பகுத்தறிவுத்  தன்மானப்   பெரியார்  

                  பகலவனே !

1.

மனுநூலை  நம்பவைத்து  மக்களையே

            மடமைதனில்  ஆக்கி  வைத்த

    மாண்பில்லா ஆரியத்தின் மடமைமுகத்

         தோலுரித்த மாண்பின்  மிக்கோன்

பனுவலெனும்  வேதத்தின் முடக்காற்றை

          மணக்காதே  வைத்த  பெம்மான்

     பிறப்பதனில் சாதிகண்டு  பரமனுச்சி

                   அமர்ந்திருந்த  ஆரி  யத்தை

நுனிநாவாம்  பகுத்தறிவின்  அம்பாலும்

                    கோலாலும்  வென்ற  வீரன்

      நற்றமிழத்  தன்மானம்  பகுத்தறிவால்

             ஆரியத்தை விரட்டி  வைத்தோன்

தனிச்சிறப்பார் பெரியாரே தமிழினத்தின்

                       மூச்சுக்காற்  றாக  மாறித்

   தமிழ்நாடு  முழுமைக்கும்  வீசிஉயிர்

                  அளித்திட்ட   அரிமா  தேர்க !

2.

தொண்ணூற்று  நான்காண்டு  தரைய

             தனில்  உயிரோடு வாழு  மட்டும்

     சுடர்முகத்தின்  அரிமாபோல்  துடிப்பு

           நிறை  இளைஞன்போல்  தொண்டு செய்தோன்

பண்ணிசைக்கு  மயங்குகிற  மாஞாலத்

            துயிரெல்லாம்  மயங்கல்  போல

     பைந்தமிழ  மக்களையே  பகுத்தறிவு

        உரைவீச்சால்  கவர்ந்த சான்றோன்

அண்ணாவை அவர்பின்னே அணியணி

        யாய்த்  தம்பிகளை ஈர்த்த பெம்மான்

     அறிவாய்தம்  எடுத்தேதீ  ஆரியத்தை

             அண்டாதே  விரட்டி  வைத்தோன்

பெண்களது  மாநாட்டில்  பெரியாரென்

                   பட்டமது  சூட்டப்  பட்டோன்

     பெண்களெல்லாம்  விடுதலையைப்

          பெறுவதற்கு  நாடோறும்  உழைத்த  வேங்கை !

3.

கலைஞரையும்  தன்னருகே  கவர்ந்துவைத்துத்

          தொண்டுக்குத்  துணையாய்க் கொண்டோன்

              காரிருளாம் மடமைதனைக் மதப்புரட்டைக் 

                 கதிரொளிபோல்  அழித்த  தீரன்

இலைபெரியார்  என்றாலும்  எண்ண

                 முறை எழுத்தாக்க  நூல்க   ளெல்லாம்    

இடிவிழுந்த  மரம்போல  ஆரியத்தை

            இரிந்தழிய  வைத்தல்  காண்க

தலைகவிழ்ந்த ஆரியத்தைத்  தமிழ்நாட்டில்

            தழைக்காதே  வைத்த  வீரன்

    சாதிமதத்  தீண்டாமைச்  சுவரிடித்து

       வரலாற்றில்  ஒளிர்வோன்  பாதை

தலைமையுற்றுத் தமிழினமே  திகழ்வதற்குப்

              பெரியாரின்  தடத்தைப்   பற்றித்    

தவறாது  நடப்பதுவே  தந்தைபெரி

                      யாருக்கு  நாம்செய்  நன்றி !

                 புலவர் பழ.தமிழாளன்,

          இயக்குநர்—பைந்தமிழியக்கம்,

                    திருச்சிராப்பள்ளி.