சட்டச் சொற்கள் விளக்கம் 451-460 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 441-450 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 451-460
451. accreditation | மதிப்புச் சான்றளிப்பு குறிப்பிட்ட நிரல் அல்லது நிறுவனம், உரிய தரப்பாடுகளுக்குப் பொருந்தி வருகிறதா என மதிப்பிட்டுத் தரச் சான்றளிப்பது. தூதரைச் சான்றளித்து அனுப்புதல், அதிகாரப்பூர்வச் சான்றளிப்பு. ஒன்றின் தகுதியைக் குறிப்பதால் தகுதிக் குறியீடு என்றும் சொல்வர். |
452. accredited | ஏற்கப்பட்ட மதிப்பு ஏற்கப்பட்ட முறைப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட, பொதுஒப்புதல் பெற்ற எனவும் சொல்கின்றனர். எனினும் சுருக்கமாக ஏற்கப்பட்ட அல்லது மதிப்பேற்கப்பட்ட என்றே சொல்லலாம். |
453. accredited agent | ஏற்கப்பெற்ற முகவர் குறிப்பிட்ட பொருள்கள் அல்லது சேவைகளை வழங்குவதற்கு அதிகாரபூர்வமாகவும் பொதுவாகவும் ஏற்கப்பெற்ற முகவர். |
454. accretion | சேர்மானம்; சேர்க்கை வெள்ளப் பெருக்கு, ஆறு திசைமாறுதல் போன்ற இயற்கை நிகழ்ச்சிகளினால் மண்வளம் கூடிச் சேர்ந்த நில வள உயர்வு. சொத்து உயர்வு என்று சொல்கின்றனர். நில வள உயர்வால் சொத்துமதிப்பு உயர்ந்தாலும், அது பொருந்தி வரவில்லை. |
455. Accrual | சேர்வு கொடுப்பனவு, நன்மை முதலிய எதையாவது காலப்போக்கில் குவித்தல் அல்லது மிகுத்தல். |
456. accrual of interest | சேர்வு வட்டி கடனுக்காக அல்லது பிற நிதிச் செயற்பாட்டிற்காகக் கொடுக்கப்பட வேண்டிய ஆனால் கொடுக்கப்படாது சேர்ந்து வரும் வட்டி. பொதுவாகக் கணக்காண்டு இறுதியில், பத்திரங்கள் அல்லது கடன்களுக்கான வட்டி திரண்டு சேர்வதாகும். |
457. accrual of right | உரிமைச்சேர்வு அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட, ஏற்கப்பெற்ற, ஒப்புக்கொள்ளப்பட்ட செயலுக்கான உரிமைச் சேர்வு. |
458. accrual of right to sue | வழக்குத் தொடரும் உரிமைச்சேர்வு வழக்கு தொடுப்பதற்கான உரிமைச்சேர்வு வழக்கு தொடருவதற்கு உரிமை யுடையவர், உரிமையை அடைவதற்கு முன்னர் இறந்துவிட்டால், சட்டபூர்வமாகச் சார்பாளர் வழக்கு தொடுப்பதிலிருந்து காலம் கணக்கிடப்படும். |
459. accrual | வந்துறுகை (பெயர்ச்சொல்) சிறுகச் சிறுகத் தொகு, தொகை ஏற்றம் சேர்வுறுகை, அடைவுறு, சேர்ந்தடைவு |
450. accrue | சேர்ந்தடை (வினைச்சொல்) சிறுகச் சிறுகத் தொகு, சேர்வுறு, அடைவுறு, வந்துறு தனிப்பட்டவரின் அல்லது வணிகத்தின் வருவாய்,வட்டி, செலவைக் குறிக்கையில் திரண்டு அல்லது குவிந்து சேருவதைக் குறிக்கிறது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
பின் குறிப்பு: வ.எண் 456 முதல் 460 வரை தவறாகக் குறிக்கப்பட்டிருந்தன. திருத்தப்பட்டுள்ளன.
Leave a Reply