(தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்): முன்னுரை – க. அன்பழகன் – தொடர்ச்சி)

1. தமிழ்க்கலை


(சென்னை  ஒய்.எம்.சி.ஏ. பட்டி மன்ற முதல் ஆண்டு நிறைவிழாவில் பேசியது)


தமிழ் நாட்டில் சில காலமாகப் புத்துணர்ச்சி தோன்றியுள்ளது. அவ்வுணர்ச்சி ஆக்கத்திற்குப் பயன்படுமாக! இத்தகைய பட்டிமன்றங்கள் பல இந்நாட்டில் காணப்படல் வேண்டும். இயற்கைக்கு மாறான கொள்கைகளை அழித்துவிடுங்கள். ஆனால், இயற்கை நெறிப்பட்ட கொள்கைகள் இன்று அழிக்கப்பட்டு வருதலைக்காண வருந்துகிறேன். அது கூடாது. இத்துறையில் சிறப்பாக மகளிர் முயற்சி செய்தல் வேண்டும்.

ஆடல், பாடல், நகைச்சுவை இவை பெரிய கலைகளாம். என் சொந்தக் கலை, ‘பட்டினிப் பட்டாளத்தையொழிக்கும் கலையாகும். அதுவே வாழ்க்கைக் கலை; உயர்ந்த கலை. என் வாழ்வு முழுதும் அதற்கே முயற்சி செய்துவருகிறேன். பட்டினிப் பட்டாளம் ஒழிந்தால்தான் நாட்டில் தமிழ் வளரும்; கலை செழிக்கும்.


பேச்சு ஒரு சிறந்த கலையாகும். இளைஞர் திறம்படப் பேசப் பழகவேண்டும். முன்னர், பேசப் போவதை எழுதிக்கொண்டு பின் பேசவேண்டும். பிறகு குறிப்பெழுதிக்கொண்டு பேசலாம். பழகிய பின், ஒருமுறை நினைத்துப் பார்த்துக் கொண்டு பேசலாம். தமிழ் மொழியில் அமைந்த கலை இனியது; உயர்ந்தது.

கலையை மகளென, பெண்ணெனப் பேசும் பழக்கம் நம் நாட்டிற்கே சிறப்பானது. கலையெனில் பெண், சக்தி, உமா. கலைக்கு (சக்திக்கு) எல்லை யாது? உலக முழுதும் அவள் எல்லை. அதனைத் தாண்டி சூரியமண்டிலம், பின் கோள்கள்; எல்லாங் கடந்த ஒளியுலகு; அதற்கப்பாலுமுள்ள விந்து.. அதனையும் தாண்டிய நாதவுலகு. அதுவே கலையின் எல்லை. கலைமகள், காணும் இந்தப் பருமையுலகு, காணாத நுண்மையுலகு, பருநுண்மை , இரண்டுங் கடந்தவுலகு யாவற்றையுங் கடந்தவள், எல்லா இடமும், காலமும், தத்துவங்களும் கடந்தது கலை. அந்நிலை கண்டவர் எல்லாக் கலைகளையும், கல்லாமலே எளிதில் அறிவர்.


கதிரவன், கோள்கள், பூமி இவையெல்லாம் ஆராயும் கலைகளாகும். எல்லாம் மூலக் கலையினின்றே தோன்றுவனவாம்.

காவியம், ஓவியம், இசை, நாட்டியம், விஞ்ஞானம், தத்துவம் யாவும் கலைகளே. இன்று நாம் காணும் கலைகளை யெல்லாம் தமிழ்ப் பெரியோர் கண்டனர். 1,800 ஆண்டுகளாக அதற்கு இடை யூறுகள் எழலாயின.

தமிழ்க் காவியக்கலை மிகச் சிறந்ததொன்றாகும். அது வாழ்விற்குத் துணை போகுமா? என ஆராய்வது ஒரு நல்ல கலை யெனலாம்.


தமிழ்க்கலை யெல்லாம் வீரம்; காதல். இவையிரண்டும் இல்லாதது கலையன்று. இரண்டும் தேவை. இரண்டும் வேறு பட்டனவல்ல.


கிரீசு நாடு ஓவியச் சிறப்போங்கியது. அதனினும் உயர்ந்தது தமிழ் ஓவியக் கலை; ஒப்புயர் வற்றது. தென்காசி, புதுக்கோட்டை, மாபலிபுரம் இங்குள்ள ஓவியங்கள் இணையற்றவை. அசண்டா ஓவியங்களிலுங்கூட மேலானவை தமிழ்நாட்டு ஓவி யங்கள். உலகிலேயே ஓவியச் சிறப்பு கொண்ட தமிழ்நாடு இன்று ஓவிய ஆராய்ச்சியில் குறைந் துள்ளமை கண்டு மனம் வாடுகின்றேன்.


சப்பானில் தமிழர் ஓவியம் கலந்துள்ளது; ஓவியத்தின் தாயகம் தமிழக மெனலாம்.


இசையே தமிழ். தமிழ்க் கடவுள் இசை வடிவானவர். ‘ஏழிசையாய் இசைப்பயனாய்’ என ஆண்டவனை அடியார் போற்றினர். முன்னர் இந்தியா மந்திரியாயிருந்த மார்லிஎன்பவர் நமது ஓவியத்தைப்பற்றி ஐ.சி.எசு. மாணவர்கட்கு ஒருமுறை கூறியுள்ளார்.


“ஓவியத்தில், இசையில் உயர்ந்த நாடு இந்தியா, நாகரீகம் செழித்த நாடு; உலகிற் சிறந்த நாடு. அத்தகைய கலைத்திறனை நாங்கள் எவ்வளவு முயன்றாலும் பெற முடியாது’ என்பதுவே அவர் புகழ்ச்சி.


ஆம், இசைக்கு வெப்பநிலைப் பொருத்தம் வேண்டும். மிகுந்த வெப்பம் அல்லது குளிர்ச்சியுள்ள நாட்டில் இசை மேம்படல் அருமை. வெம்மையும் தண்மையுங் கலந்தநிலை இசைக்கு மிகவும் ஏற்ற மளிக்கும். நமது வங்காளக் குடாக்கடல் மண்ணில் இசையை வளர்க்குந்திறன் உண்டு என்பதனை ஆராய்ந்துள்ளனர்.

ஆனால், அவ்விசை இங்கு எங்கேயுள்ளது? அகப்போரும், புறப்போர்களும் கலையை அழித்து வருகின்றன. போர், கலையை அழிக்கும்; நாட்டை அழிக்கும்; நாகரிகம் அழிவதைச் சொல்ல வேண்டு மோ? தாகூர் இதுபற்றி நன்கு கூறியுள்ளார்.

தமிழர் சமயம், ஆடல் சமயம்; பாடல் சமயம். இறைவனது நெறியைச் சம்பந்தர் கூறும்போது, ஆடல் நெறியென்பேன்; பாடல் நெறி யென்பேன்என்கிறார். ஆனால் இடைக்கால ஏட்டு வேதாந்திகள் சிலர், கலையால், நாட்டியத்தால் சமயம் அழியுமென்றனர். கலையை வளர்ப்பதே உண்மையான சமயமென்பேன். பழந்தமிழர் வைத்தியம், சித்த வைத்தியம்; நல்ல முறையாகும். அது மருத்துவக் கலையுள் மேம்பட்டது. குட்டம், சயம், எலும்புருக்கி முதலிய நோய்கட்கு இன்றும் சில ஊசிகள் தவிர, நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ; சித்த முறையில் நல்ல மருந்துகள் உண்டு. இன்றும் அந்நோயை எளிதில் போக்குவோர் பலர் உளர். அம்முறையை ஆக்கம் பெற ஊக்குதல் கடனாகும்.


