புத்தாண்டு வாழ்த்தும் வேண்டுகோள்களும்
திருவள்ளுவர் ஆண்டு 2045, நடைமுறை ஆண்டு 2014 ஆகியன பிறக்க உள்ளன.
அல்லன நீங்கி நல்லன நடைபெறவும் எண்ணியன எய்தவும் வரும்ஆண்டு துணை நிற்க வாழ்த்துகள்.
தமிழ் ஈழம் தனியரசாகித் திறமையும் வலிமையும் மிக்க ஈழத்தமிழர்கள், துயரம் மறந்து மகிழ்ச்சிக்கடலில் திளைக்க வாழ்த்துகள்!
நாள் குறிக்கப் பெறும் அனைத்து இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்க வேண்டுகின்றேன். அரசாணைகள், தமிழ் இலக்கிய இதழ்கள் தவிர, வேறு இடங்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப் பெறுவதில்லை. தமிழ்த்துறைகளில் இருப்பவர்களின் அழைப்பிதழ்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பார்க்க இயலாது. சமய அமைப்பினர் திருவள்ளுவர் ஆண்டு அவர்களின் சமய ஆண்டிற்கு எதிரானதாகக் கருதிப் பின்பற்றுவதில்லை. இனியேனும் திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பை இயன்ற முறையில் கொண்டாடவும் எல்லா நேர்வுகளிலும் பயன்படுத்தவும் வேண்டுகின்றேன்.
ஈழத்தமிழர்கள் ஆங்கிலத் திங்களுக்குப் பெயராகத் தமிழ்த்திங்கள் பெயரைக் குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆங்கிலப் பெயரைப் புறக்கணிக்கும் அவர்களின் உள்ளம் பாராட்டிற்குரியது. ஆனால், இந் நடைமுறை வரலாற்றுப் பிழைகளை ஏற்படுத்தும். சான்றாகச் சனவரி என்றால் தை எனக் குறிப்பதால் சனவரி 14 அன்று பொங்கல் திருநாள் வருவதைத் தை 14 எனக் குறிக்க வேண்டி வருகிறது. அப்படியானால் தை முதல்நாள்தான் பொங்கல் திருநாள் என்னும் வரலாற்று உண்மை தவறாகிறது. தை, மாசி முதலான அனைத்துப் பெயர்களும் தமிழே. அதற்கு மாற்றாக இவை தமிழல்ல எனச் சிறுபான்மையரால் பயன்படுத்தப்படும் சுறவம், கும்பம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, மீனம் முதலான ஓரைகளின் பெயர்களை ஆங்கிலத்திங்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாமா அல்லது எவ்வாறு குறிப்பிடலாம் எனத் தமிழறிஞர்கள் ஒன்றுகூடிப் பரிந்துரைக்க வேண்டும். அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
தமிழ்த்திங்கள்களைக் குறிப்பிடும் பொழுது எத்திங்கள் 32 நாள் கொண்டது என்பதில் இருவேறுபட்ட கருத்துகள் உள்ளன. இது குறித்தும் கணியர்களுடன் இணைந்து தமிழறிஞர்கள் பரிந்துரை அளிக்க வேண்டும்.
கலைச்சொற்களில்கூடக் கிரந்தத்தைப் புறக்கணிக்கும் இலங்கை, ஈழத்தமிழர்கள் சிரேட்ட முதலான அயற் சொற்களைப் பயன்படுத்துவதும் ஊர்ப்பெயர்களை ஆங்கில ஒலிப்பிற்கேற்பத் தமிழில் குறிப்பதும் நடைமுறையாக உள்ளது. உலகில் எங்கிருந்தாலும் தமிழ் மக்கள் அயலெழுத்துகளையும் அயற்சொற்களையும் தவிர்த்து எழுதுவதற்கும் பெயர்களைத் தமிழ் ஒலிப்பிற்கேற்ப உச்சரிக்கவும் எழுதவும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
எந்தக் கட்சியில் அல்லது அமைப்பில் இருந்தாலும் தமிழ்நலன் தொடர்பானவற்றில் ஒன்றுபட்டுச் செயல்பட உறுதி கொள்ள வேண்டும்.
கட்சித்தலைமைக்குக் கொத்தடிமைகளாக இருப்பதே அவலங்கள் தடுக்கப்படாமல் இருப்பதற்கும் தலைவர்கள் தொண்டர்கள் உணர்வுகளுக்கு எதிராகத் தங்களைச் சார்ந்தோர் நலனில் கருத்து செலுத்தி, அன்னைத் தமிழைப் புறக்கணிப்பதற்கும் வாய்ப்பாக அமைகின்றது. தமிழைப் புறக்கணிப்பின் தலைமையையும் புறக்கணிப்பர் என்ற அச்சம் கட்சித் தலைவர்களிடம் இருந்தால்தான் தங்கள் விருப்பு வெறுப்பிற்கேற்ப கட்சிகளை வழி நடத்தாமல், மக்கள் நலனுக்கேற்ப நடத்த முன்வருவர். தங்கள் செல்வாக்கைக் காட்டி ஆட்சியில் அமரவும் அல்லது ஆட்சியில் தொடரவும் பல மணி நேரப் பேரணியைக் கூட்டும் தலைவர்கள் தமிழர் நலனுக்காகச் சில மணிக்கூறு ஒன்று கூடலுக்கும் வழி வகுக்காத தமிழ்நலப் புறக்கணிப்பு நிலையும் தொடருகின்றது. பதவியில் இருக்கும் பொழுது ஒன்றும் இல்லாத பொழுது மற்றொன்றுமாகப் பேசி மக்களை ஏய்க்கும் போக்கும் தொடருகிறது. எனவே, தமிழ்நலனுக்கு எதிராகச் செயல்பட்டாலோ, தமிழ்நலனுக்கு ஆதரவாகச் செயல்படாவிட்டாலோ, துணிந்து இடித்துரைக்க முன்வரவேண்டும்.
