சட்டச் சொற்கள் விளக்கம் 471-480 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 461-470 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 471-480
471. Accumulative judgement | திரள் தீர்ப்பு கூடுதல் தீர்ப்பு மற்றொரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் தீர்ப்பு. முதல் தீர்ப்பின்படியான தண்டனை முடியும் வரை இரண்டாம் தீர்ப்பு செயலாக்கம் ஒத்திவைக்கப்படும். ஒரு வழக்கில் இரண்டு அல்லது மேற்பட்ட வெவ்வேறு குற்றச்செயல்களைப் புரிந்ததற்காக விதிக்கப்பெறும் தனித்தனி இரண்டு தண்டனைகள் ஒன்றன்பின் ஒன்றாகச் செயற்படும் என்று தீர்ப்பு வழங்கல். தொடரியல் தீர்ப்பு என்கின்றனர். தொடர் என்பதை அறிவியல் போன்று தொடரியல் என்பது பொருந்தாது. திரண்டு வருவதுபோல் அடுத்தடுத்து அளிக்கப்படுவதைத் திரள் தீர்ப்பு என்கிறோம். |
472. Accumulative legacy | திரள் விருப்பாவணக்கொடை விருப்புறுதி வழியே நன்கொடையாக அளிக்கப்படும் அசையும் சொத்து அடுத்தடுத்துச் சேருவது. |
473. accumulate | குவி சேர் திரட்டு காண்க: accumalation-குவிப்பு |
474. accumulation of income | வருவாய்க் குவிப்பு திரள் வருவாய் ஒரு நிறுவனத்தால் தன் முதன்மைச் செயல்பாடுகளில் மறுமுதலீடு செய்ய அல்லது மூலதனச் செலவினங்களில் முதலீடு செய்ய இருத்தி வைத்துக் கொள்வதற்காகத் திரட்டப்படும் தொகை திரள் வருவாய் எனப்படுகிறது. நிறுவனத்தின் ஐந்தொகையில்(balance sheet) பங்குதாரரின் பங்கு முதலீட்டின் கீழ் வரவு வைக்கப்படுவதாகும். பெரும்பாலும் தக்க வைக்கப்பட்ட வருவாய் எனக் குறிக்கப் பெறுகிறது. |
475. accumulation rule | திரள் விதி சிறு சிறு முயற்சிகளின் திரட்சியே பெருவினை என்பதே திரள் விதியாகும். எனவேதான் சிறு சேமிப்புகள் திரண்டு குவியும் பொழுது பெருஞ்செல்வமாகிறது. |
476. Accumulative | திரள்நிலை சேர்த்துவை மறு ஈடு (மறுமுதலீடு) சிறுகச் சிறுகச் சேர்ந்து திரண்டு உருவாகும் நிதி. ஒரு நிதியம் மூலம் உருவாகும் வருவாயை மீண்டும் அதே நிதியத்தில் மறு முதலீடு செய்வது. மறு முதலீடு என்பதைச் சுருக்கமாக மறு ஈடு எனலாம். |
477. accumulative sentence | தொடர் தண்டனை ஒரு வழக்கில் ஒரு குற்றத்திற்காக முதல் தண்டனை வழங்கப்பெற்றவருக்கு அதே வழக்கில், மற்றொரு குற்றத்திற்காக இரண்டாம் தண்டனையும் விதிக்கப்படுகிறது என்றால், இரண்டு தண்டனைகளும் ஒரு சேர அளிக்கப்படாமல், முதல் தண்டனை முடிந்த உடன் இரண்டாம் தண்டனை தொடரும் எனத் தீர்ப்புரையில் வழங்கப்படுவதே தொடர் தண்டனை. தொடரியல் தண்டனை எனப் பொதுவாகக் குறிப்பிடுகின்றனர். தொடரியல் என்பது அறிவியல், பொறியியல், பொருளியல், சட்ட இயல் போன்று அறிவுத் துறையைக் குறிக்கும். திரள் என்பதைத் தண்டனைக்குக் கூறுவது பொருந்தாது. எனவே, திரள் தண்டனையும் ஏற்றதாகாது. எனவே, தொடர்ச்சியாகத் துய்க்கப்படும் வகையில் அளிக்கப்படும் தண்டனையைத் தொடர் தண்டனை என்பதே சரியாக இருக்கும். இதற்கு மாறாக ஒரே காலத்தில் தண்டனையைத் துய்க்குமாறு அளிக்கப்படுவது concurrent sentence – ஒருங்கு தண்டனை. |
478. Accumulator | சட்ட ஏடு குவிப்பவர், திரட்டுபவர், பணம் பெருக்குபவர், அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர், மின் சேமகலம், மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி எனப் பல பொருள்கள் உள்ள சொல். இதனைச்சட்டத்துறையில் மின் சேமக்கலம் என்பது பொருந்தாது. சட்டப்படியான பதிவுகளை மேற்கொள்வதற்கான பொதுக் குறிப்பேட்டைக் குறிக்கிறது. சட்டப் பொதுக் குறிப்பேடு என்பதன் சுருக்கமாகச் சட்ட ஏடு எனலாம். |
479. accuracy | துல்லியம் நோக்கு மதிப்பிற்கும்(observed value) ஏற்புக் குறிப்பு மதிப்பிற்கும்(accepted reference value) இடையிலான ஒப்பந்தப் படிநிலை அளவைத்(degree of agreement) துல்லியம் குறிக்கிறது. |
480. accurate | துல்லியமான காண்க: accuracy- துல்லியம் |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply