முத்திரை-உலகப்பொதப்பொறுத்தலவை - muthirai_amnestyinternational_ulakapothuporuthalavai

மனித உரிமை வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டது இலங்கை

உலகப் பொதுப்பொறுத்தலவை(உலகப்பொது மன்னிப்புக் கழகம்) குற்றச் சாட்டு!

  இலங்கையில் புதிய அரசு கடந்த ஆண்டு பதவியேற்றபொழுது கொடுத்திருந்த மனித உரிமைகள் தொடர்பான வாக்குறுதிகள் பலவற்றைக் காப்பாற்றத் தவறியிருப்பதாக உலகப் பொதுப்பொறுத்தலவை  குற்றம் சாட்டியுள்ளது.

  உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்த இந்த ஆண்டுக்கான அறிக்கையிலேயே இவ்வாறு இலங்கை மீது கடுமையான கருத்துகளை உலகப் பொதுப்பொறுத்தலவை முன்வைத்துள்ளது.

  “இலங்கையில் கடந்த ஆண்டு சனவரியில் பொறுப்பேற்ற புதிய அரசு அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னேற்றுவதாக உறுதியளித்திருந்தது.

  ஆனால், வல்லாளுமை(எதேச்சதிகார)க் கைதுகள், சிறை வைத்தல்கள், சித்திரவதைகள், திட்டமிட்டுக் காணாமல் போகச் செய்யும் நடவடிக்கைகள், தடுப்புக் காவல் உயிரிழப்புகள், குற்றவாளிகள் நீதியின் பிடியிலிருந்து தப்பியிருக்கும் நிலை தொடருதல் போன்ற மனித உரிமைகளுக்கு எதிரான பல்வேறு நிலைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே தொடர்கின்றன.

  விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற ஐயத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் வன்கொடுமைத் (பயங்கரவாதத்) தடைச் சட்டத்தின் கீழ்ச் சிறைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சித்திரவதை முதலான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாகின்ற அந்தச் சட்டத்தை நீக்குவதாகவும் கடந்த செத்தம்பரில் அரசு உறுதியளித்திருந்தது.

  217 கைதிகள் தொடர்ந்தும் அந்தச் சட்டத்தின் கீழ்ச் சிறை வைக்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு என்கிற இன்னொரு வகையான வல்லாளுமை(எதேச்சதிகார)த் தடுப்புக் காவலுக்கு வேறு 45 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

  தடுப்புக் காவலில் இருப்போர் மீது சித்திரவதை, பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவது தொடர்ந்து நடக்கின்றன.

  இவ்வாறான மனித உரிமை மீறல்கள் நடக்கக்கூடாது என்று பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும் என்று  இலங்கை  அரசு ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவைக்கு உறுதியளித்த சிறிது காலத்தில், 17 அகவைச் சிறுவனும் இன்னொருவரும் தடுப்புக் காவலில் வைத்துப் பொய்யான குற்ற ஒப்புதலைப் பெறுவதற்காகத் தாக்கப்பட்டதாகவும், உடைகளைக் களைந்து ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர்களின் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

  காவல்துறையின் தடுப்புக் காவலில் ஐயத்துக்கு இடமான உயிரிழப்புகள் தொடர்வதுடன், கடந்த காலக் குற்ற நிகழ்வுகளின் பின்னணியில் இருந்தவர்கள் நீதியின் பிடியில் சிக்காமல் இருப்பதும் தொடர்கிறது.

  காணாமல் போனவர்கள் தொடர்பான குடியரசர் (அதிபர்) ஆணைக்குழுவுக்கு 18,586 முறையீடுகள் (புகார்கள்) கிடைத்துள்ளன. ஆனால், காணாமல் போனவர்களுக்கு என்ன ஆனது என்பதைக் கண்டறிவதிலும் அவர்களைக் காணாமல் போகச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதிலும் முன்னேற்றம் காணப்படவில்லை.

  போரில் பலியானவர்களின் நினைவு நாளாக மே 19ஆம் நாளை இலங்கைக் குடியரசர் மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தாலும், வடக்கில் பல இடங்களில் தமிழர்கள் பொதுவான நினைவு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இசைவு(அனுமதி) அளிக்கப்பட்டிருந்தாலும், வடக்கிலும் கிழக்கிலும் கடுமையான அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக, முல்லைத்தீவில் இப்படியான நினைவு நிகழ்ச்சிகள் பாதுகாப்புப் படையினரால் தடுக்கப்பட்டன.

 கடந்த காலங்களில் இசுலாமியர்கள், கிறித்தவர்கள் முதலான சமயச் சிறுபான்மைக் குமுகங்களின்(சமூகங்களின்) மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை.

  2010 ஆம் ஆண்டில் கிளிநொச்சியில் நடந்த கூட்டுப் பாலியல் வல்லுறவு தொடர்பாக இலங்கைப் படை வீரர்கள் நால்வர் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டது, குற்றவாளிகள் நீதி நடைமுறையிலிருந்து தப்பியிருக்கும் போக்குக்கு எதிரான சிறிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.”

இவ்வாறு உலகப் பொதுப்பொறுத்தலவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினப்பலகை

தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan