சட்டச் சொற்கள் விளக்கம் 431-440 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 421-430: இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 431-440
431. Account slip | கணக்குத் தாள் ஓய்வூதியக் கணக்குத் தாள், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாள், பொதுச் சேமிப்பு நிதிக் கணக்குத் தாள் எனப் பலவகைப்படும். குறிப்பிட்ட நிதிக்கணக்கில் செலுத்தப்படும் தொகை, வைப்பு, இருப்பு, வட்டி கடனாக எடுத்திருப்பின் கடன் திருப்பச் செலுத்தி விவரம், அக்கணக்கில் முன்பணம் பெற்றிருப்பின் அதன் விவரம் முதலியவற்றைப் பதிந்து அளிக்கும் சீட்டு. |
432. account stated | விவரிப்புக் கணக்கு ஒப்பந்தம் அல்லது நம்பக உறவுநிலையில் விவரித்துக் காட்டும் கணக்கு. ஒருவர் மற்றவருக்குக் கொடுக்க வேண்டியதாகக் காட்டும் கணக்கும் அத்தொகையைக் கொடுப்பதற்கான உறுதிமொழி, கணக்கின் நேரிய சரி தன்மை ஆகியவையும் தொடர்புடையவர்களால் வெளிப்படையாகவோ உட்கிடையாகவோ ஒப்புகை அளிக்கப்படுவதுமான பற்று வரவு விவரம். காட்டிய கணக்கு என்கின்றனர். எல்லாக் கணக்கும் மறு தரப்பாருக்குக் காட்டப்படுவதுதான். கொடுதொகை முதலியவற்றை விவரிப்பதால் விவரிப்புக் கணக்கு எனலாம். |
433. account suit | கணக்கெழு வழக்கு கணக்கு வழக்கு கணக்கு வழக்கு என்பது கொடுக்கல் வாங்கல், பணப்பரிமாற்றம் என நடைமுறையில் கருதுகிறோம். எனவே வேறுபடுத்துவதற்காகக் கணக்கெழு வழக்கு எனலாம். ஒப்பந்தத்தின் அடிப்படையில் அல்லது பத்திரம் போன்ற ஆவண அடிப்படையில் அல்லது நம்பக உறவுநிலை அடிப்படையில் கொடுக்கப்பட்ட பணத்தை அல்லது கணக்கைக் கொடுக்கவேண்டியவர் மீது கணக்கு பெறவேண்டியவர், அவ்வாறு அவர் தராதபொழுது தொடுக்கும் வழக்கு. |
434. account take into | கருத்தில் கொள்ளல் கவனத்தில் கொள்ளல் ஒரு முடிவு எடுக்கும் முன்னர், மற்ற காரணிகள் இருப்பின் அதனைக் கவனத்தில் கொள்ளுதல். புதிய தொழில் நுட்பத்தைக் கவனத்தில் கொள்ளுதல் போல் ஏதேனும் ஒன்றைக் கருத்தில் கொண்டு முடிவெடுத்தல் அல்லது செயற்படுதல். |
435. Account test | கணக்குத் தேர்வு அரசுப் பணியாளர்களும் அலுவலர்களும் பதவியை நிலைப்படுத்திக் கொள்ளவும் வரன்முறைக்காகவும் பதவி உயர்விற்காகவும் வெற்றி காணவேண்டிய துறைத்தேர்வு. சார்நிலை அலுவலர்க்கு, செயல்நிலை அலுவலர்க்கு எனத் தனித்தனியே கணக்குத் தேர்வுகள் உள்ளன. |
436. account votes on | செலவளிப்பு வாக்கெடுப்பு சட்ட மன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ குறுகிய காலச் செலவுத் தேவைகளுக்காக நிதி ஒதுக்கீடு . பணத்தைச் செலவிடுவதற்காக, முழுமையான நிதிநிலைஅறிக்கையை எதிர்நோக்கி இடைக்கால இசைவு பெறுவதற்கான வாக்கெடுப்பு. செலவழிப்பு என்பது செலவிடுவதைக் குறிக்கிறது. செலவளி என்பது செலவிற்கான தொகையை அளிப்பதைக் குறிப்பிடும் புதுச்சொல்லாகப் படைத்துள்ளேன்.. |
437. accountability | கணக்குப் பொறுப்பு கணக்குக் காட்டும் பொறுப்பு பொறுப்புடைமை பொறுப்புக் கூற வேண்டிய நிகழ்மை(fact) அல்லது நிலைமை(condition). பொறுப்புக் கூறல் என்பது தனியரோ நிறுவனமோ அவர்களின் பொறுப்பு தொடர்பான ஏதோ ஒன்றுடன் தொடர்புடைய அவர்களின் செயல்திறன் அல்லது ஒழுகலாறு அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவதற்கான உறுதிச் சொல்லாகும். இச்சொல் பொறுப்புடன் தொடர்புடையதாக இருந்தாலும், கவனக்குறைவு குறித்த தொலைநோக்காகும். |
438. accountable | பொறுப்புள்ள கணக்கு காட்டும் பொறுப்புள்ள. காண்க: accountability |
439. accountable person | பொறுப்புள்ள ஆள் ஒருவர், தாம் செய்யும் செயல்களுக்கு முழுப் பொறுப்பாக இருப்பவர். அதற்குரிய தக்கக்காரணத்தைத் தெரிவிக்கக் கடமைப்பட்டவர். |
440. accountable relationship | பொறுப்புள்ளமைக்கான தொடர்பு செயல்களுக்கும் அவை எவ்வாறு பிறரைப் பாதிக்கின்ற என்பதற்கும் பொறுப்பு கோருவதற்கான செயற்பாங்கே பொறுப்புள்ளமைக்கான தொடர்பு. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply