புலத்தில் வாழும் இலட்சியவாதிகளும், தன்மானத் தமிழர்களும் இணைவதை யாராலும் தடுக்க முடியாது

— கலாநிதி இராம் சிவலிங்கம்

 SivalingamDr.Ram-TGTE01

  விலங்குகள் அகற்றப்பட்டு விடுதலையான எம் ஈழத் தாயின் மடியிலே; உங்களோடு சேர்ந்து நானும் அயர்ந்து உறங்க வேண்டும் என்ற ஆவலில்தானே எமது அரசியல் போரை முன்னெடுத்துச் செல்லவல்ல தகைமையும், தகுதியும் கொண்ட தன்மானத் தமிழரை இணைந்து  செயற்பட வருமாறு பல முறை அறைகூவினேன். நீதி வேண்டும் உலகம் எமக்காகப் போராடும்போது,  எமது பங்கை நாம் செய்யத் தவறினால், எமது குடிவழி எம்மை மதிக்குமா அல்லது மன்னிக்குமா? என வருந்தியவேளை சிங்கள அரசின் அறிக்கை வெளியானது.

  பதினாறு அமைப்புகளையும்,  அவற்றைச் சார்ந்த நானூற்று இருபத்து   நான்கு உறுப்பினர்களையும் பயங்கரவாதிகள் எனச் சித்திரப்படுத்தும்  சிங்கள அரசின் பட்டியலில்;  தேவை காரணமாகச்  சிலர் சேர்க்கப்பட்டதும், அதிலும் மேலான காரணத்திற்காகப் பலர் நீக்கப்பட்டதும் வியப்பானதல்ல! ஆனால், இந்த அறிக்கையும் பட்டியலும், சிங்கள அரசின் பதற்ற நிலையைத்   தெளிவாகக் காட்டியதுதான் வியப்பானது!

  எமக்குத்  தேவையான அடையாளத்தை முள்ளிவாய்க்கால் தந்து ஐந்து ஆண்டுகளாகியும் தேசமீட்புக்கான எதையுமே செய்யாது , மற்றவர்களையும் செய்யவிடாது, புலம்பெயர் மக்களின் உணர்வுகளைக் கட்டிப்போட்ட இந்த அணிகளும், அதன் தலமைகளும் பயங்கரமான கில்லாடிகளேயன்றி அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்ற உண்மையைக்கூட இந்தச் சிங்கள அரசால் புரிய முடியவில்லையா? ஆண்டுக்கு ஒரு மாநாடும், வருடத்திற்கு இரண்டு இரவுவிருந்தும் நடாத்துவதே தேசமீட்புக்கான அரசியல் போராட்டம் என நம்பிச் செயற்படும் அந்த அப்பாவிகள் பயங்கரவாதிகளா?

  சிங்கள அரசின் பட்டியலில் குறிப்பிட்ட அமைப்புகளும், சங்கங்களும் அதில் அங்கம் வகிக்கும் தமிழர்களும் பயங்கரவாதிகளென்றால்; அவர்களுக்குத் தஞ்சம் கொடுத்த நாடுகளையும், அந்த அமைப்புகளை சட்டபூர்வமாக இயங்க  இசைவு வழங்கிய அரசுகளையும் மனிதமே இல்லா சிங்கள அரசு அவமதிப்பதாக உங்களுக்குத் தோன்றவில்லையா?

 ஐ.நா அவையின் மனித உரிமை மீறலுக்கான  பன்னாட்டு விசாரணை தீர்மானமாகியது கண்டு கலங்கித், தடுமாறி நிற்கும் சிங்கள அரசு, போர்க்குற்ற விசாரணைக்கான தீர்மானம் ஐ.நா வில் நிறைவேறும்போது என்ன செய்யப்போகிறார்கள்? ஓடி ஒழிவார்களா அல்லது ஓலமிட்டு ஒப்பாரி வைப்பார்களா?

 வெளிநாட்டுத் தமிழர்களை அச்சுறுத்தி விரட்டிவிட்டு, வாழ்வாதாரமற்று வாழத் துடிக்கும் எம்  ஈழம்வாழ்  உறவுகளை தனிமைப்படுத்தி, அடக்குமுறை மூலம், பயங்கரவாதம் என்ற போர்வையிலே அவர்களை  அழிக்க சிங்கள அரசு வகுத்த திட்டத்தில் ஒன்றே இந்த அறிக்கையும், பட்டியலுமாகும்.  இதில்,  எதுவுமே பலிக்காது  என்பதை இந்தக் கொடியவர்கள் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை. ‘கலியுகக் காலம் என்றாலும் அதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா.

  தாம் தமிழர் என்பதை அடியோடு மறந்து, ஆங்கிலத்தில் பேசி, சிங்களத்தில் சிரித்து, சிங்களவரோடு சிங்களவராய் வாழ்ந்த  கொழும்புத் தமிழர்களுக்கு  சிங்கள அரசுகள் கற்பித்த பாடத்தை யாரால் மறக்க முடியும்? தமிழராய்ப் பிறந்த ஒரே காரணத்திற்காக, இனக்கலவரம் என்ற போர்வையிலே,  சிங்களக் காடையரின் உதவியுடன், காலத்துக்குக் காலம், சிங்கள அரசும், அதன் படைகளும்  நடாத்திய இனஅழிப்பின் எதிரொலியே இன்று நாம் காணும் ஈழம்வாழ் உறவுகளின் இணையில்லா ஒற்றுமை.

  வெளிநாட்டில் செயற்படும் புலம்பெயர் தமிழர்களையும், அவர்களின் அமைப்புக்களையும் எதிரியாகப் பார்க்கும் இந்த அர்சும்  எமக்குள் ஓர் புரிந்துணர்வை/ஒற்றுமையை கொண்டு வருவது உறுதி!  புலத்தில் வாழும் இலட்சியவாதிகளும், தன்மானத் தமிழர்களும் இணைந்து செயற்படுவதை யாரால் தடுக்க முடியும்? நன்றி.

TGTEM-muthirai-logo01கலாநிதி இராம் சிவலிங்கம்

sivalingham@sympatico.ca