சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 341-350
341. Access, direct | நேரடி அணுகல் மின்னஞ்சல் முதலியவற்றை நேரடியாக அணுகும் வாய்ப்பு. |
342. Access, open court to Which the public may have | மக்கள் அணுகுவதற்கேற்ற வெளிப்படையான நீதிமன்றச் செயற்பாடு. கொள்கையளவில், இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்நாட்டில் உள்ள நீதிமன்றங்களை அணுகலாம். ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதிமன்றத்தின் மூலம் நீதி பெற உரிமை உண்டு என்பதை இஃது உணர்த்துகிறது. எந்தவொரு குடிமகனும் தங்கள் உரிமைகள் மீறப்படுவதாக நம்பினால், அவர்கள் நீதிக்காக நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்ற அணுகலில் சம வாய்ப்பைக் குறிப்பிடுகிறது.. Open court என்றால் திறந்த நீதிமன்றம் எனக் கூறக்கூடாது. பல்கலைக்கழகம் முதலியவற்றைக் குறிப்பிடும் பிற இடங்களிலும் நாம் தவறாகத் திறந்த நிலைப்பல்கலைக்கழகம் என்பதுபோல் குறிப்பிடுகிறோம். எந்தக் கட்டுப்பாடும் இன்றி அனைவருக்கும் பொதுவானது என்பதால் பொதுநிலை எனல் வேண்டும். பொதுநிலை நீதிமன்றம் என்பது மன்ற நடவடிக்கைகள் பொதுமக்களுக்கும் ஊடகத்தினருக்கும் வெளிப்படையாக அணுகும் வகையில் இருக்க வேண்டும். நீதிமன்றம் வரும் ஒவ்வொருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளைக் காணும் வகையில் மன்றச் செயற்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். எனினும், கற்பழிப்பு வழக்குகள், பெண்கள், சிறாருக்கு ஊறு நேரும் வகையிலான உசாவல்கள்(விசாரணைகள்) மறைவறையில் (in camera) நடக்க வேண்டும். நீதிமன்றம் என்பதை நயன் மன்றம் என வழக்கத்தில் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும். |
343. Access, supervised | மேற்பார்வையுடன் அணுகு மேற்பார்வையுடன் அணுகு வாய்ப்பு குடும்பச் சட்ட வழக்குகளில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமுகமாக மூன்றாவது தரப்பின் முன்னிலையில் சிறுவரை அணுகுதல் அல்லது பரிமாறிக் கொள்ளுதல் |
344. Accessibility | அணுக்கம் அணுகுதற்கு எளிமை காட்சிக்கு எளிமை எளிவரல் எண்பதம் கிடைப்புத் தன்மை எந்தவகைக் கட்டுப்பாடோ தடையோ இன்றி எளிதில் சந்தித்துப்பேசுவதற்கான வாய்ப்பு உள்ளமை. எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும். (திருக்குறள் 548) என்கிறார் திருவள்ளுவர்.(தன்னிடம் முறையிட அணுகுவதற்கு எளியனாக இல்லாத ஆட்சித் தலைவர் தானே கெட்டழிவான் என்கிறார்) கிடைப்புத் தன்மை – ஒரு பொருள் கிடைத்தற்கு எளிமையாய் அமையும் தன்மையையும் நாம் குறிப்பிடலாம். காண்க: Access – அணுகல் |
345. Accessible | அணுகத்தக்க வாய்ப்பளிக்கத்தக்க அடைதற்கெளிய பிறரால் அணுகுவதற்கோ அடைவதற்கோ எளிதாக உள்ள தன்மை. காண்க: Accessibility – அணுக்கம் |
346. Accessible place | அணுகிடம் அணுகக்கூடிய இடம் ஓர் இடமோ கட்டடமோ மக்கள் அணுகுவதற்கு வாய்ப்பான எளிய நிலையில் இருத்தல். காண்க: Accessibility – அணுக்கம் |
347. accessio | சேர்த்து அணுகல் சேர்க்கப்பட்டது மூலச் சொத்தில் அடையாளத்தை இழக்காத வகையில், உழைப்பையும் பிற பொருள்களையும் சேர்க்கும் அணுகுமுறை. அணுகுதல் என்னும் பொருளுடைய இலத்தீன் சொல்லில் இருந்து உருவானது. |
348. accessio cedit principali | பெருக்கம் மூலத்தையே சாரும் உரோமன் சொத்துடைமைச் சட்டத்தில் இடம் பெறும் தொடர். |
349. Accession | இணக்கம் இசைவு சேர்வடைதல் மேலீட்டம், உடைமையின் மேல் ஈட்டிய பொருள்,சொத்துச் சேர்வடைவு, சொத்து வளர்ச்சி; வளமேற்றம்; இணக்கம், பதவியேற்றல், கூடுதல், கூட்டு. உடைமையின் மேல் ஈட்டும் பொருள் என்பதன் சுருக்கமே மேலீட்டம். ஏற்கெனவே உள்ள சொத்தில் சேர்க்கப்படுவது. ஒருவரின் சொத்தின் வடிவம் மாற்றப்பட்ட பின்னும் அதன் உடைமைக்கான உரிமை. எடுத்துக்காட்டாக, ‘ஆ’ வின் மரத்தை ‘அ’ நாற்காலியாக மாற்றினால் மரத்திற்கு உரிமையாளரான ‘ஆ’ , ‘அ’ செய்த நாற்காலியின் உரிமையைக் கோரலாம். ஒரு பதவி அல்லது பட்டத்தை வழிமுறையினர் போல் அடைதல். ஓர் ஒப்பந்தம் அல்லது சங்கத்தை ஏற்றல் அல்லது அதில் சேருதல். இயற்கையாகவோ உழைப்பினாலோ நிலவிவரும் சொத்தில் உருவாகும் சேர்மானம் என்பதே சொத்துச் சேர்வடைவு.(பி.63,சொ.மா.ச.) பிற பொருள்கள் இடத்திற்கேற்ப பயன்படுத்தப்பட வேண்டியவை. |
350. Accession of property | உடைமை அடைதல் உடைமை மாற்றப்பட்ட நேர்வில், அடைதல் உடைமை அணுகல் எனச் சொல்வதைவிட உடைமை அடைதல் என்பதுதான் இங்கே பொருத்தமாக இருக்கும். (சொத்து மாற்றுச் சட்டம் 1882) |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply