ஆங்கில மொழியை அனைவரும்  கற்றிடல் வேண்டும் என்றுதான் கூறுகின்றோம்; ஆனால் அதற்கு அளித்துவரும் முதன்மையைத்தான் கூடாது என்று கூறுகின்றோம். அது நமது துணை மொழியாக இருப்பதை யாம் வேண்டா என்று கூறிலோம். அதுமட்டுமன்று; வாய்ப்புள்ளவர்கள் இன்னும் பல மொழிகளையும் கற்கலாம் என்றுகூடக் கூறுகின்றோம். உருசிய மொழி, செருமன் மொழி, பிரான்சு மொழி முதலியவற்றுள் ஒன்றை விரும்பியவர்கள், கற்க வாய்ப்பும் வசதியும் அளித்திடல் வேண்டும். ஆனால் வேற்று மொழிகளைக் கற்பதற்காக நம் மொழியை விட்டுவிடுதல் கூடாது.

  வேற்று நாட்டவர்க்கும் நம் நாட்டவர்க்கும் உள்ள வேறுபாடு இதுதான். வேற்று நாட்டவர் இங்கு வந்து நம் மொழியைக் கற்றாலும் தம் மொழியை மறப்பது கிடையாது. ஆனால் நம் நாட்டவரோ வேற்று மொழியைக் கற்கத் தொடங்கியதும் தம் தாய்மொழியை மறக்கத் தொடங்கிவிடுகின்றனர். போப்பு எனும் ஆங்கிலேயர் இங்கு வந்தார்; தமிழைக் கற்றார்; புலமை பெற்றார். ஆனால் தம் மொழியாம் ஆங்கிலத்தை மறந்திலர். தமிழில் உள்ள சிறந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதே காலத்தில் ஆங்கிலத்தைக் கற்ற நம் தமிழருள் எத்துணைப்பேர் ஆங்கிலத்துள் உள்ளவனவற்றைத் தமிழில்  பெயர்த்தனர்? யாருமிலரே! இந்நிலை மாறுதல் வேண்டும். வேற்று மொழியைக் கற்கும் நாம், நம் மொழியை மறவாது அதன் வளத்திற்கு வேற்று மொழியறிவைப் பயன்படுத்த வேண்டும். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும். இரண்டும் செய்திலோம். அன்றியும் உள்ளுவதும் உரையாடுவதும் வேற்று மொழியிலேயே நிகழ்த்தினோம்; ஆகவே, நமக்கென ஒரு மொழியின்று என்று பிறநாட்டவர் எண்ணுமாறு நடந்துவிட்டோம்.

  மேலை நாட்டுச் சமயப் பெரியார்கள் இங்கு வந்து தமிழையும் பிற மொழிகளையும் கற்றனர்; தமிழும் அதன் கிளை மொழிகளும் தனிக் குடும்பத்தைச் சார்ந்தன. தமிழ் வேறு; ஆரியம் வேறு; தமிழ், ஆரிய மொழியின் சிதைவு மொழிகளுள் ஒன்றன்று என்று நிலைநாட்டினர். இவ்வகையில் பேரறிஞர் காலுடுவல் அவர்கள் செய்த தொண்டினை நாம் என்றும் போற்றுதற்குரியோம். அவர் நன்கு ஆராய்ந்து இயற்றியுள்ள திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் ஒப்புயர்வற்ற நூலைத் தமிழ் நலம் கருதுவார் யாவரும் கற்றுத் தெளிதல் வேண்டும். அவர், தமிழின் இயல்பும் சிறப்பும் பற்றித் தெரிவித்துள்ள கருத்துகள் நடுநிலை பிறழாதன; பொன்னேபோல் போற்றத் தக்கன.

  அவர் அடிச்சுவட்டைப் பின்பற்றியே இந் நூல்  எழுதப்பட் டுள்ளது; ஆங்காங்கு அவர் கருத்துகள் எடுத்தாளப்பட்டுள்ளன.

  பேரறிஞர் காலுடுவல் இங்கு வாழ்ந்த காலத்தில் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் வெளிவந்து அவர் கைக்குக் கிட்டில போலும். அதனால் அவர் கூறும் கருத்துகளில் சில இன்று மாற்றம் அடைதற்குரியனவாய் உள்ளன. அவற்றையும் ஆங்காங்குச் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆயினும் அவர் நூலின் துணைகொண்டே நம் தமிழ், தென்னக மொழிகளின் தாய் என்றும் இந்திய மொழிகளின் தாய் என்றும் நிலைநாட்ட முயன்றுள்ளோம்.

 பேரறிஞர் காலுடுவல் போன்று நம்மால் போற்றத் தகுந்தவர் பேரறிஞர் ஈராசு ஆவார். அவர் தம்மைத் திராவிடர் என்றே அழைத்துக்கொண்டார். அவர் மறைந்த மாநகரங்களான ஆரப்பா மோகஞ்சதரோ எனும் இரண்டைப் பற்றி நன்கு ஆராய்ந்து அங்கு வழங்கிய மொழி தமிழே என்று நிலைநாட்டியுள்ளார். அவர் கூறியுள்ள ஆராய்ச்சியுரைகள், பழந்தமிழே இந்திய மொழிகளின் தாய் என்பதை நிலைநாட்டத் துணைபுரிந்துள்ளன.

