இலக்குவனார் என்றும் வாழ்வார் ! – பழ.தமிழாளன்
தமிழ்க்காப்புக் கழகம் இணையவுரை
தமிழ்ப்போராளி இலக்குவனார் நாண்
மங்கல விழா
திரு . ஆண்டு துலை( ஐப்பசி ) 27
13-11-2022 ஞாயிறு 10.00 மு.ப
பாவரங்கம்
தமிழின மொழிநாட்டுப் போராளி
இலக்குவனார் என்றும் வாழ்வார் !
தமிழ்வாழ்த்து .
1.
தாய்மொழிக் கெல்லாம் தாய்மொழியாய்த்
தரையில் மலர்ந்த தமிழ்த்தாயே !
வாய்த்தவென் தாயே நின்னடியை
வணங்கித் தொழுவன் நின்மகனே!
பாய்ந்துசெல் அம்பு நெடுந்தொலைவு
பாய்ந்து செல்லல் போன்றென்றும்
தோய்ந்துமே தமிழ்ப்ப ணிஆற்றுதற்குத்
துணையாய் நிற்க வேடுமம்மா!
2.
குறிக்கோளன் என்றபொருள் கொண்டு
தமிழ் நிலமதிலே தோற்றம் பெற்றே
கொள்கையினில் அரிமாவின் குணங்
கொண்ட இலக்குவனார் என்ற மாண்பார்
நெறிபிறழா வாழ்வுநிறை நாண்மங்கல
விழாத்தலைமை ஏற்றி ருக்கும்
தமிழ்க்காப்புக் கழகத்தின் இலக்குவ
னார் திருவள்ளு வமாண்பி னர்க்கும்
அறிவுதமிழ்ப் பற்றுறச்செய் அவையி
னையே வரவேற்கும் காத லர்க்கும்
அணிப்பாவை அரங்கேற்றும் ஆற்றல்
சால் தமிழ்வேங்கை என்பா ருக்கும்
அறிவூற்றத் தமிழ்ப்பற்றார் இளங்கோசீர்
பாண்டியர்க்கும் தியாகு விற்கும்
அழகுபெற பதிவுசெய்யும் மகிழ்நனு
க்கும் பாரதிக்கும் வணக்கம் சொல்வன் !
3.
பேராசான் பலபேர்கள் பைந்தமிழைப்
பயிற்றுவிக்கும் தமிழ்நி லத்தில்
பெரும்பாலோர் தமிழ்ப்பாடம் வகுப்ப
றையில் நடத்தலுடன் முடித்துக் கொள்வர்
தீராத தமிழ்ப்பற்றைச் சிந்தனையில்
ஊட்டுகின்ற சிலபே ருள்ளே
தேர்ந்தமுதல் இலக்குவனார் செந்
தமிழ்த்தாய் ஈன்றெடுத்த தலைமைச் சேயே !
வாராத திருவைப்போல் வண்டமிழிற்
பற்றுடையார் பகையைக் காணின்
வரிஅரிமா போலடர்த்து வெஞ்சினத்
தைக் கண்களிலே ஏற்றி வைத்து
வேரார்த்தே புயலுக்கு வீழுகின்ற மரம்
போலப் பகையை வீழ்த்தி
வேந்தரெனத் தமிழுக்கே மார்தட்டி
இலக்குவனார் ஆர்த்தே நிற்பார் !
4.
இந்திதன்னை முந்தித்தான் எதிர்ப்ப
திலே களங்கண்டு நின்ற வேங்கை
திருவள்ளு வநக்கீரர் தொல்காப்பார்
இளங்கோவின் உள்ளம் பெற்றுச்
செந்தமிழைக் காப்பதற்கே தளபதியாய்
முன்னின்ற வினையின் வல்லார்
நைந்துடலம் வாடிடினும் நற்றமிழே
உயிரென்று கொண்ட ஊற்றார்
நாட்டகத்தில் இந்தியினை நடக்காது
காலொடித்த செயலின் வீரர்
சிந்தனையின் ஊற்றாகச் சிதறாது
செந்தமிழைப் பதித்த ஆசான்
இலக்குவனார் நீடுபுகழ் நிலமதிலே
கதிரேபோல் ஒளிரும் நன்றே!
5.
இலக்கணத்தில் நீந்தியுமே இலக்கியத்
தில் தோய்ந்தநல்ல ஆற்ற லாளர்
ஈடில்லா இலக்கணமாம் தொல்காப்பி
யக்கரைகண்(டு) ஆங்கி லத்தில்
நலமுறவே மொழிபெயர்த்து நாட்டோரை
வியக்கவைத்த புலமை யாளன்
நற்றமிழின் சிறப்பதனை ஞாலமெல்
லாம் முரசொலித்த வெற்றி வீரன்
மலரறிவு பெற்றுலகில் மாணவரை
எழுச்சியுற வைத்த சான்றோன்
மாண்புதமிழ்ப் புலமையினால் மாற்றா
ரை வெற்றிபெற்ற புகழின் குன்று
நிலமுழுக்கத் தமிழ்ப்பற்று நீக்கமற
மணப்பதற்குப் பாடு பட்ட
இலக்குவனார் புகழென்றும் நிலைத்து
நின்று வரலாற்றில் ஒளிரும் நன்றே!
6.
‘தனித்தமிழின் காவலராம்’ ‘தமிழ்க்
கொண்டல்”தமிழ்த்தாயின் தவத்தின் சேயன்‘
‘தன்மானப் பெரும்புலவர்’ ‘தலைமைத்
த லைவரெ’னப் போற்றிப் பின்னும்
‘தனிச்செல்வர் தமிழ்மொழியின்’ ‘தமிழு
ரிமைப் போராளி’ ‘தமிழாய் வாழ்ந்தார்’
‘தமிழியக்கம்’ ‘குறள்நெறிக்கா வலர்’
‘மொழியி யலறிஞர்”தொல் காப்புச் சான்றோர்’
இனிக்கின்ற ‘இலக்கணச்செம் மலெ’
‘ழுத்து லகஇளங்கோ’ ‘சிறைசெல் செம்மல்’
இயலிசையாம் நாடகத்தின் ஏற்றமிகு
‘முத்தமிழின் காவ லர்’தான்
மனமொழியால் ஒன்றியுமே மலர்விருது
பலபெற்று விருதை ஆள்வார்
மாநிலத்தே இலக்குவனார் மாண்பார்
க்கும் இசையோடு வாழ்வார் ! வாழ்வார்!!
7.
கருக்கொண்ட கார்மேகம் கழனியிலே
பெய்வதைப்போல் கருத்தின் ஓட்டம்
கல்லூரி மாணவரும் கற்றிடவே
வழியில்லா ஏழை யர்தாம்
உருப்பெற்றே உள்ளத்தில் ஒளிர்ந்திடவே
செய்திட்ட உயர்பே ராசான்
ஒப்பின்றிக் குமுகாயம் உயர்வுற்றுத்
திகழ்வதற்கே உழைத்த நல்லோன்
திருவாக்குஞ் செந்தமிழைச் சிந்தையி
லே ஏற்றிவைத்த புலமை யாலே
ஈடில்லா முப்பானூல் விளைவித்த
சொல்லேரின் உழவ னாவான்
எருவாகித் தமிழுக்கே இயன்றவரை
பாடுபட்டே உழைத்த சீர்சால்
இலக்குவனார் பணியினுக்கே ஈடிணை
யும் இல்லையென்ற கூற்றும் மெய்யே!
8.
தன்னலத்தைப் புறந்தள்ளித் தமிழ்நலத்
தை நெஞ்சத்து வைப்பாய் வைத்துத்
தமிழ்த்தாய்க்கு மகுடமுமே தானளித்
து வாழ்வதுவே கடனாம் என்று
மன்னுதமிழ் அறமகளை மறக்காது
போற்றிபணி செய்த ஆசான்
மடைதிறந்த வெள்ளமென மக்களின்
முன் கருத்துரைக்கும் உரையின் வல்லான்
முன்னெடுத்த பணியதனை முனைப்
போடு வெற்றிகண்ட வேங்கை யாவான்
முத்தமிழை மூச்சாக முகிழ்த்தவனாய்
நடைபோட்ட மாண்பார் மைந்தன்
என்றென்றும் தமிழ்த்தாயை எண்ண
மொழி செயலாலே காத்த சேயன்
இலக்குவனார் முத்தமிழாய் இதயமு
ளார் மாந்தரகம் ஒளிர்வார் நின்றே!
9.
முத்தமிழ அறிஞரென்ற முதல்வரென்
னும் கலைஞருக்கே ஆசான் ஆகி
முத்தமிழிற் பற்றுறவும் முத்தமிழைக்
காப்பதற்கும் வைத்த பெம்மான்
கத்துகடல் அளவதுவே காலத்தில்
குன்றிடினும் கருத்தின் ஆழி
கடுகளவும் குறையாது கனித்தமிழைக்
காத்திட்ட வேங்கை ஒப்பான்
எத்தர்தம் மூக்குடைத்தே இமயமென
நிமிர்ந்துநின்றே எதிர்ப்போர் தம்மை
எடுத்தகால் பிடரிபட்டே எழுந்தோட
வைத்ததமிழ் மறத்தின் மார்பன்
முத்திரையைப் பதித்துநின்று முத்தமி
ழை முனைப்போடு காக்க வந்த
முனைவரென்னும் இலக்குவனார்
முக்காலும் பாரதனில் வாழ்வார்! வாழ்வார்!
10.
தந்தைபெரி யார்தாமும் ‘தமிழர்த ளபதி’
யென்ற விருதும் ஈந்தே
தன்னுடைய மகிழ்வுந்தில் தானேற்றித்
தமிழ்நிலத்தில் வலமே வந்தார்
சிந்தனையில் செந்தமிழைக் கொலு
வேற்றி மாற்றமின்றி வைத்து நாளும்
செங்கதிர்போல் உலகிடையே ஒளி
யுமிழச் செய்திட்ட தலைச்சான் பிள்ளை
எந்தநிலை வந்தாலும் ஈடில்லாத்
தமிழிருந்தால் போதும் என்ற
இன்முகத்த பேராசான் இழந்துபணி
வாடுகின்ற போதும் நெஞ்சம்
செந்தமிழே செல்வமென நெஞ்சகத்தே
உயிராகக் கொண்ட வேங்கை
இலக்குவனார் புகழென்றும் நீக்கமற
கதிரொளிபோல் ஒளிரும் நன்றே !
புலவர் பழ.தமிழாளன்,
இயக்குநர்—பைந்தமிழியக்கம்,
திருச்சிராப்பள்ளி.
Leave a Reply