தமிழ் ஈழத்தில் மேற்கொண்ட இனப்படுகொலையை, விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்றும் உள்நாட்டுப்போர் என்றும் போர்க்குற்றம் என்றும் திரித்து எழுதியும்பேசியும் வருகின்றனர். இத்தகைய செய்திகளைப் பகிரும் பொழுது இனப்படுகொலை என்றே குறிப்பிட்டுப் பகிர வேண்டும். தவறாகக் குறிப்பிடும் தலைவர்களையும் ஊடகங்களையும் புறக்கணிப்போம் எனக் கூறி அவர்களை உண்மையைக் குறிப்பிடச் செய்ய வேண்டும். ‘போருக்குப் பிந்தைய அமைதி, நல்லிணக்கம்’ என்னும் தொடரே இழைக்கப்பட்ட இனப்படுகொலைக் கொடுமைகளை மறைப்பது என்பதை உணர்ந்து இதுபோன்ற தொடர்களைக் கையாளவும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளை மட்டுமல்லாமல் அதற்கு முன்னரும் பின்னரும் நடைபெற்ற, நடைபெறும் இனப்படு கொலைகளையும் உலகிற்கு உணர்த்த வேண்டும். ‘ஒவ்வொருவரும் மற்றொருவருக்கு’ என்பதை இலக்காகவும் முழக்கமாகவும் கொண்டு இனப்படுகொலைகாரர்கள், கூட்டாளிகள் தண்டிக்கப்படவும் தமிழீழத் தனியரசு மீட்சி பெற்று அமைந்து நிலைக்கவும் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
படைப்பாளர்கள் இவற்றைப் பற்றிய படைப்புகளைத் தமிழ்ஈழ இலக்கை அடையும் வரை உருவாக்கிப் பரப்ப வேண்டும்.
அயல்மொழி அறிந்தவர்களும் அயல்நாடுகளில் வசிப்பவர்களும் உண்மை வரலாற்றையும் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் அயல் மொழியினர் உணரும் வகையில், பிற மொழிகளில் இவற்றைப் படைக்கவும் மொழி பெயர்க்கவும் தொண்டாற்ற வேண்டும். அச்சிட்டுப் பரப்புதல், இணையத்தளங்கள் வழி பரப்புதல் என்ற முறையில் பாரெங்கும் ‘தமிழ் ஈழம் தமிழர்களின் தாயகம்’ என்பதையும் அதை ஏற்பதே அறம் என்பதையும் பரப்பி ஏற்கச் செய்ய வேண்டும். இலங்கையில் அயலவர்கள் கால்ஊன்றும் முன்னர் இருந்த தமிழ்ப்பகுதிகளை வரையறுக்க 1.1.1600 அன்று தமிழ்ஆட்சிப் பரப்பாக இருந்த பகுதியை வரைபடமாக்கி அதனையே தமிழீழம் எனக் குறிக்க வேண்டும். தமிழீழப் பரப்பு சிங்களப் படையாலும் சிங்கள அரசாலும் திருடப்பட்டுப் பறிக்கப்பட்டு வருவதை உணர்த்தி முன்பு தமிழ் ஆட்சி செய்த பரப்புகளில் இருந்து சிங்களர்களை வெளியேற்ற வகை செய்ய வேண்டும்.
வாக்குச்சீட்டு என்னும் ஆயுதம் கொண்டு தமிழ்ப்பகைவர்களையும் கொலைகாரர்களையும் கூட்டாளிகளையும் அரசியல் தளத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும்.
தமிழ், தமிழ் எனப் பேசுபவர்கள் ஆங்கில வழிப்பள்ளிகள் நடத்துவதையும் ஊடகங்கள் மூலம் தமிழ்க்கொலை புரிவதையும் கைவிட வேண்டும்.
தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் ஆகியவற்றின் சிறப்புகளை ஓரளவேனும் அறிந்து கொண்டு வளரும் தலைமுறையினரையும் அறியச் செய்ய வேண்டும்.
துறைதோறும் தமிழில் நூல்கள் வரும் வகையில் படைக்கவும் படைப்பாளர்களுக்கு உதவவும் முன்வரவேண்டும்!
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!
பேசுவோம் தமிழில்! பயிலுவோம் தமிழில்!
வணங்குவோம் தமிழில்! வாழ்த்துவோம் தமிழில்!
தமிழர் வாழுமிடங்களில் தமிழுக்குத் தலைமை! தமிழர்க்கு முதன்மை!
இவற்றையே நம் இலக்காகக் கொண்டு வாழ்தல் வேண்டும்!
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்(திருக்குறள் 1021).
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்(திருக்குறள் 1028).
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் மேற்குறித்த திருவாக்குகளை நினைவு கொள்வோம்!
நிலைபுகழ் பெறுவோம்!
இதழ் 07
திசம்பர் 29, கி.பி.2013
Leave a Reply