 தமிழ் இந்நாட்டு மொழியே; ஆரியம் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் வழங்கிய மொழி பழந்தமிழே என்று நிலைநாட்டுவதற்கு நன்னெறி முருகன் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் சுனிதக்குமாரர் சாட்டர்சி இயற்றியுள்ள வங்காள மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் நூல் பெரிதும் துணைபுரிந்துள்ளது.

  தமிழ் மொழியின் ஏற்றத்தை நிலைநாட்ட ஆங்காங்கு மேலைநாட்டு மொழிநூலறிஞர்களின் உரைகளை எடுத்தாண்டுள்ளேன். அனைவர்க்கும் நம் உளமார்ந்த நன்றி என்றும் உரியதாகும்.

 நூலை எழுதினால் மட்டும் போதுமா? அஃது அச்சேறினால்தானே நூல் வடிவில் வெளிவந்து உலவுதல் இயலும். இன்று தமிழ்நாட்டில் நாள்தோறும் புத்தகங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மக்களிடையே படிக்கும் ஆர்வமும் பெருகிவருகின்றது. ஆனாலும் உயர்ந்த ஆராய்ச்சி நூல்களை விரும்பிப் பெற்றுப் பயில்வோர் அரியராகவே உள்ளனர். கண்ணைக் கவரும் அட்டைப் படமும், கருத்தை மயக்கும் காதல் நிகழ்ச்சியும் பெற்றுள்ள  புத்தகங்கட்கு இன்று நாட்டில் விற்பனை மிகுதி என்று கூறுகின்றனர். ஆதலின் புத்தகம் வெளியிடுவோர் உயர்ந்த ஆராய்ச்சி நூல்களை வெளியிட முன்வர அஞ்சுகின்றனர்.

 புதுக்கோட்டை  வள்ளுவர் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு யான் எழுதியுள்ள தொல்காப்பிய ஆராய்ச்சி எனும் நூலையும், திருக்குறள் உரையையும் வெளியிட்டுள்ளது.

  வள்ளுவர் பதிப்பகம் ஏனைய பதிப்பகங்களைப் போன்று வாணிப நோக்கோடு தொடங்கப்பட்டதன்று. அதன் உரிமையாளர், அண்ணல் பு.அ.சுப்பிரமணியனார் புதுக்கோட்டையில் பல ஆண்டுகளாய்க் கல்வித் தொண்டு ஆற்றிவரும் பெரியார் ஆவார். கல்வித் தொண்டே கடவுள் தொண்டு என்று கருதி  அத்தொண்டிற்கு அனைத்தையும் அளித்து, அத்தொண்டில் இன்பம் காணுபவர்; மக்கள் எல்லாரும் நன்னெறியில் வாழவேண்டும் என்று நாளும் கூறிக் குறள் நெறியைப் பரப்பி வருபவர்; குறள் நெறி ஓங்கினால் குடியர சோங்கும் என்ற கோட்பாட்டினை உடையவர். பயன் கருதாது பணியாற்றிவரும் இப்பெரியார் உயர்ந்த ஆராய்ச்சி நூல்கள்  வெளிவரவேண்டும். ஆராய்ச்சி நூல்கள் எழுதுங்கள். யான் வெளியிட ஏற்பாடு செய்கின்றேன் என்று என்னை அடிக்கடி ஊக்குவித்து, என் பொருட்டே இப்பதிப்பகத்தைத் தோற்றுவித்துப் புத்தகம் வெளியிடும் தொண்டில்  வாணிபத்தில் அன்று  ஈடுபட்டுள்ளார்கள். தமிழ் நலம் கருதும்  அதன் சார்பாய் என்நலம் கருதும் இப்பெரியார்க்கு என்ன கைம்மாறு செய்ய இயலும்.

            கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்டு

            என்னாற்றும் கொல்லோ உலகு.

ஆயினும் தமிழுலகம் வள்ளுவர் பதிப்பகம் வெளியிடும் நூல்களைப் பெற்றுப் பயனடைதல் வேண்டும். வெளியிடப் பெறும் நூல்கள் விரைவில் விற்பனையானால்தான் மேலும் புதிய புதிய நூல்கள் வெளிவர இயலும். ஆதலின் தமிழ் நலம் கருதும்  அனைவரும் வள்ளுவர் பதிப்பகம் வெளியிடும் நூல்களை விலைக்குப் பெறுவதைக் கடமையாகக் கொள்ளல் வேண்டும். எல்லா நூல்நிலையங்களும் வள்ளுவர் பதிப்பக நூல்களைப் பெற்று வைத்து மக்களுக்குப் பயன்படச் செய்தல் வேண்டும்.

விலைப் பொருட்டால் நூல் பெறுவார் இல்லெனின் நுண்கலைப் பொருட்டால் நூல் தருவார் யார்?

   தமிழ், மறுமலர்ச்சி பெற்றுவருகின்றது. அம் மலர்ச்சி நன்மணம் அளித்தல் வேண்டும். அதற்குத் துணை செய்வனவே வள்ளுவர் பதிப்பக நூல்கள்.

  உலக மொழிகளின்  அன்னையாம் நம் பைந்தமிழின் பழந்தமிழின் உயர்வு கருதி ஒல்லும் வகையால் கடனாற்ற ஒவ்வொரு தமிழரும் மடிதற்றி முந்துவார்களாக. தமிழ் வெல்க.

 கருமுத்து அகம்             

 (சி. இலக்குவன்)

 திருநகர்,

 30.1.62.