சட்டச் சொற்கள் விளக்கம் 461-470 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 451-460 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 461-470
461. accrue – உறு, சிறுகச் சிறுகத் தொகு
சேர்வுறு
அடைவுறு
சேர்ந்தடை
வந்துறு
உரிமையாகு
உறு என்னும் சொல்லுக்கே மேற்குறித்த பொருள்கள் உள்ளன. இருப்பினும் உறுதல் என்பதை இணைப்புச்சொல்லாகவே பயன்படுத்துகிறாேம்.
திரட்டல் மூலம் அல்லது காலப்போக்கில் அல்லது நிதிப் பரிமாற்றம் காரணமாகப் பொருள் நிலை உயர்வது.
திரட்டலுக்கு இரண்டு பொதுவான வரையறைகள் உள்ளன.
சேமிப்பிற்கான வட்டி, வருமானம் அல்லது செலவுகளின் குவிப்பு. சட்டமுறைக் காரணம் அல்லது சட்டமுறைக் கோரிக்கை நடைமுறைக்கு வரும்போது வரவு அல்லது செலவு குவிதல்
462. accrued – சேர்ந்தடைந்த
திரண்ட
ஒரு நிறுவனம் அல்லது தனியர் தம் வழக்கமான செயல்பாடுகள் மூலம் உருவாகும் ஆனால் இதுவரை செலுத்தப்படாத அல்லது பட்டியலிடப்படாத பணம் திரட்டப்பட்ட வருமானம் என்று குறிப்பிடப்படுகிறது.
இது திரட்டல் கணக்கியல் முறையைப் பயன்படுத்தி, வருவாயையும் செலவுகளையும் அவை நிகழும் சரியான தருணத்தில் உரிய நாளிட்டு இருப்புநிலைக் கணக்கில் சொத்தாகக் காட்டப்படுவது.
463. accrued income – திரள் வருமானம்
சேர்ந்தடை வருமானம்
திரட்டப்பட்ட வருமானம்
திரண்டு சேர்ந்த வருமானம்
திரள் வருமானம் என்பது ஒரு நிறுவனம் இயல்பான வணிகப் போக்கில் சம்பாதித்த பணமாகும். ஆனால் இன்னும் பெறப்படாத அதற்கான பணப்பட்டியல் வாடிக்கையாளருக்கு அளிக்கப்படாத பணமாகும்.
மாற்றுப் பகிர் நிதியம்(Mutual fund) அல்லது பிற சொத்துகள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வருமானத்தைக் குவிக்கும். வருமானம் வர, வர அளிக்காமல், பங்குதாரர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே செலுத்தும்-வரையறைக்குட்பட்டு அவர்களுக்கு வருமானத்தை அளிக்கிறது.
இவ்வாறு ஈட்டப்பட்டும் பெறப்படாத வருமானமே திரள் வருமானமாகும்.
464. accrued interest – திரள் வட்டி
சேர்ந்தடைந்த வட்டி
திரட்டப்பட்ட வட்டி
கணக்கியலில், திரள் வட்டி / திரட்டப்பட்ட வட்டி என்பது ஒரு குறிப்பிட்ட நாளில், கடன் அல்லது பிற நிதிக் கடமைகளில் செலுத்தப்பட்ட வட்டியின் அளவைக் குறிக்கிறது. திரள் வட்டி / திரட்டப்பட்ட வட்டி கடன் வழங்குபவருக்கு வருவாயாகவோ கடன் வாங்குபவருக்குச் செலவாகவோ இருக்கலாம்.
465. accrued of arises – திரள் மிகுதி
வந்தடைகிற மிகுதி
சட்டமுறைப்படி, செயல்படுத்தக்கூடிய உரிமைகோரலாக நடைமுறைக்கு வருதல்.
இயற்கையான வளர்ச்சி, அதிகரிப்பு அல்லது நன்மையாக மிகுந்து வருதல்.
arise என்பதை நேர் பொருளாக எழுதல் என்றோ தோன்றுதல் என்றோ குறிப்பிடாமல் மிகுதல் என்றே குறித்தல் வேண்டும்.
466. accrued right – திரள் உரிமைகள்
திரட்டப்பட்ட உரிமைகள்
தொழில்சார் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓர் உறுப்பினருக்கு உரிமையுள்ள நன்மைகள், அத்தகைய உரிமைகளில் ஏற்கெனவே பெறப்பட்ட ஓய்வூதியத் தொகைகள், ஒரு குறிப்பிட்ட ஓய்வூதிய அகவையின் அடிப்படையில் இதுவரை கட்டமைக்கப்பட்ட ஓய்வூதிய சேவை ஆகியவை அடங்கும்.
467. accruing – திரளும்
சேர்ந்தடையும்
ஆதாயமோ பங்கோ உடனுக்குடன் வழங்கப்படா நிலையில் திரண்டு சேர்வது.
468. Accumulated profit – திரள் ஆதாயம்
குவிந்த ஆதாயம்
உறுபயன்
ஆதாயத் தொகை உரியவருக்கு வழங்கப்படாமல் திரண்டு சேரும் நிலை.
469. accumulative sentence தொடர் தண்டனை
அடுத்தடுத்த தண்டனை அல்லது தொடர் தண்டனை என்பது முந்தைய தண்டனை முடியும் வரை செயற்படத் தொடங்காத ஒன்றாகும். உடன்நிகழ்வாகத் துயக்க வேண்டிய தண்டனைபோலன்றி, ஒன்றுக்கு அடுத்து மற்றொன்றாகத் தொடர்ந்து துய்க்க வேண்டிய தண்டனையாகும்.
470. accumulation – குவிப்பு
அறிவோ பொருளோ பணமோ வேறு எதுவோ குவிக்கப்படுவது.
காலப்போக்கில் படிப்படியாக இணைந்து சேர்வது குவியலாகிறது.
குவியல் என்னும் பொருள்கொண்ட இலத்தீன் சொல்லில் இருந்து இச்சொல் உருவானது.
வங்கியில் சேமிப்பைச் செலுத்திக் கொண்டிருந்தால் சேமிப்பு திரட்சியாகும். அவற்றுக்கான வட்டியும் எடுக்கப்படாமல் திரள்வதால், திரள் வட்டியாகிறது
குறிப்பு:
ஆங்கில அகராதிகளில் accrue என்பதன் வினை வடிவங்களுக்குத் தனித்தனியே பொருள் தரப்படுவதால் இங்கேயும் அவ்வாறே தரப்பட்டுள்ளது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply