இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய

தமிழர் வீரம்

திரு. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள் எழுதிய

முதற் பதிப்பின் முகவுரை

தமிழர் வீரம் என்னும் நல்லுரைத் தொகுதி வரப்பெற்றேன். படித்து உவகையுற்றேன். இவ் வினிய உரைச் செய்யுள் எழுதிய புலவர், சென்னைப் பல்கலைக் கழகத் தலைவராம் திரு. இராபி. சேதுப்பிள்ளை அவர்கள். ‘ சொல்லின் செல்வர் ‘ என வள மலி புலமை இளந்தமிழுலகு பாராட்டும் இப் பேராசிரியர் இனிய எழுத்தாளர்; இன்சொற் பேச்சாளர். இவர்கள் உரை கேட்டு மகிழாத தமிழர் இரார். இவர்கள் இயற்றும் நூல் எதுவும் தமிழகம் முழுவதும் செல்லும் நாணயம்; நூல் நோட்ட வண்ணக்கர் மதிப்பு பாராட்டும் வேண்டாமல் செலாவணியாகும் கலா உண்டியல். இந் நூலுக்கு முகவுரை எழுதித் தகவுபெறுமாறு என்னைத் துண்டியது என்பால் இவர்கள் கொள்ளும் அன்பைக் காட்டும். தமிழில் சிறந்த செய்யுட்கள் எல்லாம் அகம், புறம் என்னும் பொருட்செல்வக் கருவூலங்களாகும். அகப் பொருள் நூல்கள் அனைத்தும் காதற் களஞ்சியங்கள். புறப்பொருள் நூல்களில் பழந் தமிழரது பேராண்மையும் அவரது போர் அறத்துறையும் பேசப்படும். தமிழ்ப் பொருநர் வீரம், இகலார் மேற் படையெடுக்கும் இழிவை இகழும்; வெற்றி வெறியிலும் வீழ்வாரை நலியும் சிறுமையை வெறுக்கும். தமிழர் போர் அற ஒழுக்கம், வெட்சி-வஞ்சி-உழிஞை-தும்பை-வாகை என்றைத் திறப்படும். பகைவரை எச்சரியாமல் மெய்வீரர் போர் தொடங்கார். அவ் வெச்சரிப்பின் பொதுவகையே வெட்சித் திணை (ஒழுக்கம்) ஆகும். படையெடுப்பு வஞ்சி எனப்படும். பகைவர் அரணழித்தல் உழிஞை. பொருகளத்தில் எதிர்த்துப் போர் புரிதல் தும்பை. முடிவில் வெற்றி மாலை மிலைவது வாகை. இப்போர் ஒழுக்கம் ஒவ்வொன்றும் இடங் காலங்களுக் கேற்பப் பலதிறத் துறை வகுத்து நடக்கும். இத்தகைய தமிழர் செந்திறப் போர்த்துறை அனைத்தும் முறைபடத் தொகுத்து, வரிசைப்படுத்தி, எளிதில் எல்லோரும் தெளியுமாறு சிறிய இவ்வுரை நூலில் விளக்கிய ஆசிரியர் புலமைத் திறம் பாராட்டற்பாலது. போர்க் கொடியேற்றம், படைத்திறம், போர்க்களம், மறமானம், தானைவகை, நிலப்படை, கடற்படையாட்சி, கோட்டை கொத்தள மாட்சி, பேராண்மை, மாதர் வீரம், வீரக்கல், விருதுவகை எல்லாம் நிரல்படத் தொகுத்து, திறம்பட வகுத்து இந்துவில் விளக்கப்பட்டுள்ளன. புறநானூறு, திருக்குறள், பெருந்தொகை, புறத்திரட்டு முதலிய பெருநூல்களும், அவை கூறும் அருந்திறற் செய்திகளும் இதில் அழகுற எடுத்து ஆளப்படுகின்றன. பண்டைத் தமிழர் போர் மரபும், மறமாண்பும், வீரர் அறப் பரிசும் எல்லாம் சிறிய இவ்வொரு நூலே செறிய விளக்கும் பெற்றியும், இதன் பொருள் நிறைவும் சொல்வளமும் வியப்பொடு நயப்பும் விளைவிக்கின்றன. இந்நூலை அறிஞரெல்லாம் பாராட்டி வரவேற்று ஆதரிப்பர் என நம்புகிறேன். நூலுக்கு வாழ்த்தும், நூலாசிரியருக்குப் பல்லாண்டும் கூறுகிறேன்.

பசுமலை
9-5-1947
நாவலன் – இளசைகிழான்
ச. சோ. பாரதி

  • இரா.பி.சேது(ப்பிள்ளை), தமிழர் வீரம்