வவுனியாவில் தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்!

தமிழர் தேசத்தின் இதயமாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்திச் சிறப்பிக்கின்ற – மதிப்பளிக்கின்ற ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2017’ எழுச்சி நினைவேந்தல், 

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லச் சூழலில், வவுனியா மாவட்ட மக்கள் குழுவின் ஒழுங்கமைப்பில் திங்கள்கிழமை மாலை 6.00 மணிக்குக் கடைப்பிடிக்கப்படவுள்ளது. 

குறித்த நினைவேந்தல் தொடர்பாக வவுனியா மாவட்ட  மக்கள் குழு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழர் தேசம் எங்கும் மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்காகத் தாயக மக்கள் தாமாகவே எழுச்சி கொண்டு நிற்கின்றனர். இந்தவேளையிலே, ஆட்சி மாற்றத்துக்குப்பின்னர் ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கைத்தனமான தற்போதைய அமைதிச் சூழலில் தேர்தல் அரசியலுக்காக  ஆதாய இழப்பு பார்த்து, மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகளில் முனைப்புக் காட்டி, மாவீரர் நாளை உரிமை கொண்டாடும் செயல்களிலும், மாவீரரின் பெயரால் பணம் திரட்டும் செயல்களிலும், மக்களின் நயன்மையான-நியாயமான உணர்வுகளை களவாடும் கருமங்களிலும் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளதையும் கவனித்துவருகின்றோம்.

உயிர் அச்சுறுத்தல் நிறைந்த நெருக்கடியான கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர், பாசிச ஆட்சியாளர் மகிந்த இராசபக்ச ஆட்சிக்காலத்தில் இந்தத் தேசியக்கடமையை பொறுப்பேற்றுத் தலைமையேற்று நடத்த வேண்டியவர்கள், மக்களின் உணர்வுகளை ஒரு மையப்புள்ளியில் ஒருங்கிணைத்திருக்க வேண்டியவர்கள், மாவீரர்களைப் போற்றும் தேசியப்  பெரும் பணியைச் செய்யாது அதிலிருந்து நழுவி ஓடி ஒளிந்துவிட்டுத், தற்போது தேசியத்தலைவர் போலத் தம்மை கற்பனை செய்து – தம்மை உருவகப்படுத்திப், பொதுச்சுடர் ஏற்றுவதற்காக வாய்ப்புகளை வலிந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் மனமயக்க நோய் பீடித்துள்ள இவ்வாறான அரசியல்வாதிகளின்  தீயநடத்தைகளை வவுனியா மாவட்ட மக்கள் குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக் கயமைகள் தொடர்பில் விழிப்புநிலையுடன் இருக்குமாறும் தாயக மக்களை வவுனியா மாவட்ட  மக்கள் குழு வலியுறுத்துகின்றது.

“மாவீரர் நாளைக் கடைப்பிடித்தால் மண்டையில் சுடப்படுவீர்கள்“ என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய இராசபக்ச அச்சுறுத்திய கடந்த ஆறு வருடங்களும், உரிமை கோராமல் மொட்டைத் துண்டு வெளியீடுகளையும், சுவரொட்டிகளையும் வெளியிட்டுவிட்டு மறைந்து கிடக்கும் அமைப்புகள் போல அல்லாமல், வவுனியா மக்கள் குழு திறந்தவெளியில் பகிரங்கமாக உரிமை கோரி மாவீரர் நாளை உணர்வுபூர்வமாகக் கடைப்பிடித்து மாவீரர்களை நெஞ்சத்தில் உயர ஏந்திப்பிடித்து பற்றுணர்வாகவும், நன்றியுணர்வாகவும் நினைந்துருகி அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்தியே வந்திருக்கிறது.

இந்த வருடத் தொடக்கத்தில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தமிழ் மக்களின் வழிபாட்டுக்கென்று பொதுநினைவுத்தூணை அமைக்கும் பணியைத் தொடங்கி, இதன் காரணமாக நீதிமன்ற வழக்கையும் வவுனியா மக்கள் குழு எதிர்கொண்டுள்ளது.

நவம்பர் 27 அன்று வழமை போன்றே இம்முறையும், வவுனியா மாவட்ட மக்கள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லச் சூழலில், ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்பட்டு, மாவீரத்தெய்வங்களுக்காகத்  தனியாக அமைக்கப்பட்டுள்ள திருக்கோவிலில் (நினைவேந்தல் பாடல் இசைக்க) மாலை 6.05 க்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறும்.

மாவீரத்தடம் பதிந்த மண்ணை நீறாக நெற்றியில் பூசும் புதிய தமிழ்மரபை உருவாக்குவோம்!

தமிழர் தேசத்தின்  நெஞ்கார்ந்தஆதனாக(ஆத்மாவாக) உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்திச் சிறப்பிக்கும் – மதிப்பளிக்கும் உயர்குலப்பண்பாட்டின் செல்நெறிநின்று, மாவீரர்களின் கால்கள் இறுதியாக நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணை நீறாக நெற்றியில் பூசி பற்றுணர்வாகவும் நன்றியுணர்வாகவும் மாவீரத்தெய்வங்களை நினைந்துருகி வழிபடும் புதிய தமிழ்மரபை உருவாக்குவதற்காக ‘குப்பிகளில் அடைக்கப்பட்ட மண்’ தத்தமது இல்லங்கள் தோறும் எடுத்துச்செல்வதற்காக வழங்கப்படும். 

‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் – நவம்பர் 27’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் குறித்த நினைவேந்தல் எழுச்சியில், மாவீரர் போராளிக் குடும்பங்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் இனமான உணர்வாளர்கள், குடிமைக் குமுக சமுக மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் அனைவரையும் சமவாய்ப்புடன் பங்கேற்றுத், ‘தமிழ்த் தேசிய இனத்தின் வீர ஆதன்(ஆத்மாக்)களுக்கு’ உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துமாறும், தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நினைவேந்தல் இடம்பெறும் கிட்டிய தொலைவிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களுக்கு முடிந்தவரை நேரில் வருகை தருமாறும் அழைக்கின்றோம்.

கூடவே ‘எனது மொழி தமிழ், எனது பிறப்பு தமிழன் – தமிழச்சி’ என்று உணருக்கின்ற ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும், நவம்பர் 27 அன்று மாலை 6.05க்கு தத்தமது இல்லங்களின் வாசல்கள் தோறும் நெய் விளக்கேற்றி மண்ணுறங்கும் ‘மாவீரத்தை’ தட்டி எழுப்பிச் சிறப்பிக்கும் தேசியப் பெரும் பணியை – தேசியக்கடமையை, ‘தரம் தாழ்ந்துபோகாது சிரம் உயர்த்தி’ நிறைவேற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…

மக்கள் நலப்பணியில்,

வவுனியா மாவட்ட மக்கள் குழுவினர்

தொடர்புகளுக்கு:

தலைவர்: கோ.இராசுகுமார் 0094 77 854 7440

செயலாளர்: தி.நவராசு

ஊடகப்பேச்சாளர்: அ.ஈழம் சேகுவேரா 0094 77 6699 093 (Viber)