இன்று நம் நாடு வளர எக்கலை வேண்டும்? விஞ்ஞானக் கலை; விஞ்ஞானக் கலையென்பேன். இயற்கைத் தாயின் கருவின் உள்ளத்தில் விஞ்ஞான உண்மைகள் நிறைந்து கிடக்கின்றன. இன்றுவரை மனிதன் உள்ளத்தைத்தான் கண்டான்; இல்லாததைக் கண்டானில்லை. இயற்கையின் எல்லையை இன்னும் காண முடியவில்லை. அறிஞர்கள் கால தேச வருத்தமானத்திற்கேற்ப விஞ்ஞான உண்மைகளைக் காண்பர். இயற்கையும் காலத்திற்கேற்ப வெளிப்படும். முதலில் அகல் விளக்கு இருந்தது. எண்ணெய்க்கு ஆமணக்குத் தேவையாயிருந்தது. இயற்கையன்னை ஆமணக்குச் செடியினைக் காண உதவினாள். பின் மக்கள் பெருகினர். மண்ணெண்ணெய் தேவையாயிற்று. பருமா, ஈரான் முதலிய இடங்களில் மண் (இயற்கை) எண்ணெயைச் சுரந்தது. அதுவும் போதவில்லை. மக்கள் மிகவும் பெருகினர். அன்னை அறிஞனிடம் ‘மின்னலை’க் (Electricity) காண அருளினாள். மனிதன் மின் விளக்கைக் கண்டான். இதையுங் கடக்க வேண்டிய காலம் வரலாம்! என்னென்ன வருமோ!
இன்று ‘அணு’ கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் எல்லாவற்றையுஞ் செய்யலாம். ஆனால், ஆக்கத்திற்கே அதனைப் பயன் படுத்தவேண்டும். திருவிளையாடலில் ‘எல்லாம் வல்ல சித்தரான படலம்’ ஒன்றுள்ளது. முதலில் அதைக்கண்டு வியந்தேன். இப்படியும் இயலுமா? எண்றெண்ணினேன். இன்று அணு எல்லாக் காரியங்களையும் செய்யப் போவதைக் காண்கிறோம்.



‘ஆர்டிக்கு கடல்’ நாடு முன் எப்படி இருந்தது? இன்று எப்படி விளங்குகிறது! எங்கும் பட்டணங்கள்! கடலோர மெல்லாம் பட்டணங்கள்! பனி உறையும் அந்த நாட்டில் இன்று கோதுமை செழிப்பாக விளைகிறது! எப்படி வளர்கிறது? அங்கு விஞ்ஞான அறிவு வளர்கிறது. மக்கள் வளர்ச்சிக்கேற்ப விஞ்ஞானமும் வளர்ந்துகொண்டே போகிறது. இரசிய மனிதன் இரும்பு வேண்டுமென எண்ணினான். ஏதோ மணலையும் இன்னும் சில பொருள்களையுங் கலந்தான்; இரும்பு வந்தது. அந்த அறிவு இங்கும் ஓங்கவேண்டும் .   



அப்போது, ஏன் பாலாற்றில் என்றும் வெள்ளம் ஓடச் செய்யக்கூடாது? இரசியாவில் அப்படிச் செய்திருக்கிறார்கள். நம் நாட்டில் 10 கோடியாயிருந்த மக்கள் 20 கோடியாயினர். பின் 30, 40 கோடியாயுள்ளனர். அடுத்த கணக்கில் 50 கோடியாகலாம். அதற்கேற்ப விஞ்ஞானத்தை வளர்த்துக்கொண்டே போகவேண்டும். நிலநூல் (Geology) உயிர்நூல் (Biology) செடிநூல் (Botany) இவற்றை நன்றாக ஆராய்ந்து அறியவேண்டும். இவற்றை யெல்லாம் தமிழாக்க வேண்டும். ஆக்க முடியுமா? எனச் சிலர் அஞ்சுகின்றனர். முடியும்; முடியும். தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்ந்த புலவர்களை அத்தொண்டில் புகுத்துதல் வேண்டும். இங்குத் தலைமை வீற்றிருக்கும் சேதுப் பிள்ளையவர்கள் நல்ல தமிழ்த் தொண்டர்; அவர்கள் இத்தகைய தொண்டில் ஈடுபடவேண்டும். அத் தகைய காலம் மிக அணித்தேயுள்ள தென்பேன். நம்நாடு பழம் பெருமையுடன் பிற நாடுகளோடும் உயர வேண்டுமானால் இன்றைய தமிழ்க் கலையில் விஞ்ஞானக்கலை நிரையவேண்டும். விஞ்ஞானம் படித்தால் நாத்திகராய் விடுவராம்; மாணவர் கெட்டு விடுவராம். இப்படிச் சொல்வது பிழையாகும். எதில் விஞ்ஞானமில்லை ? கம்ப ராமாயணத்தில் செடிநூல் (Botany) உண்டு.

இரசியாவில் முன்னெல்லாம் கலை யென்றால், அறைதான் கிடைக்கும். இன்று அங்கு யாவரும் விஞ்ஞானத்தை விரும்பிப் படிக்கின்றனர். அங்கு “அழகுக் கலை” வளர்கின்றது.
இளைஞர்களின், குழந்தைகளின் முகமே ஒரு கலை. அங்கு அழகு நடனஞ் செய்கின்றது. நமது நாட்டில் அதனைக்காண முடியவில்லையே! எலும்பும் தோலுமாக வல்லவோ இளைஞர் காணப்படுகின்ற னர்? அவர் முகத்தில் களையில்லை; கலையுமில்லையே!

பறவைகளின் ஒலியும், நீலக்கடலின் காட்சியும் நல்ல கலையின்பந்தான். பசியிருக்குமிடத்தே, பட்டினிப் பட்டாளத்திடம் கலை எப்படிப் பற்றும்? இன்று நான் வரும்போது மூன்று பட்டினிப் பட்டாளங்கள்-நகராட்சி மன்றம், ரிக்சா, அரசாங்க அச்சுத் தொழிலாளர்கள்-ஊர்வலங்கள் போவதைக் கண்டேன். அவர்களிடம் இசையைப் பற்றியோ, கலையைப் பற்றியோ கூறிப் பயனென்ன? இசையைக் கேட்பதைவிட்டு, பட்டினி யெரிச்சலில் ‘பளார்’ என்று அறைதான் கிடைக்கும். ஆதலினாலே, எந்த நாட்டில் பட்டினிப் பட்டாளம் ஒழிக்கப்படுமோ அங்குத்தான் உண்மைக் கலை ஒங்கும்.
’விவாதக்கலை’ வேண்டும். இன்று இரசியா ‘Dialectic Materialism’ பேசுகின்றது. இது 3,000 ஆண்டுகட்டு முன்னரே காணப்பட்டது. விவாதக் கலையின் மூலமே அது படிப்படியாக வளர்ந்து இன்றைய நிலையுற்றது. வாதப்போர் என்பது அறிவுப்போர். அதிலேயே உண்மைகாண முடியும். விவாதஞ் செய்தல் ஓர் உண்மையான கலை ; நிலையான கலை.

நம்நாடு வாழ விவாதம் வேண்டும். அன்று நாடு நன்றாக வளரும். பேச்சில் அழகும், திறமை யும், பண்பும் அமைய வேண்டும். இவ்வகையில் பெண்மக்கள் பெரிதும் பங்கு கொள்ளவேண்டும்

அப்போதுதான் நம் நாடு நன்னிலையடையும்.
தமிழ்க்கலை வாழ்க! தமிழ்நாடு உயர்க!

(தொடரும்)
தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்)
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார்